Breaking News

சுதந்திர தின அணிவகுப்பு விழா

நிர்வாகி
0
கும்பகோணம், ஆக. 15: சிறுபான்மையினரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியாவின் சேர்மன் ஈ.எம். அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

இந்த அமைப்பின் சார்பில், தமிழகத்தில் 2-வது ஆண்டாக சுதந்திர தின அணிவகுப்பு விழா மற்றும் கூட்டம் கும்பகோணத்தில் ஷஹீத் திப்பு சுல்தான் நகரில் உள்ள தாராசுரம் மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சேர்மன் அப்துர்ரஹ்மான் பேசியது:

இந்த அமைப்பு கட்டுப்பாட்டுடன் கூடிய இளைஞர்கள் கொண்ட அமைப்பு. கடந்த ஆண்டு மதுரையில் பல தடைகளைக் கடந்து, சுதந்திரத் தின அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விடுதலைக்காக தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் வகையில், நடைபெறும் இந்த அணிவகுப்புக்கு தற்போது பல தடங்கல்கள் ஏற்பட்டன. அதையும் முறியடித்து இங்கு நடத்தப்படுகிறது. மக்களைப் பிளந்து துண்டாட நினைக்கும் சக்திகளை எச்சரிக்கவே நடைபெறுகிறது. சுதந்திர தினத்தை கொண்டாடுவது, ஒவ்வொரு குடிமகனின் பிறப்புரிமை. புதிய பாதையில், புதிய இந்தியாவை முழு சக்தியோடு உருவாக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதே சோஷியல் டெமாக்கிரேட்டிவ் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சியாகும். கடந்த 21-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்புடன் கூடிய இக்கட்சி நான்கு குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.

பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலைப் பெற்று சுதந்திரத் தினத்தை கொண்டாட வேண்டும். சமநீதி அனைத்து மதத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என்றார். இந்த அமைப்பின் வீரர்கள் சுமார் ஆயிரம் பேர் அவர்களுக்குரிய தனி சீருடைகளை அணிந்து 22 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக வந்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். பேண்ட் வாத்தியக் கலைஞர்கள் தேசிய கீதம் வாசிக்க, மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் சுதந்திர தின உறுதி மொழியை வாசிக்க மற்றவர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

மாநிலத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் பக்ரூதீன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்குமார், நெல்லை மாவட்ட ஜமாதுல் உலமா தலைவர் சலாஹூத் தீன்ரியாஜி, பொருளாளர் தெஹ்லான்பாகவி, முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், மாநில துணைத் தலைவர் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சுதந்திர போராட்டத் தியாகிகள் ஆறுமுகம், சீனிவாச ராஜா, சண்முகம் பிள்ளை, பஞ்சநாதன், கோவிந்தராஜூலு ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்திக் நன்றி கூறினார்.

Tags: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

Share this