Breaking News

நிரந்தர நண்பனுமில்லை, எதிரியுமில்லை நவீன உலகில்!

நிர்வாகி
0

இந்த வருடம் பிப்ரவரி 25 ந்தேதி பாக் பிரதமர் அரசு பயணமாக இலங்கை பயணம் மேற்கொண்டபோது இந்திய வானில் அவருடைய விமானம் பறக்க நமது நாடு அனுமதி அளித்தது என்று அனைத்து பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் படம் பிடித்துக் காட்டின. அதற்கு காரணம் நமது நாட்டின் ஜனாதிபதி ஐலாண்ட் பயணமாக 2019 வருடம் செப்டம்பர் 7ல் பயணம் மேற்கொண்டபோது பாகிஸ்தான் நாட்டின் வான் வெளியினை பயன் படுத்த அனுமதி அளிக்கவில்லை. அதற்கு காரணம் அந்த நாடு சொல்லும்போது ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் சிறப்பு சலுகையினை ரத்து செய்ததினை காரணமாக காட்டப் பட்டடது.

பிரிட்டிஷ் அரசினை இந்திய மண்ணிலிருந்து இணைந்து போராட்டம் நடத்தி விரட்டி விட்டு இந்திய துணைக் கண்டத்தினை இரு கூறாக்கி இந்திய நாடு என்று 1947 ஆகஸ்ட் மாதம் 15 சுதந்திர நாடாகவும் இந்தியாவிற்கு மேற்கு-கிழக்குப் பகுதிகளை இரண்டாக இணைத்து பாகிஸ்தான் நாடாகவும் 1947 ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி சுதந்திர நாடாகவும் அறிவித்தது உங்களுக்குத் தெரியும். அவ்வாறு இரு கூறாக ஆக்கியத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப் பட்டாலும், அவ்வாறு பிரிந்ததினால் இரு நாடுகள் சந்தித்த சவால்கள் பற்றி இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

இந்தியா சந்தித்த சவால்களை மூன்று பகுதிகளாக காணலாம்:

1) முதல் பகுதி(1947-1967) சொத்துப் பிரித்தல்: ஒப்பந்தப் படி இந்தியா பாகிஸ்தானுக்கு ரூ 55/ கோடிகள் கொடுப்பது. அகதிகள் பிரட்சனை: 1948ம் வருட மத்தியில் 50,50,000 இந்துக்கள் இடம் பெயர்ந்து இந்தியாவிற்கும், அதேபோன்று அதிக அளவில் முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து பாகிஸ்தானுக்கும் சென்றனர். அவர்களில் இந்துக்கள் ரூ 500 கோடி சொத்துக்களும், முஸ்லிம்கள் ரூ 100 கோடி சொத்துக்களும் விட்டுவிட்டு இடம் பெயர்ந்தனர்.

காஷ்மீர் பிரட்சனை: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் நீங்கா பிரட்சனை இருப்பது காஷ்மீர் ஆகும். காஷ்மீரை ஆண்ட மன்னன் ஹரி சிங் ஆகும் ஆனால் 75 சதவீத மக்கள் முஸ்லிம்கள் ஆகும். பிரிவினையின் போது காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் கொடுத்தது ஷேய்க் அப்துல்லா ஆகும். ஆனால் மன்னர் ஹரி சிங் தனி அரசராக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதன் பின்னர் இந்திய அரசு காஷ்மீரை இணைக்கும்போது முஸ்லீம் வாழும் பகுதி பாகிஸ்தான் துணையுடன் ஆசாத் காஷ்மீனாரது. அதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் சமரச பேச்சில் இந்திய காஷ்மீர் மக்கள் விருப்பம் என்ன என்று அறிய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப் பட்டது. ஆனால் அது இது வரை நிறைவேறவில்லை.

1950ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றிய பிறகு 1951ல் முதலாவது தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் 70 சதவீத வாக்குகளைப் பெற்று அரியணையில் ஏறியது. அப்படி பதவி ஏற்ற பிறகு முதல் சவால் மொழிவாரி மாநிலம் கேட்டு நடந்த போராட்டம். ஆங்கிலேயர் இந்தியாவினை பிரிவினை செய்யும்போது இங்குள்ள மக்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநிலங்களை பிரிக்கவில்லை. ஆகவே தான் சுதந்திரத்திற்கு பின்பு போராட்டம் நடந்தது.

இண்டஸ் நதி நீர் பங்கீடு சிக்கல்: இண்டஸ் நதி பியாஸ், செனாப், கார், கொல்கிட், ஹான்ஸ், ஜீலம், கபூர், ரவி உள்ளடக்கிய 19 நதிகளைக் கொண்டது. அவை சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்கைக்குள் செல்கிறது.

இந்திய-சீன எல்லை வரம்பு லார்ட் மௌண்ட்பாட்டன் எல்லைக் கோடு இமய மலையினை ஒட்டியுள்ளது. திபெத்தினை சீனா ஆக்கிரமிப்பு 1959ல் செய்தபோது புத்த மத தலைவர் தலாய் லாமா இந்தியாவிற்கு அடைக்கலம் புகுந்தார். அதனை எதிர்த்த சீனா 1962 அக்டோபர் மாதம் தனது ஆக்கிரமிப்பினை தொடர்ந்தது. அதனை இந்தியா எதிர்த்தது. 1962 நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா-பாக் யுத்தம்-1965: பாகிஸ்தான் இந்திய காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளை 1965 ஏப்ரல் மாதம் அனுப்பத்தொடங்கியது. அதன் பின்னர் இரண்டு நாடுகளும் தீவிரமான யுத்தத்தில் இறங்கின. அதன் பின்பு ரஷியாவும், அமெரிக்காவும் முயற்சி எடுத்து ஐ.நா மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு ஜவஹர்லால் நேரு மறைவு, லால் பகதூர் சாஸ்திரி பதவியேற்று தாஷ்கண்ட் ஒப்பந்தமும் செய்து கொள்ளப் பட்டது. அதன் பின்பு லால் பகதூர் சாஸ்திரி மறைவு ஆகியவை காங்கிரஸ் ஆட்சியினை அதிகமாக பாதித்தது. பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி 1966ல் அரியணையில் பிரதமராக ஆனார்.

இரண்டாம் பாகம்(1967-1977)

1967ல் நடந்த தேர்தல் காங்கிரஸ் குறைந்த அளவே உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. எதிர்க்கட்சிகள் தங்களுடைய பலத்தினை அதிகப் படுத்தினர்.

நக்சால்பாரி தலையெடுத்தல் : வேலையின்மை, மிட்டா மிராசுதாரர்கள் ஏழை விவசாயிகளை கொடுமைப்படுத்தியது போன்ற பிரச்சனைகள் நாக்சால்பாரி என்ற தீவிரவாத இயக்கம் மேற்கு வங்காளத்தில் நாக்சால்பாரி என்ற கிராமத்தில் வித்திட்டு படிப்படியாக தென் மாநிலங்களுக்குப் பரவியது. அதன் குறிக்கோளே ஜனநாயகம் வன்முறையில் தான் செயல் படுத்தமுடியும் என்பது தான். பங்களாதேஷ் யுத்தம்: இந்தியா பங்களா தேஷ் யுத்தத்தில் 1971ல் பங்கேற்றது. அதன் பின்பு தனியார்வங்கிகள் தேசியமாக்கப் பட்டது.

இளைஞர்கள் வேலையின்மை, நிர்வாகம், அரசியலில் ஊழல் ஆகியவை அரசினை மிகவும் பாதித்தது. மக்கள் கிளர்ச்சி பல இடங்களில் ஏற்பட்டது. வினோபாஜியின் சீடரான பிஹாரைச் சார்ந்த ஜெயபிரகாஷ் நாராயணன் ஒரு பெரிய இயக்கமே ஆரம்பித்து மக்கள் புரட்ச்சிக்கு வித்திட்டார். அதனை ஒடுக்க இந்திரா காந்தி எமெர்ஜென்சியினை அமல் படுத்தினார். அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி செய்த குடும்ப கட்டுப்பாடு, எதிர் கட்சி தலைவர்கள் சிறை போன்றவை மக்களை உலுக்கச் செய்து காங்கிரஸ் மீது வெறுப்பு உண்டாக்கியது. பாகம் மூன்று1977-1984: தன்னுடைய கட்சி பலத்தினை அதிகரிக்க 1977ல் இந்திரா தேர்தல் அறிவித்தார். ஆனால் பரிதாபமாக அவரும், சஞ்சய் காந்தியும் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டனர். எதிர் கட்சிகள் இனைந்து ஜனதா அரசு அமைத்தது. பாடுபட்டு அமைத்த அரசு கோமாளித்தனமான சில தலைவர்களாலும் அவர்கள் செயல் படுத்திய திட்டங்களாலும் மக்கள் நம்பிக்கையினை இழந்தனர். மறுபடி 1980ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

பஞ்சாப் தீவிர வாத இயக்கம்: பழைய பஞ்சாப் மாநிலம் சீக்கியர்களையும், ஹிந்துக்களையும் கொண்டதாக அமைந்தது. பிரிவினைக்குப் பின்பு அகாலி தால் தனி நாடு வேண்டும் என்று குரல் கொடுத்தது. சீக்கியரின் பொற்கோவிலிலே தங்கள் தீவிர வாத தளத்தினை அமைத்தினர். ஒரு பக்கம் லோங்கோவால் தலைமையில் மிதவாத இயக்கமும், இளைஞர் பட்டாளம் இளைஞர் மதகுரு பிந்தரன் தலைமையில் தீவிரவாத இயக்கமாகியது. வன்முறை தாங்காமல் இந்திரா காந்தி பொற்கோயிலுக்குள் டாங்கி படையினை அனுப்பி அவர்களை ஒதுக்கினார். அதன் விளைவு இரும்பு பெண் என்றழைக்கப் பட்ட இந்திரா காந்தி சீக்கிய தீவிரவாத படை பிரிவினரால் தனது வீட்டிலேயே கொல்லப் பட்டார்.

பாகிஸ்தான் சந்தித்த சவால்கள் :

14.8.1947 அன்று இரவு சுதந்திரம் அடைந்தது. அதன் ஜனாதிபதியாக முகமது அலி ஜின்னாவும், பிரதமராக லியாகத் அலி அவர்களும் பொறுப்பேற்றார்கள். அந்த நாடு அரசியல், பொருளாதாரம், பூகோள அமைப்பில் ஒத்துவராத நாடாக அமைந்தது. குறைந்த பொருளாதாரத்தினை வைத்து லட்சக் கணக்கான அகதிகளை சீரமைக்க பெரும் செலவானது. பாகிஸ்தானின் மேற்குப் பகுதி ஒரு பக்கமும், கிழக்கு பகுதி மேற்கு வங்காளத்தினை ஒட்டி அமைந்தது.

27, Oct, 1947ல் இந்தியாவுடன் அறிவிக்கப் படா போர் நடந்தது. 21.3.1948ல் பல மாநிலங்கள் உரிமை கேட்கும் போராட்டமும் ஆரம்பித்தது.1948ம் வருடம் ஏப்ரல் மாத தண்ணீர் பகிர்தளித்தல் சம்பந்தமாக சச்சரவு ஏற்பட்டது. மகாத்மா காந்தி சுடப் பட்டு இறந்த வருடம், 11.9.1948 அன்று கவர்னர் ஜெனரலாக இருந்த ஜின்னா அவர்கள் மறைந்தார்கள்.

1) பூகோள தாக்கம்:

பாகிஸ்தான் இயற்கையான எல்லையும், நதியும், மலையுமில்லை. கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பகுதிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் அப்பால் இருந்தது. அவர்களுக்குள் அவர்களுடைய மார்க்கமான இஸ்லாத்தினைத் தவிர எந்த பிணைப்புமில்லை.

2) மதக் கலவரம்:

கலவரத்தில் 10 லட்சம் மக்களுக்கு மேல் இடம் பெயர்ந்தனர். எண்ணெற்றோர் மறைந்தனர். 3) அரசு சம்பந்தமான தஸ்தாவேஜுகள் டெல்லி, கோல்கட்டா மற்றும் கராச்சியிலிருந்து வரவேண்டிருந்தது. மேற்கு பாகிஸ்தானிலுருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு எண்ணெற்ற அதிகாரிகள் இடம் பெயர வேண்டியதிருந்தது. 4) பெரிய தொழிற்சாலைகள் இல்லை. 70 சதவீதம் விவசாயத்தினை நம்பி இருந்தனர். 90 சதவீதம் சணல் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து ஏற்றுமதியானது.

5) பதிவு செய்யப் பட்ட தொழிற்சாலைகள் 10 சதவீதம், மின்சாரம் 5 சதவீதம், தாது வளங்கள் 10 சதவீதம்.

6) இந்தியா பொருளாதாரம் மற்றும் ராணுவ தளவாடங்களில் 17 சதவீதமும் பாகிஸ்தானுக்கு 5 சதவீதமும் என்ற விகிதாசாரத்தில் பிரிவு செய்யப் பட்டது.

7) இண்டஸ், ஜீலம், செனாப் நதிகள் சம்பந்தமான தகராறுகள் தீர்பாயத்திற்கு அனுப்பி வைப்பது. பாகிஸ்தானின் நீங்கா சிக்கல்களாக கீழ்க்கண்டவை இருந்து வருகின்றன:

1) இங்குள்ள மக்கள் ஒரே கலாச்சாரத்தினை சேர்ந்தவர்களாக ஒற்றுமையாக இருந்ததில்லை. வடக்கே பக்துன் இனமும், மேற்கே பலூச் இனமும், தெற்கே சிந்தி இனமும், வட கிழக்கில் பஞ்சாபி மக்களும், கிழக்கே பெங்காலி இனமும், தனி மொழியுடன் செயலாற்றினர். 2) பெங்காலி மக்கள் பாகிஸ்தான் ஜனத்தொகையில் 56 சதவீதம் இருந்தனர். ஆனால் 6 சதவீத மக்கள் உருது மொழி பேசுவதாகவும் இருந்தனர். 1948 ம் வருடம் ஜூன் மாதம் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் ஜின்னா அவர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு வருகை தந்தபோது இனிமேல் உருது பொழிதான் ஆட்சிமொழி என்ற பொரியினை கொழுத்திப் போட்டது தான் தாமதம் அங்குள்ள மக்கள் தங்களுக்கு சுயாட்சி வேண்டுமென்று கூறி குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

3) பாகிஸ்தானில் பொது மக்கள் கல்வி, கேள்வியில் பின் தங்கி இருந்தனர். கிழக்கு பாகிஸ்தானில் டாக்காவில் மட்டும் ஒரு பல்கலைக் கழகம் இருந்தது.

4) காஷ்மீர் சிக்கல் மிகவும் தலைவலியானது. மஹாராஜா ஹரி சிங் முஸ்லிம்களை மதித்து நடக்கவில்லை. ஆகவே லட்சக் கணக்கான மக்கள் பாகிஸ்தான் நோக்கி இடம் பெயர்ந்தனர். பாகிஸ்தான் தனது படையினை அனுப்பியது. ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போர் நிறுத்த ஒப்பம் செய்தது. அதன் படி காஷ்மீர் மக்கள் தங்கள் அரசியல் அமைப்பை முடிவு செய்ய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது என்று. ஆனால் அது இது வரை நடத்தப் படவில்லை.

5) கிழக்கு பாகிஸ்தான் மக்கள்தங்களை மேற்கு பகுதி மக்கள் புறக்கணிக்கின்றனர் என்று எண்ணி 1950ல் தங்களுக்கு தனி நாடு வேணுமென்று 1950ல் குரல் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து 1969ல் பொது மக்கள் புரட்சி கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு 1970ல் நடத்தப் பட்டது. அந்த தேர்தல் முடிவில் அவாமி லீக் அதிக இடம் பிடித்தது. முஜீப் ரஹ்மான் கிழக்கு பாகிஸ்தானுக்கு அதிபராக பிரகடனப் படுத்தப் பட்டார். மேற்கு பாகிஸ்தான் அவருடைய ஆட்சியினை கலைக்க படையினை அனுப்பியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஏப்ரல் மாதம் 1971ல் தனி நாடு என்று அறிவித்தனர். 3-4, டிசம்பர் 1971ல் இந்திய-பாகிஸ்தான் யுத்தம் ஆரம்பித்து மேற்கு பாகிஸ்தானிலிருந்து ஏற்கனவே அனுப்பிய படையினருக்கு உதவி வராததால் அங்குள்ள படையினர் இந்திய படையினரிடம் சரணடைந்தனர் என்பது ஒரு வரலாறு. மேற்கோள் காட்டப் பட்ட தவிர்க்கமுடியா மற்றும் நீங்கா தகராறுகளால் இரண்டு நாட்டு அரசுகளும் எலியும், பூனையுமாக இருந்து வருகின்றனர். அதனை ஐநா சபை கூட தீர்க்க முடியவில்லை. கும்பனி ஆட்சியினை விரட்ட அண்ணன் தம்பிகளாக இணைந்து குரல் கொடுத்த நாம் அந்த இடியப்ப தீர்க்க முடியவில்லை என்பது ஒவ்வொரு குடிமகனுடைய குறையாக இருக்கின்றது என்பது சமீப கால நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

இது போன்ற இரு நாடுகள் மனஸ்தாபங்கள் நமக்கு மட்டுமல்ல மாறாக எங்கெல்லாம் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் நடந்து இரண்டாம் உலக போருக்கு பின்னால் விடுதலை அடைந்ததோ அங்கெல்லாம் இதுபோன்ற சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மனித இனம் ஒன்றே அவன் நிம்மதியாக அமைதியாக வாழ வேண்டும் என்று எண்ணம் எப்போது வருகின்றதோ அது வரை இந்திய-பாக் இடியாப்ப சிக்கல் போன்று தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு நாடு நாயகமான ஐநா சபை தீவிர நடவடிக்கைகள் எடுத்து தீர்த்து வைப்பதே தலையாய கடமையல்லவா?

Tags: கட்டுரை

Share this