Breaking News

பைத்தியம் பிடித்தவனை போல தனது முஸ்லிம், இஸ்லாம் விரோத விஷத்தை கக்கியிருக்கிறார் கல்யாண ராமன் பேச்சுக்கு கடும் கண்டனம் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அறிக்கை!

நிர்வாகி
0

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் சென்னை, பிப் 01-

உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தை களைப் பயன்படுத்திப் பேசியுள்ளார் என்னும் செய்தி காட்டுத் தீ போல் தமிழகம் எங்கும் பரவியிருக்கிறது.

அந்த பா.ஜ.க. நபர் பேசியதைக் கண்டித்தும், அந்த நபரை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்யும் படியும் கோரி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரிலும், நகரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மானிட சமுதாயத்தை வாழ்விக்கத் தோன்றிய மகா புருஷர் என்று அறிவுலகம் போற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் கல்யாணராமன் என்னும் நபர் பைத்தியம் பிடித்தவனைப் போல தனது முஸ்லிம் விரோத இஸ்லாம் விரோத விஷத்தை கக்கியிருக்கிறார்.

தமிழகத்தில் நடை பெறவுள்ள தேர்தலை முன்வைத்து, தமிழக மக்களை மத ரீதியாக வேறுபடுத்தி, மோதவிட்டு, இலாபம் தேடாலம் என்ற நட்பாசையில் பா.ஜ.க. நபர் பேசி இருக்கிறார்! உயிரினும் மேலாக முஸ்லிம் உலகம் போற்றும் - அறிவுலகம் ஏற்றும் நபியவர்களை நாகூசும் வார்த்தைகளால் ஏசியிருக்கிறார்.

பா.ஜ.க.வின் தலைமையில் உள்ளவர்கள் இதுபோன்ற அத்து மீறிய வார்த்தைப் பிரயோகங்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்றறிவோம். மதவெறியைக் கிளறும் எவரையும் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்களை ஒதுக்கி, ஓரங்கட்டி விடுவதே அந்தக் கட்சிக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

தமிழக அரசில் உள்ளவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருப்பதால், அக்கட்சியில் உள்ளவர்கள் நாகூhமல் பேசுவதை அனுமதிக்க மாட்டார்கள் என நம்புகிறோம். இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதுடன், இத்தகையவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவு களின் கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள கொதிப்பும் கொந்தளிப்பும் இயல்பானது. தமிழக முஸ்லிம்கள் தங்களின் உணர்ச்சிகளை சட்ட ரீதியாக, அறவழியில், ஜனநாயக முறையில் வெளிப்படுத்தி, மதவெறியைத் தூண்டுவோரைக் கைது செய்யும்படி நியாயமாகக் கோரியிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டுள்ள தமிழக அரசு உரிய முறையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பண்பட்ட தமிழகத்தை, அரசியல் தேர்தல் விளையாட்டுக்காக, புண்பட்ட தமிழகம் ஆக்கிவிடாமல் அனைவரும் பாதுகாப்போம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Tags: செய்திகள்

Share this