நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரி : யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று அழகிய நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரியாக மாறுகிறது.
தனக்காகவும், தன் வாரிசுகளுக்காகவும், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை தன் கணக்கில் சேர்க்கும் தலைவர்களை நெடுங்காலமாக உலகம் கண்டு வருகிறது. ஆனால், வறுமைகளை மட்டுமே செழுமையாகக் கண்ட, முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு, நீதமான ஆட்சியின் புதிய அத்தியாயத்திற்கு அடித்தளமாக மாறியதை ஆச்சரியக்கண்களால் பார்த்து வியக்கிறது உலகம்.
ஆடம்பரம், எளிமையற்ற, இரக்கமற்ற வாழ்க்கையாக இல்லாமல் பொதுநலம், எளிமை, அடக்கமென்று அழகிய நபி (ஸல்) அவர்களின் ஆட்சி, பல ஆட்சியாளர்களுக்கு முகவரியாக மாறுகிறது.
நேர்மையான ஆட்சி
நேர்மையாகவும், நேர்த்தியாகவும் ஆட்சி, அதிகாரங்களைக் கொண்டு மக்களுக்கு சேவைகள் செய்வதையே இறைவன் விரும்புகிறான். சேவைகள் செய்வதற்கே உங்களுக்கு ஆட்சிகள் தரப்படுவதாக இஸ்லாம் கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரங்களை மக்களுக்கு எதிரான அம்பாக மாற்ற இஸ்லாம் விரும்பவில்லை. இஸ்லாம் கூறக்கூடிய ஆட்சி, அதிகாரம் பூக்களில் நடக்கும் பூனை நடை அல்ல. மாறாக இரு பக்கம் கூர் முனையுள்ள கத்தி மேல் நடக்கும் விஷப் பரிட்சை. இதில் சிறிதேனும் தவறு ஏற்பட்டால், நாளை மறுமையில் விசாரணையின் போது முழு விளக்கம் கொடுக்க நேரிடும் என்பதால் பொறுப்புகளைச் சரியாக நிர்வகிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவருக்கும் (அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: ஆட்சித்தலைவரும் பொறுப்பாளரே. அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத்தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி).
‘மக்கள் நலன்களை கவனத்தில் கொண்டால், சுவனம் செல்லும் பாதையை இலகுவாகக் கடந்து விடலாம்’ என்பதை மேலுள்ள நபிமொழி குறிப்பிட்டுக் காட்டுகிறது.
சொல்வதும், அதன் படி நடத்தலும் சமமான பாதையில் செல்வது மிக அரிது. ஆனால் நபி (ஸல்) அவர்களின் கூற்றும், அதன்படி நடத்தலும் ரெயில் பாதையைப் போன்று அவர்களின் வாழ்வு முழுவதும் சமமான நிலையில் பயணித்தது என்பதே உண்மை.
மத, இன, மொழி, நிற, குல, தேச பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் பொதுவான ஆட்சியாக நபியின் ஆட்சி, அதிகாரம் அமைந்திருந்தது.
பணிவான அரசர்
பலவகையான கனிகள் பல நாட்டு உணவு வகைகளென்று, உணவுகளை அடுக்கி வைத்துச் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து, சாப்பிடுவது மன்னர்களின் பெருமைகளைப் பறைசாற்றும் முறைகளாகப் பார்க்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட முறைகளுக்கு நேர் எதிர்த்திசையில், அரசனாக இருந்தாலும், இறைவனின் அடிமை என்பதை உணர்ந்து தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் கொண்டதாக நபி (ஸல்) அவர்களின் உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தது. நபியவர்களின் எளிமை, கர்வம் என்ற சொல்லிற்குச் சாட்டை அடியாக விழுந்தது.
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவை சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்’ என்று நபியவர்களின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.
பொதுப்பணத்தை பாதுகாத்தல்
நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் மக்களின் வரிப்பணம் கவனமாய் பாதுகாக்கப்பட்டு, மக்களின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தனக்காகவோ அல்லது தனது குடும்பத்தார்களுக்கோ எப்போதும் நபி (ஸல்) அவர்கள் மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தியது கிடையாதென்பதை பல நிகழ்வுகள், நம்மைத் தீர்க்கமான முடிவுகளின் பக்கம் இழுக்கின்றன.
மக்கள் பணத்தில் வீடு கட்டி குடியேறும் சில ஆட்சியாளர்களைப் பல நாடுகள் கொண்டுள்ளது. ஆனால், மக்களின் வரிப்பணம் தவறி நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருப்பதைக் கூட நபியவர்களின் மனம் ஏற்க மறுத்ததென்ற வரலாறு, பொதுப் பணத்தில் நம் கவனம் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு வழிகாட்டலாக இருக்கின்றது.
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்தார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனே திரும்பி வந்ததையும் நபித்தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘நான் ஏன் அவசரமாக சென்றேன் தெரியுமா?, அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டிலிருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்’ என்றார்கள். (நூல்: புகாரி).
நூலிழையில் கூட ஆட்சி, அதிகாரத்தில் தவறுகள் ஏற்பட்டு விடாமல் உன்னிப்பாகக் கவனித்தலில் அழகிய தலைமைக்கு நங்கூரம் பாய்ச்சியது நபியின் நல்லாட்சி. ஆட்சியாளர் என்ற மமதையில் மக்கள் முன் தோன்றாமல் அல்லாஹ்வின் அடிமை, மக்களின் சேவகன் என்ற ரீதியில் மக்கள் முன் செல்வதற்கு இஸ்லாம் ஆணையிடுகிறது.
வெளிப்படையான, நேர்மையான ஆட்சி அல்லாஹ்வின் நிழலில் நிற்க இடம் பிடித்துக் கொடுக்கும். அல்லாஹ்வின் நிழலைப் பெறுவதற்கு நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் இருந்த பொறுப்புணர்வும், பொதுநலமும் நம் வாழ்விலும் தொடர அல்லாஹ்வை பிரார்த்திப்போம். ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
Tags: இஸ்லாம்