கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கோரி சென்னையில்தேசிய லீக் கட்சி பட்டினி அறப்போராட்டம்!
நிர்வாகி
0
கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு கோரி சென்னையில் முஸ்லீம்கள் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம்
தேசிய லீக் கட்சியின் சார்பில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின் படி கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த கோரியும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லிபரான் கமிஷன் வெளிப்படுத்திய குற்றவாளியை கைது செய்ய கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்திற்கு தேசிய லீக் கட்சியின் தலைவர் எம்.பஷீர் அஹமது தலைமை தாங்கினார்.
கட்சியின் மாநில பொது செயலாளர் தி.மு.அப்துல்காதர், கொள்கை பரப்பு செயலாளர் பைரோஸ் அகமது, மாநில பொருளாளர் ஜவஹர் அலி, மாநில துணை தலைவர் நூர்தீன், குரோம் நசீர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
பாபர் மசூதி
இது குறித்து தேசிய லீக் கட்சியின் தலைவர் எம்.பஷீர் அஹமது கூறியதாவது:-
இந்தியாவில் வாழும் 25 கோடி முஸ்லீம் மக்களில் 90 சதவீதத்திற்கு அதிகமான முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் கடந்தும் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் முஸ்லீம்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். எனவே மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின் படி 10 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லிபரான் கமிஷன் அறிவித்துள்ள 68 குற்றவாளிகள் மீது உடனடியாக கிரிமினல் வழக்கு தொடர்ந்து அவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களை தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். பாபர் மசூதியையும் அதே இடத்தில் கட்டி தர வேண்டும்.
அவ்வாறு அவர் கூறினார்.
Tags: தேசிய லீக்