கல்யாண ராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! :மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தை அமளிக் காடாக்க சில மதவெறி சக்திகள் திட்டம் தீட்டுகின்றன. தேர்தல் நேரத்தில் இதை தீவிரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவும் அவர்கள் எண்ணுகிறார்கள்.
நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் வலதுசாரி வகுப்புவாதியான கல்யாணராமன் என்பவர் பேசிய கருத்துகள் நேற்று இரவு தமிழகத்தில் கொந்தளிப்பான நிலையை உருவாக்கியதால், அவர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து இது போன்று பேசியும், எழுதியும் வருகிறார். பல சமயம் காவல்துறைக்கும் சவால் விடுகிறார்.
காவல்துறை அவர் விஷயத்தில் காட்டும் மென்மையான அணுகுமுறை அவருக்கு அசட்டு துணிச்சலை தந்திருப்பதாக கருதுகிறோம்..
இப்போது மக்களிடம் எழுந்த ஆவேசங்களால் அவர் வேறு வழியின்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.
பிற மதங்களை இழிவுப்படுத்துதல், பிற சமூக தலைவர்களை வம்புக்கிழுத்தல், சமூக ஒற்றுமையை சீர் கெடுத்தல் என்பது போன்ற அவரது அத்துமீறல்களுக்கு சட்டப்பூர்வ முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இது போன்ற வன்முறையை வளர்க்கும் தீய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும்
ஒருவர் உணர்வை ஒருவர் மதித்து வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்வதே பண்பாடாகும்.
மாமன் - மச்சான்களாகவும், அண்ணன் - தம்பிகளாகவும் ஒரு குடும்ப உறவு போல எல்லோரும் வாழும் தமிழ் மண்ணில் அத்தகைய உயர்ந்த கலாச்சாரத்தை பாதுகாத்திட அனைவரும் அக்கறைக் காட்ட வேண்டும் எனவும், மக்களை பிளவுப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் தமிழக மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
Tags: செய்திகள்