Breaking News

கருணாநிதிக்கு நல்லிணக்க விருது

நிர்வாகி
0
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாபில் சமூக நல்லிணக்க விருது வழங்கப்படும் அக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும்.

மறைந்த தலைவர் அப்துல்சமதின் பிறந்தநாளான அக்டோபர் 4-ம் தேதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய சமுதாயத்தினருக்கான சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த ஆண்டு 3 விருதுகளையும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு வழங்க உள்ளோம். இந்த விருதின் பெயர் நாணயம் போற்றும் நல்லிணக்க விருது ஆகும்.

வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். தேசிய செயற்குழுவில், சாதிஒழிப்பு, ஏழ்மையை போக்குதல் போன்றவற்றில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

ரம்ஜான் நோன்பு அடுத்த வாரம் திறக்கப்படவுள்ளது. இந் நிகழ்ச்சியில் ஏழை. எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும் என காதர்மொய்தீன்
தெரிவித்தார்.

பேட்டியின் போது நகரச் செயலர் முகமதுபைசல், மாநில பொதுச் செயலர் அபுபக்கர், ஷபிக்கூர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக  அமானுல்லா, செயலராக சுக்கூர் , பொருளாளராக அப்துல்கப்பார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags: முஸ்லிம் லீக்

Share this