Breaking News

டெல்லி நிஜாமுதீன் மவுலானா விளக்கம்

நிர்வாகி
0

டெல்லி நிஜாமுதீனில் மத வழிபாடு மாநாடு நடத்தியதில் ஏராளமானோருக்கு கரோனா பாதிப்பு வந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவுக்கு ஆளாகியுள்ள தப்லிக் ஜமாத் மவுலானா தாங்கள் எந்த சட்டத்தையும் மீறி நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். மேலும், இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கும் மேற்பட்டோரும் வந்து இந்த மத வழிபாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் கரோனா அறிகுறிகுளுடன் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தப்லிக் ஜமாத் மவுலானா நர்காஸ் நிஜாமுதீன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தப்லிக் ஜமாத் சர்வதேச தலைமையகம் சார்பில் டெல்லி நிஜாமுதீன் மவுலானா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில் கூறப்பட்டு இருப்பதாவது: '

'டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லிக் ஜமாத் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. நாங்கள் இந்த மாநாடு நடத்தியதிலும், மக்களைத் தங்க வைத்ததிலும் எந்த விதமான சட்டத்தையும் மீறவில்லை.

எப்போதுமே மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் மக்களை கருணையுடன்தான் நடத்தி இருக்கிறோம். டெல்லி அரசு பிறப்பித்த எந்த விதிமுறைகளையம் மீறி தெருக்களில் நடக்கவில்லை. மேலும், எங்கள் வளாகம் முழுவதையும் கரோனா நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக சுய தனிமைக்காக வழங்குகிறோம்.

உலகமெங்கும் யாத்ரீகர்கள், பக்தர்கள், பயணிகள் இந்த இடத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வருகையையொட்டி, பங்கேற்பை உறுதி செய்து நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை.

பிரதமர் மோடி கடந்த 22-ம் தேதி ஜனதா ஊரடங்கு அமல்படுத்தியபோதே எங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டோம். அப்போது எங்கள் இடத்தில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டார்கள். மறுநாள் புறப்பட்டுச் செல்ல திட்டமிட்டபோது, டெல்லி அரசு 23-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்தது.

இதனால், எங்கள் நிகழ்ச்சிக்காக பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல், போக்குவரத்து வசதி இல்லாமல் இங்கேயே தங்கிவிட்டனர். ஏதாவது போக்குவரத்து வசதிகளைச் செய்து கொள்கிறோம் எனக் கூறி 1,500 பேர் சென்றுவிட்டனர். பிரதமர் மோடி ஊரங்கு உத்தரவைப் பிறப்பித்த பின் இங்கு தங்கியிருந்த பலருக்கும் வெளியே செல்ல இடமில்லாததால், இங்கு தங்கவைத்தோம். அவர்களுக்குப் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

கடந்த 24-ம் தேதி ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலையத்திலிருந்து எங்கள் மையத்தை மூட சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு எங்கள் தரப்பில் இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகன அனுமதி வழங்கிட வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.

மேலும், 17 வாகனங்கள், அதன் பதிவு எண், ஓட்டுநர் விவரம் அனைத்தையும் காவல் நிலைய அதிகாரிக்குக் கடிதம் மூலம் தெரிவி்த்திருந்தோம். அந்த வாகனங்களை இயக்க அனுமதியளித்தால் இங்கு சி்க்கியிருக்கும் மக்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள் எனத் தெரிவித்தோம். ஆனால், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

மார்ச் 27-ம் தேதி எங்கள் அமைப்பிலிருந்து 6 பேரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். அதன்பின் மறுநாள் இங்கு வந்த மருத்துவர்கள் குழு, போலீஸார் இங்கிருந்த 33 பேரை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் போலீஸார் அனுப்பிய 2-வது நோட்டீஸுக்கும் பதில் அனுப்பியுள்ளோம்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: சமுதாய செய்திகள்

Share this