சிறந்த இளம் எம்எல்ஏ.. தமிமுன் அன்சாரி
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டசபை உறுப்பினருமான தமிமுன் அன்சாரிக்கு சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது வழங்கப்பட்டுள்ளது.
MIT- WORLD Peace UniverCity மஹாராஷ்டிரா மாநிலத்தில் 72 பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற முதல் 10 தனியார் பல்கலைக் கழகங்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இங்கு மட்டுமே எம்.ஏ முதுநிலையில் அரசியல் அறிவு மற்றும் மேலாண்மைக்கான சிறப்பு படிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் வழிகாட்டலில்படி 'இந்திய மாணவர் நாடாளுமன்றம்' என்ற அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கொள்கையும், திறமையும் கொண்ட அரசியல் தலைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அந்த அடிப்படையில் இந்தியாவின் முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களை கண்டறிந்து இப்பல்கலைக்கழகம் விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது.
இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சட்டசபை புள்ளிவிவர, அடிப்படையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டசபை எம்.எல்.ஏ.வுமான, மு.தமிமுன் அன்சாரியை தேர்வு செய்தது.
தமிழகத்தில் முதல் முறையாக இந்த விருதை பெறும் அரசியல்வாதி தமிமுன் அன்சாரிதான். ஐவரிகோஸ்ட் நாட்டிலிருந்து வந்த ஐக்கிய நாட்டு சபையின் மக்கள் தொகை நிதியக்கத்தின் பூடான் இயக்குனர் அர்ஜென்டினா மடாவல், சமண மத அறிஞர் ஆச்சார்யா லோகேஷ் ஆகியோர் இணைந்து, அவருக்கு இந்த விருதை வழங்கினர்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரி கூறுகையில், தமிழகத்திலேயே முதல் முறையாக இதுபோன்ற விருது எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நாகை தொகுதி மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மனிதயநேய ஜனநாயக கட்சி தொண்டர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்தார்.
Tags: செய்திகள்