Breaking News

இஸ்லாமியத் தமிழ் இதழியல் வரலாறு

நிர்வாகி
0
இஸ்லாமியத் தமிழ் இதழியல் வரலாறு

பேராசிரியர் மு.இ. அகமது மரைக்காயர்

முன்னுரை

புதிய தகவல் தொடர்பு ஊடகங்கள் பல முகிழ்த்துப் பரவலாகி விட்ட நிலையிலும் இதழ் தனது செல்வாக்குக் குறையாமல் இன்னமும் ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பல தளங்களில் கிளைத்துப் பரவியிருக்கும் தமிழ் இதழ்த் துறையின் தொடக்கம் சமயம் சார்ந்தே அமைந்திருந்தது. இன்றும் பல்வேறு சமயச் சார்பு இதழ்கள் தமிழில் வெளிவந்து கொண்டிருப்பது அறியத்தக்கது. ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை உடைய இஸ்லாமியத் தமிழ் இதழ் வளர்ச்சிப் போக்கில் பல இதழ்கள் தமது பயணத்தைத் தொடர முடியாமல் குறைந்த காலத்திலேயே மறைந்து விட்டன. ஆயின் ஒரு சில இதழ்கள் உருத்தும் தடைகளை உடைத்துப் பல்லாண்டுக் காலம் எழுச்சியுடன் இயங்கின; இயங்கிக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமியக் கொள்கைகளையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் எடுத்துரைக்கும் வகையில், முஸ்லிம் சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டதாக, முஸ்லிம் வாசகர்களை முன்னிறுத்தி அமைந்த இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் நிகழ்ந்த சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை அறியச் செய்யும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

முதல் இஸ்லாமியத் தமிழ் இதழ்

1869 –ஆம் ஆண்டில் துவான் பாபா யூனூசு என்பவரால் வெளியிடப் பெற்ற அலாமத் லங்காபுரி என்ற இதழையே முஸ்லிம்களால் நடத்தப் பெற்ற தமிழ் இதழ்களுள் காலத்தால் முந்தியதாக அறிய முடிகிறது. அரபுத் தமிழில் கையெழுத்து இதழாக வெளிவந்த இவ்விதழ், இஸ்லாமியக் கொள்கைகளை அறியச் செய்யும் நோக்கில் இயங்கிய தாக அறிய இயலவில்லை. எனவே இதனையும் 1875 –இல் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த சிங்கை வர்த்தமானியையும், 1876- இல் இலங்கையிலிருந்து வெளிவந்த புதினா லங்காரியையும், 1878- இல் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தங்கை நேசனையும் இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் என்று கூற இயலவில்லை. இந்நிலையில் 1882-ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 21- ஆம் நாள் இலங்கையிலுள்ள கண்டி யிலிருந்து தொடங்கப் பெற்ற முஸ்லிம் நேசன் என்ற இதழ் இஸ்லாமியத் தமிழ் இதழ் என்ற வரைவு இலக்கணத்திற்கு இயைய அமைந்திருப்பதால் இவ்விதழையே முதல் இஸ்லாமியத் தமிழ் இதழ் என்று குறிப்பிட இயல்கிறது.

முஸ்லிம் நேசன் இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் முதலாவதாக மட்டும் அமையாது முதன்மையானதாகவும் திகழ்ந்துள்ளது. தமிழ்ப் புதின வரலாற்றில் இரண்டாவதாகவும், தமிழ்த் தொடர்கதை வரலாற்றில் முதலாவதாகவும் விளங்குகின்ற ‘அசன்பே சரித்திரம்’ என்னும் புதினத்தைப் படைத்த சித்தி லெப்பை முகம்மது காசிம் மரைக்காயரே முஸ்லிம் நேசனின் ஆசிரியர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழ்நாட்டின் முதல் இதழ்கள்

முஸ்லிம் நேசனைத் தொடர்ந்து சில இதழ்கள் வெளிநாட்டிலிருந்து வெளிவந்துள்ளன. 1883 –இல் குலாம் காதிறு நாவலரை ஆசிரியராகக் கொண்டு வித்தியா விசாரிணி என்னும் இதழ் பினாங்கிலிருந்து வெளி வந்துள்ளது. அ.லெ.கா. முகிய்யித்தீனை ஆசிரியராகக் கொண்டு 1886 –இல் சர்வ ஜன நேசன் என்னும் இதழ் கொழும்பிலிருந்து வெளி வந்துள்ளது. 1887 –ஆம் ஆண்டில் அ.மு. மரைக்காயரை ஆசிரியராகக் கொண்டு உலகநேசன் என்னும் இதழ் பினாங்கிலிருந்தும் அதே ஆண்டில் சி.கு. மகுதூம் சாயபுவை ஆசிரியராகக் கொண்டு சிங்கை நேசன் என்ற இதழ் சிங்கப்பூரிலிருந்தும் வெளிவந்துள்ளன.

1888 –ஆம் ஆண்டில் தான் தமிழ்நாட்டில் இஸ்லாமியத் தமிழ் இதழ்கள் தோற்றம் பெற்றுள்ளன. அவ்வாண்டில் முஹம்மது யூசுபை ஆசிரியராகக் கொண்டு சம்சுல் ஈமான் என்ற திங்கள் இதழ் சென்னை யிலிருந்தும், காசிம் முகைதீன் இராவுத்தரை ஆசிரியராகக் கொண்டு முகமது சமதானி என்ற கிழமை இதழ் காரைக்காலிலிருந்தும், குலாம் காதிறு நாவலரை ஆசிரியராகக் கொண்டு வித்தியா விசாரிணி என்ற கிழமை இதழ் நாகூரிலிருந்தும் வெளிவந்துள்ளன.

முதல் நாளிதழ்

1893- ஆம் ஆண்டு இலங்கையில் மு.அ. சாகிபு மரைக்காயரால் திங்கள் இருமுறை இதழாகத் தொடங்கப் பெற்ற இஸ்லாம் மித்திரன் 1897 ஜூலைத் திங்கள் 20- ஆம் நாளிலிருந்து நாளிதழாக 1906 –ஆம் ஆண்டு வரை நடத்தப் பெற்றது. எனவே இஸ்லாம் மித்திரனே இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் முதல் நாளிதழாக விளங்கு கிறது. இவ்விதழின் ஆசிரியராகிய உதுமான் முஸ்லிம் நேசன் இதழிலும் எட்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் என்பது சுட்டத்தக்கது.

முதல் கிழமை மும்முறை இதழ்

1897- இலிருந்து நாளிதழாக நடைபெற்ற இஸ்லாம் மித்திரன் 1906 –இல் கிழமை மும்முறை இதழாக வெளிவந்தது. இதுவே முதல் கிழமை மும்முறை இதழாகும். இவ்விதழ் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் வெளிவந்தது. இஸ்லாமியத் தமிழ் வரலாற்றில் இஸ்லாம் மித்திரனைத் தவிர வேறு எவ்விதழும் கிழமை மும்முறை இடைவெளியில் நடைபெறவில்லை என்பது சுட்டத்தக்கது.

முதல் கிழமை இருமுறை இதழ்

1915 –ஆம் ஆண்டில் கிழமை இருமுறை என வெளிவந்த இஸ்லாம் மித்திரனே இப்பருவ வகையில் அமைந்த முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாக அமைகிறது. இவ்விதழ் புதன், சனி ஆகிய இரு நாள்களில் வெளிவந்தது. இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் இவ்விதழ் மட்டுமே கிழமை இருமுறை இடைவெளியில் வந்த ஒரே இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் கிழமை இதழ்

முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாகிய முஸ்லிம் நேசன் கிழமை இடைவெளியில் நடைபெற்றுள்ளது. எனவே 1883 – ஆம் ஆண்டில் வெளிவந்த இவ்விதழே முதல் கிழமை இதழ் என்பது உறுதியாகிறது. இவ்விதழ் திங்கட்கிழமை தோறும் வெளிவந்தது.

முதல் திங்கள் இருமுறை இதழ்

நாள், கிழமை மும்முறை, கிழமை இருமுறை ஆகிய பருவ இதழ் களின் வரலாற்றில் முதலாவதாக வெளிவந்த சிறப்பினைப் பெற்றுள்ள இஸ்லாம் மித்திரன் 1893 –இல் தொடங்கப் பெற்ற போது திங்கள் இருமுறை இதழாகவே வெளிவந்தது. இவ்விதழுக்கு முன்னர் வேறு எவ்விதழும் திங்கள் இருமுறை இடைவெளியில் வெளிவராததால் இஸ்லாம் மித்திரனே இஸ்லாமியத் தமிழ் இதழ்களில் முதலாவதாகத் தோற்றம் பெற்ற திங்கள் இருமுறை இதழ் எனத் துணியலாம்.

முதல் திங்கள் இதழ்

இதுவரை வெளிவந்துள்ள இஸ்லாமியத் தமிழ் இதழ்களுள் திங்கள் இடைவெளியில் வந்த இதழ்களே மிகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் 1888 –ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப் பெற்ற சம்சுல் ஈமான் என்ற இதழ் முதல் திங்கள் இதழாகத் திகழ்கிறது.

முதல் இரு திங்கள் இதழ்

காதியானிக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்த ஹிபாஜத்துல் இஸ்லாம் 1930 –இல் தொடங்கப் பெற்ற போது திங்கள் இதழாக வெளி வந்தது. 1937 –இல் இரு திங்கள் என மாறியது. அதற்கு முன்னர் இரு திங்கள் இடைவெளியில் இதழ் எதுவும் வெளிவந்ததாக அறிய இயல வில்லை. எனவே ஹிபாஜத்துல் இஸ்லாம் இதழே இப்பருவ வகையில் தோன்றிய முதல் இதழ் என்பது வெளிப்படை.

முதல் காலாண்டு இதழ்

1911 ஜூலை இஸ்லாம் நேசன் இதழ்த் தலையங்கத்தில் “இஸ்லாம் நேசன் 1909 வருடம் செப்டம்பர் மாதத்தில் தொடங்கிற்று. அம்மாதத் திலிருந்து 1910 வருடம் ஜூன் மாதம் முடிய மட்டும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை விகிதம் நான்கு பத்திரிகைகளே வெளிவந்தன… மாதாந்திரப் பத்திரிகையின் முதல் சஞ்சிகை 1910 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாயிற்று” என்ற குறிப்பு காணப் பெறுகிறது. இவ்விதழுக்கு முன் வேறு இதழ் எதுவும் காலாண்டு இடைவெளியில் வெளிவரவில்லை. எனவே இஸ்லாம் நேசனே இவ்வகையில் அமைந்த முதல் இதழாக விளங்குகிறது. இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் சமுதாயம், இஸ்லாமியச் சிந்தனை, நிதாவுல் இஸ்லாம், அல் ஜம் இய்யத், செளத்துல் உலமா, அல்ஹுதா, நமது முற்றம் ஆகிய மேலும் ஏழு இதழ்களும் காலாண்டு இதழ்களாக வெளிவந்துள்ளதை அறிய முடிகிறது.


முதல் அரையாண்டிதழ்

சிங்கப்பூர் வக்ஃப் வாரிய இதழாகிய செய்திச்சுடர் 1991- ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப் பெற்று ஆறு திங்களுக்கொரு முறை வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுவே அரையாண்டு இடைவெளியில் நடைபெறும் முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாகவும் இவ்வகையிலமைந்த ஒரே இதழாகவும் விளங்குகிறது.

முதல் எதிர் இதழ்

ஓர் இதழின் கருத்துக்களை மறுத்துரைப்பதற்காகவே சில பக்கங்களை ஒதுக்கிய இதழ்களையும் இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் காணமுடிகிறது. இவ்வகை இதழ்களை எதிர் இதழ்கள் எனலாம்.

முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாகிய முஸ்லிம் நேசன் சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த மூடப்பழக்க வழக்கங் களையும் இஸ்லாத்திற்கு முரணான கருத்துகளையும் மக்களுக்கு உணர்த்தி அவற்றைக் களைகின்ற பணியினைச் செய்தது.

முஸ்லிம் நேசன் தோன்றி மூன்றாண்டுகளுக்குப் பின்னர்த் தொடங்கப் பெற்ற சர்வஜன நேசன் அவ்விதழின் கருத்துக்களை மறுத்து எழுதி வந்தது. முஸ்லிம் நேசனும் உடனுக்குடன் தகுந்த பதிலளித்து வந்தது. ஒன்றனது கருத்தை மற்றொன்று மறுக்கின்ற எதிர்மைப் போக்கு இவ்விரு இதழ்களிலிருந்தே தொடங்குகின்ற தெனலாம்.

திருக்குறளை முகப்பில் இடம் பெறச் செய்த முதல் இதழ்


‘தமிழ் இதழ்களின் முகப்பில் திருக்குறள்’ என்ற கட்டுரையை எழுதிய வீ. கோபால், 1897- இல் வெளிவந்த ஞான போதினி என்ற இதழை முகப்பில் திருக்குறளை இடம் பெறச் செய்த முதல் இதழ் என்கிறார் (’வள்ளுவம்’ இதழ் மே, ஜூன் 1999, ப. 68). ஆயின் இவ்விதழ் வெளிவருவதற்குப் பதினோராண்டுகளுக்கு முன்னரே, அஃதாவது 1886- ஆம் ஆண்டிலேயே சர்வஜன நேசனில் திருக்குறள் இடம் பெற்றுள்ளதால் இவ்விதழே திருக்குறளை முகப்பில் வெளியிட்ட முதல் இதழ் என்று துணிந்து கூறலாம்.

இவ்விதழின் முகப்புப் பக்கத்தில்,

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்

காழி யெனப்படு வார்”

என்னும் குறள் இடம் பெற்றுள்ளது. இது தமிழ் இதழியலில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தகவல் என்பது ஈண்டுச் சுட்டிச் சொல்லத் தக்க செய்தியாகும். அது மட்டுமல்லாது, 1887- ஆம் ஆண்டில் வெளிவந்த சிங்கை நேசனில்,

“தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு.”

என்ற திருக்குறள் காணப் பெறுவதால், திருக்குறளை முகப்பில் வெளியிட்ட இரண்டாவது இதழ் என்ற பெருமையைச் சிங்கை நேசன் பெறுகிறது. அதற்கு அடுத்த நிலையிலேயே வீ. கோபால் குறிப்பிடும் ஞான போதினி அமைகிறது.

பெண் ஆசிரியர் பொறுப்பேற்ற முதல் இதழ்

இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றில் தொடக்கம் முதல் இன்று வரை ரமீஜா, அனீஸ் பாத்திமா, ஆயிஷா பீவி, அலீமா ஜவகர், பானு நூர் மைதீன் ஆகிய பெண்டிர் ஐவர் மட்டுமே இதழாசிரியராகப் பொறுப் பேற்றுள்ளமையை அறிய முடிகிறது. இவர்களுள் 1961- இல் முஸ்லிம் முரசின் ஆசிரியர் பொறுப்பேற்ற ரமீஜா, முதல் பெண் ஆசிரியர் என்னும் பெருமையைப் பெறுகிறார். முஸ்லிம் முரசு, பெண் ஒருவர் ஆசிரியர் பொறுப்பேற்ற முதல் இதழ் என்ற சிறப்பைப் பெறுகிறது.

முதல் மகளிர் இதழ்

பெண்களுக்கான அறிவுரைகள், மருத்துவச் செய்திகள், சமையல் குறிப்புகள் ஆகியவற்றுடன் இஸ்லாமியக் கருத்துக்களைத் தாங்கித் தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கும் இதழான நர்கிஸ் 1972- இல் திருச்சியில் தொடங்கப் பெற்றது. இவ்விதழே முதல் மகளிர் இதழாக விளங்குகிறது.

முதல் ஆய்விதழ்

இலங்கையிலுள்ள நளீமிய்யா இஸ்லாமிய்யா வெளியீட்டுப் பணியகத்தின் சார்பில் 1979- ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற இதழ் இஸ்லாமியச் சிந்தனை. இவ்விதழில் இடம் பெறும் கட்டுரைகள் அடிக் குறிப்புகளுடனும் துணைநூற்பட்டியலுடனும் ஆய்வுப் போக்கில் அமைந்திருக்கின்றன. இவ்வகையிலான இதழ் வேறு எதுவும் இதுவரை வெளிவராததால் இதுவே முதல் ஆய்விதழாகவும் ஒரே ஆய்விதழாகவும் தனித்துத் திகழ்கிறது.

பிற சமயத்தவரையும் கருத்திற் கொண்ட முதல் இதழ்

இஸ்லாத்தை அனைத்துத் துறைகளிலும் நிலை நாட்டும் நோக்கத்துடன் முஸ்லிம் அல்லாத பிற சமயத்தாரிடம் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வகையில் தொடங்கப் பெற்ற முதல் இதழாகச் சமரசம் திகழ்கிறது. இவ்விதழ் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் சார்பில் 1980- ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 15- ஆம் நாள் தொடங்கப் பெற்று இன்று வரை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா 2006- ஆம் ஆண்டில் சிறந்த பக்தி இதழாகச் சமரசத்தைத் தேர்ந்தெடுத்துள்ளமை (ஆனந்த விகடன், 03.01.07) இவ்விதழின் சிறப்பை உணர்த்தும்.

முனைவர் பட்ட இதழியல் ஆய்வு மேற்கொள்ளப் பெற்ற முதல் இதழ்
மிகுதியாக இல்லையெனினும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவிலாது பிற தமிழ் இதழ்கள் இதழியல் ஆய்வுக்கு உட்படுத்தப் பெற்றிருக்க, இஸ்லாமியத் தமிழ் இதழ் எதுவும் அவ்வகை ஆய்விற்கு மேற்கொள்ளப் பெறா நிலையில் பேரா. மு.இ. அகமது மரைக்காயர் “சமரசம் இதழின் கருத்தியல் நிறுவல் உத்திகள்” என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். எனவே இதழியல் நோக்கில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளப் பெற்ற முதல் இஸ்லாமியத் தமிழ் இதழாக சமரசம் விளங்குகிறது.

முடிவுரை

இஸ்லாமியத் தமிழ் இதழ் வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் சில கண்டறியப் பெற்று இக்கட்டுரையில் சுட்டப் பெற்றுள்ளன. இலக்கிய ஆய்வுகளில் ஆர்வம் மிகக் கொண்டுள்ள ஆய்வாளர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பரப்பினை உடைய இஸ்லாமியத் தமிழ் இதழியலில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினால் சமயம், சமுதாயம் மட்டுமல்லாது இலக்கியம் தொடர்பான அரிய உண்மைகள் பலவற்றைக் கண்டறிய இயலும் என்பதில் ஐயமில்லை.

நன்றி : சமரசம், ஜனவரி 16 – 31 , 2009
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=290

Tags: வரலாறு

Share this