Breaking News

சென்னையில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம்

நிர்வாகி
0

சென்னை ராயபுரம் ரம்ஜான் மகாலில் 7.8.2021 அன்று நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை ராயபுரம் ரம்ஜான் மகாலில் ஆகஸ்ட்7 காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது பொருளாளர் உமர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளும் மாவட்ட தலைவர்களும் பங்கு கொண்டனர். இக்கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து சந்திப்பது என்றும் மனிதநேய மக்கள் கட்சி தனது பலத்திற்கேற்ற வகையில் அதிகமான இடங்களில் போட்டியிடுவது என்றும், கூட்டணிக் கட்சிகளை வெற்றிபெற வைக்க முழுவீச்சில் பாடுபடுவது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது. சச்சார் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உறுதி எடுத்துக் கொண்டுள்ள தமிழக அரசு உள்ளாட்சி மன்றங்களில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2: மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது

தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் கர்நாடக பாஜக அரசு காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என ஒன்றிய பாஜக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு (ஓபிசி) இந்த ஆண்டை 27% இடஒதுக்கீடு அறிவித்திருப்பதை இக்கூட்டம் வரவேற்கிறது. திமுக மற்றும் சமூக நீதியில் அக்கறைக் கொண்ட இயக்கங்களின் தொடர் போராட்டத்திற்கும் அதனால் கிடைத்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் இணங்கி ஒன்றிய அரசு இம்முடிவை அறிவித்துள்ளது என்றாலும், பொருளாதாரத்தில் பின்னடைந்தோர் என்ற பெயரில் (EWS) உயர்சாதியினருக்கு 10% ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்திருப்பது சமூகநீதிக் கருத்தியலுக்கும், சட்ட விழுமியங்களுக்கும் எதிரானது என்பதை இக்கூட்டம் வலியுறுத்துவதோடு உயர்சாதியினருக்கு 10% ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு கைவிட வேண்டுமென்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 5% ஆக முஸ்லிம் தனி இடஒதுக்கீட்டை உயர்த்துக

திமுக அரசால் 2007ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% தனி இடஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த வேண்டும் என்று இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்ட பணியிடங்கள் குறித்து தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் நிரப்பபட பணியிடங்களை நிரப்புவதற்கு சிறப்பு சேர்க்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: இனசுழற்சி முறையில் திருத்தம்

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% தனி இடஒதுக்கீடு பல இடங்களில் முஸ்லிம்கள் சமூகநீதி பெற உதவுகிறது. அதேநேரம், இனசுழற்சி முறைத் திட்டம் (Communal Roaster System) மூலம் பல இடங்களில் பாதிப்புகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. பத்து அல்லது இருபது இடங்களே உள்ள மருத்துவ உயர்கல்விப் பிரிவுகளில் முஸ்லிம் மாணவர்கள் இணைவதற்கு நடைமுறையில் உள்ள இனசுழற்சி முறை எதிராக உள்ளது. எனவே, நெடுங்காலமாகப் புறக்கணிப்பை சந்தித்துள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் இனசுழற்சி முறையை சீர்திருத்தி அமைக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6 வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை

உச்சநீதிமன்றம் சமீபத்தில் அரியானா அரசு எதிர் ராஜ்குமார் வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக சிறைகளில் 14 ஆண்டுகளுக்கு மேல் வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது..

தீர்மானம் 7: கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம்

திருமணம், மணவிலக்கு ஆகியவை முஸ்லிம்களின் தனியார் சட்டத்திற்கு உட்பட்டவை ஆகும். கட்டாயத் திருமணப் பதிவு சட்டத்தைக் கருவியாக ஆக்கி பல இடங்களில் அதிகாரிகள் முஸ்லிம்களை அலைக்கழித்து வருகின்றனர். எனவே, திருமணத்தை நடத்தி வைக்கும் ஜமாஅத் மற்றும் சமுதாய அமைப்புகள் தரும் திருமணப் பதிவுச் சான்றிதழை அப்படியே ஏற்றுப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என பதிவுத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட இக்கூட்டம் கோருகிறது. மேலும், ஷரீஅத் சட்டங்களில் புறத் தலையீடுகள் இன்றி, அரசியல் சாசனம் தந்த உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8 உணவுப் பழக்கவழக்கங்களில் வெறுப்பரசியல்

தமிழர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் ஆரிய மதவாதத்தைப் புகுத்தி, அதன் மூலம் சமூகத்தில் வெறுப்பரசியலை விதைத்து அரசியல் ஆதாயம் தேட முயலும் சங்பரிவார ஃபாசிசக் கும்பலை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் வெறுப்பரசியல் விதைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஒரு சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9 சச்சார் பரிந்துரைகள்

சிறுபான்மை முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளைத் துல்லியமாக ஆய்வு செய்து நீதியரசர் ராஜிந்தர் சச்சார் குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை தமிழக அளவில் நடைமுறைப்படுத்தி இந்தியாவுக்கே தமிழகம் சமூக நீதியில் முன்மாதிரியாகத் திகழ்ந்திட ஆவன செய்திட வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10 லாட்டரி ஒழிப்பு

மக்களின் வாழ்வைச் சிதைக்கின்ற சூதாட்டமான லாட்டரியை எக்காரணத்தை¢ முன்னிட்டும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. மாறு வேடத்தில் நடக்கும் லாட்டரி சூதாட்டங்களையும் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11 ஆன்லைன் ரம்மி மேல்முறையீடு

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அரசு விதித்திருந்த தடையை நீதிமன்றம் நீக்கியிருப்பது கவலையளிக்கிறது. தமிழக அரசு முந்தைய அதிமுக அரசு இயற்றிய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி புதிய தடை சட்டத்தை இயற்றி அனைத்து வகை இணையவழி சூதாட்டங்களையும் தடை செய்ய வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 12 டாஸ்மாக்

பூரண மதுவிலக்கு கொண்ட பொலிவு மிகு தமிழகத்தை உருவாக்கும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் நேரத்தைப் படிப்படியாகக் குறைத்து அவற்றை ஒட்டுமொத்தமாக மூடுவதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தீர்மானம் 13 சிறுபான்மைத் தகுதிகளை முறைகேடாகப் பயன்படுத்துவது சிறுபான்மைச் சமுதாயங்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவதற்காக அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட தமிழக அரசு உறுதி கொள்ள வேண்டும். அதேநேரம், சிறுபான்மைத் தகுதியை முறைகேடாகப் பயன்படுத்தி, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் ஆகியவற்றில் லஞ்ச ஊழலை எல்லையில்லாமல் செய்கின்ற கருப்பாடுகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அநீதிக்கு துணைபோகாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீது, சிறுபான்மை உரிமையைப் போர்வையாக்கிக் கொண்டு மிகச் சில நிறுவனங்கள் செய்து வரும் ஒடுக்குமுறைகளைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 14 மதம் மாறியவர்களுக்கு பிசிஎம் தகுதி

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சார்ந்த யாராக இருந்தாலும் அவர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ( BCM) பிரிவின் கீழ் வகைப் படுத்த வேண்டும். இது தொடர்பாக மு.ஆரிபா எதிர் தமிழக அரசு வழக்கிலும், சோனா எதிர் தமிழ்நாடு அரசு வழக்கிலும் உயர் நீதிமன்றம் இது தொடர்பாக இஸ்லாமிய மதத்திற்கு மாறும் நபர்களை பிற்படுத்தபட்ட முஸ்லிம் (BCM) ஆக அங்கீகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து உரிய அரசாணை வெளியிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 15 ஐஐடியில் மாணவர்களுக்கு பாதுகாப்பு

ஐ.ஐ.டி. என்னும் இந்திய அரசின் அதிஉயர் கல்வி நிறுவனத்தில் இடம் கிடைப்பது கடினமானதாகும். அப்படி சிரமப்பட்டு இடம்பிடிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களில் 60% பேர் ஏழு ஐ.ஐ.டி.களில் பாதியில் கல்வியை விட்டு வெளியேறும் அபாயத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. குவாஹாத்தி ஐ.ஐ.டி.யில் 88%, டெல்லி ஐ.ஐ.டி.யில் 76% தலித் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தியிருப்பது வேதனைக்குரியது.

உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை சமுதாய மாணவர்களின் பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

Tags: செய்திகள்

Share this