Breaking News

இமாம் கஸ்ஸாலி பள்ளி சர்ச்சைகளுக்கு கோசி K.A. அமானுல்லா விளக்கம்

நிர்வாகி
0

அன்புள்ள லால்பேட்டை ஜமாஅத்தார்கள், பொதுமக்கள் அனைவருக்கும் கோசி K.A. அமானுல்லா ஆகிய எனது அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த இரு தினங்களாக இமாம் கஸ்ஸாலி பள்ளி நிர்வாகம் ஒரு கடிதத்தை வலைதளங்களில் வெளியிட்டு அதில் என்னை தவராக சித்தரித்து அவதூறும் பழியும் சுமத்தியிருப்பது கண்டு வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். எந்த ஒன்றையும் உட்கார்ந்து பேசினால் தீர்வு கிடைத்துவிடும். ஆனால் இவர்கள் அதற்கெல்லாம் இடமில்லாமல் எப்போதும் போல் தவரான முடிவெடுத்துள்ளார்கள். அதற்கு அபாண்டமாக என்னைப் பழி சுமத்துகிறார்கள்.

நடந்தது என்றவென்றால், 2012 ம் ஆம் ஆண்டு தொடக்கத்தில் லாலாந் தோப்பில் என்னுடைய இடத்தில் ஒரு திருமண மண்டபம் கட்ட நான் முயற்சி செய்து வந்தேன். அதற்கான ஆரம்ப வேலைகளையும் தொடங்கியிருந்தேன். அப்போது அன்றைய இமாம் கஸ்ஸாலி நிர்வாகிகள் என்னிடம் வந்து பள்ளிக்கு இடமில்லாமல் தவிப்பதாகவும், பிள்ளைகளின் படிப்புக்கு உதவ வேண்டும் என்றும் என்னைக் கேட்டார்கள். அதனால் எனது விருப்பமான திருமண மண்டபம் கட்டும் நோக்கத்தை விட்டுவிட்டு பள்ளிக்கு வகுப்பு அறைகள் கட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டேன்.

அப்போது பள்ளிக்கு அரசு அங்கீகாரம் வாங்க வசதியாக அரசு அறிவித்துள்ள சட்டங்களை பின்பற்றி முழுமையான ஸ்கூல் பில்டிங்காகவே அமைக்கச் சொன்னார்கள். கும்பகோணம் பள்ளி தீ விபத்திற்கு பின் அரசு இப்படியெல்லாம் நிபந்தனை விதிக்கிறது என்றும் கூறினார்கள். அதற்கேற்ப சாதாரண கட்டிடம் கட்டினால் ஒரு லட்சம் செலவாகுமென்றால் இவர்கள் கேட்டபடி செய்ய இரண்டு லட்சம் என்றளவில் செலவானது. தூண்கள், பக்கவாட்டு சுவர், உள்ளமைப்பு, வகுப்பறைகள், மாடி படி என எல்லாவற்றையும் கூடுதல் செலவில் அவர்கள் விருப்பப்படியே அமைத்தேன். குறிப்பாக மூன்றாவது மாடி கட்ட எனக்கு விருப்பமில்லை. அதனால் பல சட்ட பிரச்னை ஏற்படும் என தயங்கினேன். என்னை பலவந்தமாக அதையும் கட்ட வைத்தார்கள். அப்போதுகூட சில நண்பர்கள் இப்படி பள்ளிக்கட்டிடமாகவே கட்டுகிறீர்களே, அவர்கள் வேண்டாமென்றால் பிறகு இதில் வேறெதுவும் செய்ய முடியாதே என்று எச்சரித்த போதும் மீறி அவர்கள் விருப்பப்படியே எல்லாவற்றையும் செய்து கொடுத்தேன். மேலும் பள்ளிக்கு என்று கட்டியபின் அப்புறம் அதில் வேறு என்ன இருக்கிறது.? ஒரு கட்டத்தில் இக்கட்டிடத்தை பள்ளிக்கே தானம் கொடுத்து விடுவேன் என்றேன். அதுதான் என்மனநிலை.

இப்படி இருக்க கொரனா லாக்டவுன் நேரத்தில் திடீரென்று இந்த கட்டிடம் எங்களுக்கு வேண்டாம் என்றும் வாடகை கொடுக்க வசதியில்லை என்றும் கூறினர்.

அப்போது நான், வாடகை ஒன்றும் பிரச்னையில்லை, பள்ளி நடக்காத மாதங்களுக்கு தள்ளுபடி செய்யக்கூட தயாராக இருக்கிறேன். என்ற தகவலை அனுப்பி னேன்.

சில நாள் கழித்து இக்கட்டிடத்தை காலி செய்து கொண்டதாக எனக்கு ரிஜிஸ்தர் தபால் வந்தது. அப்போது சில நிர்வாகிகளை வெளியில் சந்தித்து ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்னதான் பிரச்னை என்று கேட்டபோது, படித்தவர்களா இவர்கள்? என்று கேட்குமளவு மோசமாக பேசி நடந்து கொண்டனர். எனினும் அடுத்தடுத்து இரண்டாவது, மூன்றாவது என ரிஜிஸ்தர் தபால் எனக்கு வந்தது. இதன் பின் நான் இக்கடிதத்தின் நோக்கம் என்ன என்று அறிந்து கொள்ள முயற்சித்த போது, இவர்கள் சட்ட நடவடிக்கை மூலம் இடத்தை காலி செய்து அனுப்ப இருக்கிறார்கள் என தெரிய வந்தது.

அப்போதும் நான் பொருமையுடன் நேரடியாகவே பள்ளி அலுவலகத்திற்கு போனேன். என்னுடன் சில முக்கிய பிரமுகர்களையும் அழைத்துக் கொண்டு போனேன். அவர்களிடம்,

பக்கத்திலிருக்கும் என்னை அழைத்து பேச தயங்கும் நீங்கள் ரிஜிஸ்தர் தபால் வரிசையாக அனுப்புகிறீர்களே ஏன் என்று கேட்டேன். இந்த பில்டிங் உங்கள் தேவைக்கு உங்கள் விருப்பப்படி, கூடுதல் செலவு செய்து பள்ளி கட்டிடமாகவே உருவாக்கப்பட்டது. இதை நீங்கள் திடீரென்று காலி செய்தால் வேறு எதற்கு இதை பயன்படுத்த முடியும் என்று கேட்டேன். மேலும் முப்பது ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வேண்டும் என்றீர்கள். நூறு ரூபாய் பத்தரத்தில் ஒப்பந்தம் எழுதிக் கொள்ளலாம் என்றேன். இல்லை ஒப்பந்தம் ரிஜிஸ்தர் செய்ய வேண்டுமென்றீர்கள். நீங்களே இரண்டரை லட்சம் செலவு செய்து ரிஜிஸ்தர் செய்தீர்கள். பிறகு ஏன் அந்த ஒப்பந்தத்தை முறிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு கேவலமாக, வாடகை இழப்பு உங்களை அச்சப்பட வைக்கிதா என்று கூறினார்கள்.

இப்போது காலி செய்யும் நீங்கள் ஒரு வருடம் முன்பு தகவல் சொல்லி இருந்தால், எனது மகன் நினைவாக நான் கட்டிய மத்ரசா பஹத் லில் பனாத் என்ற பெண்கள் மத்ரசாவை இதில் நடத்தியிருப்பேனே, ஒரு கோடி ரூபாய் செலவு செய்து ஜன்னத் நகரில் நான் கட்டி முடித்து பள்ளியை தொடங்கிய பின் சொல்கிறீர்களே என்றும், கேட்டேன். உங்கள் பிரச்னை எங்களுக்கு வேண்டாம். எங்கள் முடிவு இதுதான் என்றார்கள்.

அவர்களிடம் சகோதர மனப்பாண்மையோ, சினேகமோ இல்லை. படித்தவர்கள் என்ற பெருமையும் ஆணவமுமே இருந்தது. இனி இவர்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை என்று விளங்கிய நான், முப்பது ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து தரவேண்டும். மூன்றாம் மாடி மற்றும் வகுப்பறைகளை மாற்றி சாதாரண கட்டிடமாக ஆக்க செலவை நீங்களே ஏற்க வேண்டும். அல்லது நஷ்டயீடு கொஞ்சம் கொடுக்க ஒப்புக் கொண்டால் நானே செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். அதன் பிறகும் எந்த தீர்வும் இல்லை. சாவியை மட்டும் அலுவலகப் பையன் கொண்டுவந்து கொடுப்பார். வாங்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் இக்கட்டிடத்தின் பேரில் அரசு அங்கீகாரம், பேரூராட்சி அங்கீகாரம், இன்னபிற சட்ட நடவடிக்கைகள் என்ன இருக்கிறது என்பதை அறியவும், அதை நானே சீர் செய்து கொள்ளவும் வேண்டி தகவல் அறியும் உரிமை சட்டப்படி தகவல் கேட்டேன். இதில் எனது கட்டிடத்தில் உள்ள விபரம் மற்றும் அதை சார்ந்து செய்துள்ள நடவடிக்கை விபரத்தை மட்டும்தானே கேட்டேன்? அது எப்படி பள்ளிக்கு நான் குந்தகம் செய்ததாகும்?

என் பில்டிங் சம்பந்தமாக நீங்களும் எதுவும் செய்ய மாட்டீர்கள்? நானும் செய்யக் கூடாதா? நான் செய்தால் என் மீது பழி போட்டு ஊர் மக்களிடம் என்னை வில்லனாக காண்பிப்பீர்களா?

அதிகாரத்தை வைத்து நான் எதிராக செயல்படுவதாக சொல்கிறீர்களே, அப்படியிருந்தால் முகவரியில்லாமல் மத்ரசாவுக்கு நீங்கள் அனுப்பிய கடிதத்தை வைத்து 13-10-2020 அன்று நடந்த கூட்டத்தில் பல முடிவுகள் எடுத்து உங்களுக்கு தொந்தரவு கொடுத்திருக்க முடியும். செய்தேனா? அல்லது அதே மத்ரசாவில் நான் ஏதும் மனு கொடுத்து உங்களுக்கு எதிராக நான் செயல்பட்டேனா? ஏன் அபாண்ட பழி சுமத்துகிறீர்கள்?

உண்மையை எல்லோரிடம் சொல்லி என்மீதுள்ள பழியை துடைக்கவே இந்த நீண்ட பதிவை வெளியிட்டுள்ளேன். நீதி நியாயம் தெரிந்த பெரியோர்களும் ஜமாஅத்தார்களும் உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும். வலைதளப் போராளிகளில் சிலர் இரண்டு தரப்பையும் கேட்காமல் தனது நிலைப்பாடு மட்டுமே சரி என்று பதிவிடுவதை சீர் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் நான் மேற்கூறியுள்ள அனைத்தும் அல்லாஹ் மீது சத்தியமாக உண்மை.

K.A.அமானுல்லா. 15-10-2020.

Tags: லால்பேட்டை

Share this