Breaking News

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்

நிர்வாகி
0
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் மூவேந்தர் அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட தலைவர் முகமது ஹுசைன், மாநில துணை தலைவர் முகமது முனீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட செயலாளர் பக்கீர் ஒலி வரவேற்றார்.


இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

10 சதவீத இடஒதுக்கீடு

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மத்திய அரசு முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.


தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 31/2 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு இந்த பொதுக்குழு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில், 31/2 சதவீதம் என்ற அளவை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம் சிறைக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் பணியாற்றி, வேலை இழந்து திரும்பும் இந்தியர்களுக்காக தனி நல வாரியம் அமைத்து அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

போராட்டம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒருதலைப்பட்சமானதாகும். இந்த தீர்ப்பு முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வருகிற 12-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு முன்பு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது.

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் இக்பால், சித்திக், மாவட்ட பொருளாளர் சிராஜ×தீன், துணை தலைவர் இமாம்தீன், இணை செயலாளர் சையத் முஸ்தபா மற்றும் பலர் பேசினார்கள்.

Share this