குறைவாக சிரிப்போம்,...!
அன்று முதல்,இன்று வரை திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் ஒருவரை அடித்து, அவர் படும் துன்பங்களைக் கண்டு ரசிப்பது போன்ற நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்படுகின்றன.அல்லது ஒருவருடைய உடலமைப்பைக் கேலி செய்வது போன்ற நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்படுகின்றன.
பொதுவாக ஒருவரை அடிக்கும்போதோ அல்லது ஒருவரைக் கேலி செய்யும் போதும் கோபம் ஏற்படுவது தான் மனித இயல்பு. ஆனால், இதுபோன்ற காட்சிகளை நகைச்சுவை என்ற பெயரில் சிரித்தும், அதனை ரசித்தும் பழகிவிட்டோம். இதனுடைய நீழ்ச்சியாகத் தான், இன்று ஒருவர் பொதுவெளியில் தாக்கப்படும் போதும் அல்லது தன்னை மாய்த்துக் கொள்ளும் போதும் அதைத் தடுக்க வேண்டிய மனிதர்கள் அதனைத் தடுக்காமல் அந்த நிகழ்வுகளவீடியோவாக எடுக்கின்றனர் அல்லது தூரமாகவும் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்து மகிழ்கின்றனர் என்ற எண்ணம் தோன்றுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) நூல்்: இப்னுமாஜா 4183 சமீபத்தில் ஒரு டீ கடை அருகில் ஒரு இளம் பெண் தன் மீது தீ வைத்துக் கொண்டதைத் தடுக்காமல் அந்தப் பெண் முழுவதும் எரிந்து போகும் வரை ஒரு நபர் வீடியோ எடுத்து வெளியிட்டார். அதேபோல், சமீபத்தில் ஒரு பகுதியில் மீன் களை ஏற்றி வந்த வாகனம் இரண்டு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. அடிப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல் விபத்தால் ரோட்டில் சிதறிய மீன்களை அள்ளிச் சென்ற காட்சி மனிதநேயம் மரணத்தை எதிர் நோக்கி தடம் மாறுகிறதோ என்ற சந்தேகம் மேல் எழுகிறது.
பொது இடத்தில் மாட்டுக்காக, தனிப் பிரச்சினைகளுக்காக மனிதர்கள் கொல்லப்படும் நேரத்தில் கை நீட்டித் தடுக்காமல், கை கொட்டி ஆரவாரம் செய்யும்போது மக்களின் மனம் துருப்பிடித்த இரும்பாய் மாறக விட்டதைப் படம் பிடித்து காட்டுகின்றது. இதற்காகத்தான் இஸ்லாம் அதிகமாக சிரிப்பதை விரும்பவில்லை .அதே நேரத்தில் நகைச்சுவைக்கு எதிரானதும் இல்லை.அனைத்து விஷயங்களுக்கும் எல்லை வகுக்கும் இஸ்லாம் நகைச்சுவைக்கும் எல்லை வகுத்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் அவையில் நகைச்சுவை பேச்சுகளும் இடம் பெற்றுள்ளன என்பதைப் பல் வேறுபட்ட நபி மொழிகள் நமக்குச் சான்றாக இருக்கின்றன.
மனித இயல்பிற்கு எதிரானதல்ல நகைச்சுவை உணர்வு. ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அழகிய பண்புகளில் ஒன்று. நபிகளிடமும் அந்த பண்பு இருந்தது நபி (ஸல்) அவர்களும் நகைச்சுவை செய்துள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு மனிதர் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபியவர்கள் உம்மை ஒட்டகத்தின் குட்டியின் மீது ஏற்றிவிடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் இறைதூதர் அவர்களே! ஒட்டகக்குட்டியை வைத்து நான் என்ன செய்வது? என்று கேட்டதற்கு எந்த ஒட்டகமும் தாய் ஒட்டகத்தின் குட்டித்தானே என்று (புன்னகை பூத்தவர்களாக)சொன்னார்கள்.அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)நூல்: அபூதாவூத் 4346, திர்மிதி
சிரிப்பு என்பது உணவிற்குப் பயன்படுத்தும் உப்பைப் போன்றது. தேவையான அளவிற்குப் பயன் படுத்த இஸ்லாம் வலியுறுத்துகிறது.அதிகமாகச் சிரிப்பதைவிட, இறை பயத்தில் அழுவதை இஸ்லாம் விரும்புகின்றது.
மனித உள்ளத்தை ஈரத் தன்மையுடன் வைத்திருக்க அழுகை உதவுகிறது.சிரிப்பு மட்டுமே வாழ்க்கையை அழகு படுத்தும் என்ற தவறான கருத்துகள் நம்முன் விதைக்கப்பட்டு, அது ஆலமரமாக வளர்ந்த நிற்கிறது. அழுகை குறைந்து சிரிப்புகள் அதிகமாகி மக்கள் மனது ஈரம் இல்லா பாலையாக உருமாறி போனது.
சிரிப்பை விட அழுகையே வாழ்வை மேம்படுத்தும் என்பதை உலகம் உணரத் தொடங்கிவிட்டது.அழுகையை ஊக்குவிக்க இன்று பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை சில வலைத்தளங்கள் மேற்கோள் காட்டுகின்றன.
அந்த வகையில் தான்,மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களுக்கு மன அமைதி ஏற்படுத்தும் விதமாக அழுகையை ஒரு நிவாரணமாக்கி அதன் வழியாகத் தீர்வு கொடுக்க முனைகிறது இந்தியாவின் ஓர் குழு.
இந்தக் குழு தொடர்பாக இவ்வாறு ஒரு செய்தியை பி.பி.சி செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் சூரத் நகரில் crying club (அழுகை சங்கம்) ஒன்றை நடத்தி வருகின்றனர்.இவ்வழுகை சங்கத்தை நிறுவியோர் மாதந்தோறும் இந்த அமர்வில் அமர்ந்து தம் மனதிலுள்ள கவலைகளை இறக்கி இலேசாக இருப்பதை உணர்கின்றனர்.
இதில் பங்கேற்போர் அடுத்தவரின் வேதனையான வாழ்க்கை சம்பவங்களை அல்லது அழ வைக்கின்ற இசைகளைக் கேட்டு கண்ணீர் வடிக்கின்றனர்.இந்த அமர்வானது மனதில் இறுக்கத்தைத் தளர்த்தி,புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளை, வெளிப்படுத்தும் சூழலாக இது அமைவதுடன் இந்த அமர்வுக்குப் பின் தாங்கள் மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். (பி.பி.சி இணையதளம்)
கவலைகளைக் கண்ணீராக வெளிப்படுத்தி மன அமைதியை கொண்டுவரும் ஒரு முயற்சியாகவே இம்முயற்சி பார்க்கப்படுகிறது. நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் கண்ணின் பாதுகாப்பிற்கும் இறைவன் செய்திருக்கும் ஓர் அற்புதமான ஏற்பாடுதான் அழுகை.அழுகையின் போது வெளிவரும் கண்ணீரில் கூட 03 வகை உண்டு என்கிறார்கள் உளவியலாளர்கள். அடிப்படை கண்ணீர் (Basal Tears): கண்கள் பாதுகாப்பாகவும் வழுவழுப்பாகவும் இருக்க, கண்ணீர் நாளங்கள் இந்தக் கண்ணீரை எப்போதும் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. தெளிவாகப் பார்க்கவும் இது உதவுகிறது.நாம் கண் சிமிட்டும்போது,இந்தக் கண்ணீர் நம் கண்கள் முழுவதும் பரவுகிறது. எதிர்வினைக் கண்ணீர் (Reflex Tears)
கண்களில் ஏதாவது தூசி விழுந்தால் அல்லது கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் வருவதுதான் இந்தக் கண்ணீர்.நாம் கொட்டாவி விடும்போதும் சிரிக்கும் போதும் கூட இந்தக் கண்ணீர் வருகிறது.
உணர்ச்சி சார்ந்த கண்ணீர் (Emotional Tears):
மனிதர்களுடைய உணர்ச்சியின் வெளிக்காட்டாக வருவதுதான் இந்தக் கண்ணீர்.ஆழ்ந்த துக்கத்தையோ சந்தோஷத்தையோ நாம் வெளிக்காட்டும்போது இந்தக் கண்ணீர் வரும்.எதிர்வினைக் கண்ணீரைவிட 24 சதவீதம் அதிக புரதம் இதில் இருக்கிறது.
அழுகையின் போது சுரக்கும் கண்ணீரும்,உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சுரக்கும் கண்ணீரும் இரசாயனக் கலவையில் மாறுபடுகின்றது.சாதாரண கண்ணீரில் நீர் (H2O) அதிகம் காணப்படும். ஆனால் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சுரக்கும் கண்ணீரானது அதிக அளவில் ப்ரொலாக்டின்,அட்ரெனொகொர்டிகொட்ரொபிக் ஹோமோன், லியு-என்கெப்கலின் போன்ற ஹோமோன்களையும்,பொட்டாஸியம் மற்றும் மங்கனீஸ் போன்ற தனிமங்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் மனஅழுத்ததிற்கு காரணமான ஹோமோன் உடலை விட்டு அகற்றப்படுகிறது.மன அழுத்தமும் குறைகிறது.இதனாலேயே பிரச்சினைகளின் போது கண்ணீர் விட்டு அழுதவர்கள் தங்களுக்கு அமைதி ஏற்படுவதாக உணர்கிறார்கள்.
இதனால் தான் ஜப்பான் போன்ற நாடுகளிலும் கூட "அழுகை கிளப்"ஏற்படுத்தி அழுகையை உண்டாக்கும் திரைப்படங்கள் மற்றும் அழுகையை உண்டாக்கும் புத்தகங்களையும் வாசிக்கச் செய்யும் நடைமுறையைச் செயல்படுத்தி வருகிறார்கள். (science.howstuffworks.com
குர்ஆனும்,நபி மொழிகளும் குறைவாகச் சிரிப்பதையும், அதிகமாக அழுவதையும் விரும்புகிறது فَلْيَـضْحَكُوْا قَلِيْلاً وَّلْيَبْكُوْا كَثِيْرًا جَزَآءً بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும். (அல்குர்ஆன் : 9:82)
நம் உள்ளம் அமைதியாக, அழகாக மாற தனிமையில் நம் பாவங்களை எண்ணி அழுகுவோம்.அளவாக சிரிப்பதற்கு தடையில்லை அதனால் குறைவாக சிரிப்போம்.. A..H.யாசிர் ஹசனி லால்பேட்டை
Tags: கட்டுரை