Breaking News

தடுமாறும் மாநிலங்கள்:- அ. நிஜாம் முகைதீன்

நிர்வாகி
0

உலகிலுள்ள அனைத்து நாடுகளும், இரு வகையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதலாவது கண்களுக்கு புலப்படாத நுண்கிருமி கொரோனாவிற்கு எதிரான மருத்துவ யுத்தம். இரண்டாவது பசி , பட்டினி மற்றும் வாழ்வாதாரத்திற்கான பொருளாதார யுத்தம். இந்த இரண்டு வகையான யுத்தத்திலும் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாய காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் தள்ளப்பட்டு இருக்கின்றன. .

இந்த இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் அது மாபெரும் இழப்பாகவே இருக்கும் . மேற்கூறிய, இரு வகையான யுத்தமும் ஏதோ ஒரு வகையில் ஒன்றை ஒன்று தொடர்புடையதாகவே உள்ளது.. அதனால் தான் மக்களை தங்கள் வீடுகளில் தங்க வைக்கவும், அதனால் ஏற்படக்கூடிய மக்களின் பொருளாதார இழப்பை ஈடுகட்ட உலகத்திலுள்ள அனைத்து நாடுகளும், தத்தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறிப்பிட்ட சதவிகிதத்தில் கணிசமான தொகையைச் செலவு செய்கின்றன .

பசி பட்டினியாலும், நோய்வாய்ப்பட்டும் மக்கள் யாரும் இறந்திடக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தினால் இச்செலவுகளை உலக நாடுகள் மனமுவந்து செய்து வருகின்றன. நமது மக்கள் தொகையான 140 கோடியில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நாடான இந்திய திருநாட்டில், இந்த யுத்தத்தின் நிலைமையை ஆராய்ந்தால் மருத்துவ யுத்தத்தில்

மக்களை வீடுகளிலேயே முடக்கி சமூக பரவலை கட்டுப்படுத்தினாலும் மறு பக்கம் பசி பட்டினிக்கு எதிரான போரில் ஒரு திணறல் போக்கையே பார்க்க முடிகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதற்கு மாநிலங்களின் நிதி பற்றாக்குறையே காரணமாக இருக்கிறது .

நாற்பது முதல் ஐம்பது கோடி வரை மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழும் நம் நாட்டில் எந்த வித முன்னேற்பாடுமின்றி தின கூலியை எதிர்பார்த்து தன் வாழ்க்கையை கழிக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை கவனத்தில் கொள்ளாமல் திடீர் என்று 21 நாள் ஊரடங்கை அறிவித்தனர். பிறகு ஊரடங்கை 20 நாட்கள் நீடித்தனர் . இதனால் பெருபான்மையாக வாழும் ஏழை மக்கள், ஒவ்வொரு நாளும், பசியோடு போராடிக் கொண்டிருக்கின்றனர் .

சமூக பொருளாதார முன்னேற்றம் , சட்டம் ஒழுங்கு , மக்கள் சுகாதாரம் என்ற மூன்று பெரும் பொறுப்புகளை கொண்டுள்ள மாநில அரசுகள் அதை சரியான முறையில் கையாளுகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே நமது ஆணித்தரமான பதிலாகும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் நிதி பற்றாக்குறையேயாகும். ஏன் இந்த நிதி பற்றாக்குறை என்பது குறித்து ஒரு சிறு அலசல் அலசுவோம். மத்திய அரசின் அலட்சியம்:-

அதிகப்படியான வரிவருமானமும் மத்திய அரசுக்கு சொந்தமான பெரு நிறுவனங்களின் வருமானமும் , பேரிடர் நிவாரண நிதி மற்றும் ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐயை) தன்னுடைய அதிகாரத்திற்கு உட்படுத்தி வைத்துள்ளதால் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் நிதியை எதிர்நோக்கியே இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

ஊரடங்கை இரண்டாவது முறையாக நீட்டிப்பதற்காக தொலைக்காட்சி பேட்டியில் தோன்றி பேசிய பிரதமர் அவர்கள் மக்களின் வாழ்வாதாரங்களுக்குத் தேவையான வழிகளை அறிவிக்காமல், கனவில் தோன்றும் நீதி தேவதை போல மக்களுக்கு அறிவுரைகளை மட்டுமே கூறினார் . அதாவது * முதலாளிகள் தனது நிறுவனத்தில் வேலையிழப்பு செய்ய வேண்டாம் * சம்பளத்தை எவ்வித குறைப்புமின்றி முழுமையாக தர வேண்டும் * ஏழைகள் மீது அக்கறை காட்டுங்கள் போன்ற அறிவுரைகளையே கூறினார் .

நமது நாட்டில் அதிகமான மக்கள் வேலை பார்க்கும் இடம் சிறு , குறு தொழில்களில்தான் . அந்த சிறு குறு தொழில் முதலாளிகளே வருமானம் இல்லாமல் திண்டாடும் இன்றைய சூழ்நிலையில் அவர்கள் எப்படி அவர்களுடைய தொழிலாளிகளுக்கு வேலையோ , சம்பளமோ தர முடியும் ? அரசுதான் அதற்க்கு தேவையான நிதியை மாநில அரசின் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அந்த நிறுவனங்களுக்கு நிதியை வரையறுத்து கொடுக்க வேண்டும் . மேலும் , அந்த நிறுவனங்கள் பழைய முறைப்படி இயங்குவதற்கு ஆதரவும் அளிக்க வேண்டும் .

ஏழைகள் மீது அக்கறை என்பது அரசின் பிரதான கடமையாகும். மக்கள் ஏழைகளின் மீது பரிவுடன் இருக்க முடியுமே தவிர அவர்களின் முன்னேற்றத்திற்குத் தோள் கொடுக்க இயலாது. அரசு தான் அவர்கள் மீது அக்கறையுடன் அவர்களின் பசியை போக்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

அந்த மாபெரும் பொறுப்பும் மாநில அரசையே சாரும். ஆனால் அதற்கு உண்டான நிதியை வழங்க வேண்டிய முதன்மைப் பொறுப்பு மத்திய அரசையே சாரும் .

ஆண்டுக்கு 25 லட்சம் கோடி வருமானமும் அவசர கால நிதியாக பல லட்சம் கோடியை ஆர்.பி.ஐ யில் இருப்பாக வைத்திருக்கும் மத்திய அரசால் இது ஒன்றும் முடியாத காரியமில்லை . பெரும் பணக்கார நிறுவனங்களின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் அரசு , ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) யின் அவசர நிதியிலிருந்து 1,70,000 கோடியை பெரும் நிறுவனங்களின் கடன் தள்ளுபடியால் நலிவடைந்த வங்கிகளுக்கு கொடுக்கும் அரசு, இம்மாதிரியான இக்கட்டான காலகட்டங்களில், மாநிலங்களுக்கு ஏன் போதுமான நிதியை கொடுக்க தயங்குகிறது என்பது மிகவும் கவலைக்குரிய கேள்வியாகும். உரிமை பறிப்பு :-

இந்திய துணை கண்டம் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெறும் போது, அந்த நில பரப்பில் கோலோச்சிக் கொண்டிருந்த தேசங்கள், தங்கள் கலாச்சாரம் மற்றும் தங்களுக்குண்டான உரிமைகள் போன்றவற்றை முன் வைத்து, இந்தியன் யூனியனாக ஒன்றிணைந்த பிறகு கால போக்கில் ஆண்டு கொண்டிருந்த, ஆண்டு கொண்டிருக்கின்ற மத்திய அரசுகள், மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்தனர் .

எப்படி நீட் மூலம் நாம் மருத்துவ படிப்பின் மீது உள்ள ஆதிக்கத்தை இழந்தோமோ அதை போல ஜி.எஸ்.டி மூலம் மாநிலத்திற்கே உண்டான வரி உரிமையும் பறிக்கப்பட்டது. வாட் (VAT) ஜிஎஸ்டி ( GST) போன்ற வரிகளுக்கு க்கு முன்பு மத்திய அரசு விற்பனை வரி (CST) மற்றும் மாநில அரசு விற்பனை வரி (SST) என்ற இருவகை விற்பனை வரி முறைகள் இருந்தன. மத்திய அரசு விற்பனை வரி (CST) என்பது பல்வேறு மாநிலங்களுக்கு இடையேயான விற்பனைகளுக்கு உண்டான வரியாகும். இது நேரடியாக மத்திய அரசையே சாரும்.

மாநில அரசு விற்பனை வரி (SST) என்பது மாநில அரசுக்கே உரிமை உள்ளது. (வரி விதிப்பு முதல் வரி வசூலிப்பு வரை) ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கேற்ப பொருட்களின் மீதான வரியை நிர்ணயித்துக் கொள்ளும் மற்றும் வரி வருவாயும் முழுவதுமாக மாநிலத்தையே சேரும். அந்த வரி வருமானத்தையே தனது மக்களின் மேம்பாட்டிற்காக செலவு செய்யும். மற்றபடி நேரடி வரிவிதிப்பான வருமான வரியை முழுவதுமாக மத்திய அரசே எடுத்து கொண்டு தான் நாடிய மாநிலத்திற்கு தான் நாடிய தொகையை ஒதுக்கும் . அதையே நம்பி மாநில பட்ஜெட் இயற்றுவது மாநில அரசின் கடமையாகும்

எஸ்.எஸ்.டி (SST) என்ற வரிவிதிப்பு முறை இருக்கும் வரை மாநிலங்கள் ஓரளவு தங்களது நிதிநிலைமையை சமாளிக்க தான் செய்தன. ஆனால் எப்போது எஸ்.எஸ்.டி (SST) வரி உரிமை பறிக்கப்பட்டு ஜி.எஸ்.டி (GST) திணிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே மாநில அரசுகள் தடுமாறத் தொடங்கின .

உதாரணத்திற்கு 2010 வரை தமிழகம் தனது ஆண்டு வருவாயில் 65% சதவீத வருமானத்தை விற்பனை வரி (ST ) மூலமே பெற்றது.

1999-2000 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வரி வருமானம் 10,918 கோடியில் 7,014 கோடி (ST) விற்பனை வரி மூலமாகப் பெற்றோம். மாநிலத்தின் உரிய விற்பனை வரி வருவாய் நேரடியாக மாநிலத்தின் கஜானாவிற்கே வந்தது . ஜி.எஸ்.டி ( GST) என்று அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்து மாநில அரசுக்கு உரிய வரி வருமானத்தின் ஒரு பகுதி மத்திய அரசின் கஜானாவையே நிரப்புகின்றது. ஜி.எஸ்.டி (GST) என்றால் விற்பனை மற்றும் சேவை வரி ஜி.எஸ்.டி (GST) விதிப்படி அனைத்து வரி விதிப்பு அதிகாரமும் மத்திய அரசையே சாரும். ஜி.எஸ்.டி (GST) ல் மூன்று உட்பிரிவுகள் உள்ளன எஸ்.ஜி.எஸ்.டி. (SGST) சி.ஜி.எஸ்.டி. (CGST) மற்றும் ஐ.ஜி.எஸ்.டி. ( IGST).

எஸ்.எஸ்.டி (SST) முறைப்படி மாநிலத்தில் நடக்கும் விற்பனைக்கு உண்டான வரிகள் அனைத்தும் மாநிலத்தையே சாரும். ஆனால் ஜி.எஸ்.டி (GST)யில் அதையும் பங்கு போட்டு மத்திய அரசிற்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக 18% சதவீத வரி என்றால் அதில் மாநிலத்திற்கு எஸ்.ஜி.எஸ்.டி (SGST) 9% சதவீதமும் , மத்திய அரசுக்கு சி.ஜி.எஸ்.டி (CGST ) 9% சதவீதமும் என பிரித்து கொள்ள வேண்டும் . இதனால் வருவாயில் பெரும் பகுதியை நாம் இழக்கிறோம் .

ஐ.ஜி.எஸ்.டி (IGST) என்பது மாநிலங்களுக்கிடையே நடக்கும் விற்பனைக்கு உண்டான வரி இதிலும் 18% சதவீத வரி வசூலிக்கப்படும் ஆனால் மொத்த வரியும் மத்திய அரசுக்கே கொடுத்தாக வேண்டும் மாநில பங்கு

(9% சதவீதத்தை) சேர்த்து பிறகு மத்திய அரசு தான் அந்த பங்கை பிரித்து கொடுக்க வேண்டும். இன்றைய நிலவரப்படி Nov 2019 முதல் March 2020 வரையான GSTயின் மாநிலத்திற்கான பங்கு நிலுவையில் உள்ளது . அதை இந்நேரம் கொடுத்திருந்தாலே மாநிலங்கள் ஓரளவு சமாளித்திருக்கும் . இந்த ஜி.எஸ்.டி (GSTயி)ல் உள்ள சிரமங்களையும் நாம் இழந்த உரிமையையும் பற்றி தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் 2019-2020 பட்ஜெட் அறிக்கையில் பாறா 136ல் மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறி இருக்கிறார். பனிப்போர்:-

இப்போது கொரோனாவிற்கு எதிராக நாம் நடத்தி கொண்டிருப்பது ஒரு பனிப்போராகும். இதனுடைய தாக்கம் நீண்ட காலம் இருக்கும் . மறைமுகப் போரில் நாட்டின் பெரும் பாதிப்பு பொருளாதாரம் மூலமாகத் தான் ஏற்படும்.

மக்கள் தம் வேலைகளை இழப்பார்கள் , அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அல்லல்பட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும் . நேரடி யுத்தம் என்றால் பாதிப்பு கண்முன்னே தெரியும் ஆனால் மறைமுக யுத்தத்தில் பாதிப்பை கணிக்கவே முடியாது.இது பரந்து விரிந்த ஆலமரத்தை கரையான் அறிப்பது போன்றதாகும் .

பனிப்போரின் காரணத்தால் எப்படி மிக வலிமையாக காட்சியளித்த ரஷ்யா திடீர் என்று ஒரு நாள் விழுந்ததோ அந்த நிலைமைக்கே இந்த போர் இட்டுச் செல்லும் . அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க நாட்டில் உள்ள மக்களின் கையிலும், பையிலும், வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் மற்றும் அதற்கு உண்டான ஆதாரத்தை உயிர்ப்புடன் அரசுகள் வைத்திருக்க வேண்டும். அ. நிஜாம் முகைதீன் bms1.ae@gmail.com

Tags: கட்டுரை

Share this