விடுதலைப் போராட்ட தியாகிகள்! உலமாக்களின் வீர வரலாறு!!
நிர்வாகி
0
விடுதலைப் போராட்ட தியாகிகள்! உலமாக்களின் வீர வரலாறு!!
-அபூ சாலிஹ்
-அபூ சாலிஹ்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
பகதூர்ஷா ஜாஃபரும், சிராஜுத் தவ்லாவும், மைசூர் வேங்கை ஹைதர் அலியும், அவரது மகன் வீரத் திப்புவும், கரிய மனம் கொண்ட கயவர்களாலும் மறைக்க முடியாத அளவு மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டதால் வரலாற்றின் பக்கங்களில் இந்த வீரக் கதாநாயகர்களின் வாழ்வு வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த வெளிச்சத்தின் ஒளிச் சத்து பரவி இன்றும் இந்தியத் தலைமுறையினரின் நாடி நரம்புகளை முறுக்கேற்றி நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெருக்கெடுத்து ஓடச் செய்து வருகிறது.
மறைக்கப்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகம் பாடநூல்களிலும் வரலாற்று ஆய்வுகளிலும் வெளி வந்தால் இந்திய மக்களின் மனதில் புதிய உத்வேகமும் வீர உணர்வும் கூர் தீட்டப்படும்.
'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்தவர்கள் முஸ்லிம் மாவீரர்களே.
அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் வீரப் போர், மெய்சிர்க்க வைத்தது.
2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர்.
அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள்.
ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
மன்னர் பகதூர்ஷா
ஆனால் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெருமக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டடத்தின் ஒவ்வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.
முதல் அமைப்பு ரீதியான இந்திய சுதந்திரப் போர் அல்லது இந்தியப் புரட்சி என்பது 1857ல் ஏற்பட்டது.
இதுவே சிப்பாய் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய புரட்சியை சிப்பாய் புரட்சி என்றே வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவடைந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது.
அந்த வகையில் முதல் சுதந்திரப் போர் முதல் வெற்றியை ஈட்டியது.
அதன்பிறகு இந்தியத் துணைக் கண்டம் 90 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது.
லண்டன் இந்திய நிர்வாகத்தின் தலைமைப்பீடமாக மாறியது.
லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் இந்தியாவின் உச்சநீதிமன்ற மாக அறியப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவனிலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்கள் பொங்கி வெடித்தனர்.
உலமாக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீர சமர் புரிந்தனர்.
ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கீ என்பவரின் தலைமையில் நடைபெற்ற புரட்சிப் போர் ஆங்கிலேயரை அதிர வைத்தது.
ஷம்லி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் சிதறடிக்கப்பட்டனர்.
இதில் உலமாக்கள் காட்டிய வீரம் செறிந்த போரினை ஆங்கிலேயர்கள் மறக்க இயலாது.
தற்போது முதல் சுதந்திரப் போரின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
முதல் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரர்களின் வரிசையில் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கி போற்றப்பட்டிருக்க வேண்டிய மாவீரர் ஆவார்.
பங்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை.
வங்காள மாவீரன் சிராஜுத் தவ்லா, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்ததிருந்தே முஸ்ம்களின் வீரப்போர் தொடங்கி விட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.
உலமாக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போர் தியாக வரலாறு குறித்து பிரிட்டிஷ் தரைப்படைத் தளபதி தாம்ஸன் (Rebellion Clerics பக்கம் 49ல்) தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
"ஷா வலியுல்லாஹ் (1703 - 1762)"
ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்கினார்.
ஐரோப்பிய ஆட்சியாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளையும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள்.
முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார்.
1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார்.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது.
1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர்.
மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார்.
'ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற தனது நூல், உழைக்கும் மக்களே சமுதாயத்தின் உண்மைச் சொத்து என்றார்.
சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார்.
விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக்களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார்.
இவரது வரலாறு பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.
திப்பு சுல்தானின் தியாக பூமிவீரத் திப்புவின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளித்தது.
1757 முதல் 1857 வரை அவ்ரங்கஜேப்பின் வாரிசுகள் தனியாக பலம் பொருந்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டனர்.
முஸ்ம்கள் அனைவருக்கும் சுதந்திர நெருப்பூட்டியவர் மாவீரன் திப்பு சுல்தான்.
மே மாதம் 4ஆம் தேதி 1799ல் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தபோது, தரையில் வீழ்ந்து கிடந்த அவரது உடலைப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர் லார்டு ஹாரிஸ் என்பவன் கொக்கரித்தான்.
'இப்போது இந்தியா எங்களுடையதாகி விட்டது' என்றான்.
அந்த மாவீரனின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் அளவுக்கு எந்த ஆட்சியாளரும் தோன்றவில்லை என்பதே வரலாற்று உண்மை.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான பத்வாக்கள் 1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் டெல்லியை கைப்பற்றியது.
கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி.
ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித்தார்.
முதல் ஃபத்வா நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா குறிப்பிடுகிறது.
ஸையத் அஹ்மத் ஷஹீத் (1786 -1831)
ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப் பிரதேச மாநில ரெய்பரேயின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர்.
1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது.
மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர்.
மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார்.
உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள்.
ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர்.
அது பல ஆண்டுகள் நீடித்தது.
பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை.
பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப் புத்தகங்ளில் காணப்படுகிறது.
இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிடமிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.
இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார்.
1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிரமடைந்தது.
1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் பத்வா வழங்கினர்.
மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம் போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர்.
இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.
முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிர வைக்கும் உண்மையாகும்.
சிறந்த உருதுக் கவிஞரான மிர்ஸா காஃப் எழுதுகிறார்:
என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன்.
ஒவ்வொருவரும் கொல்லப்படுவதை நான் பார்த்தேன்.
ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதைப் பார்த்தேன்'' என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.
பஹதூர்ஷா ஜாஃபரின் வீர புதல்வர்கள் மூவரும் ஹூனி தர்வாஜா என்ற பகுதியில் பொதுமக்களின் மத்தியில் படுகொலை செய்யப்பட்டனர்.
கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பஹதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1862ல் உயிர் துறந்தார்.
சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார்.
அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம்.
ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார்.
பலமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து உலமாக்கள் வீர சமர் புரிந்தார்கள்.
1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்தது என்று கூறுவார்கள்.
ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை அதுதான் விரட்டியடித்தது.
'மவ்லவி' என்ற சொல்லைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறினர்.
தீவிரவாதிகள் என்ற பெயரிட்டு ஆவணங்களிலும் குறித்தார்கள்.
ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப்பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர்.
இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்.
Tags: ஆலிம்கள் சுதந்திரம் வரலாறு