Breaking News

சிறுகதை : விடியாத பகல்..

நிர்வாகி
0

 

 

 குளித்துவிட்டு முகக் கண்ணாடியில் தாடியைச்  சீவிக் கொண்டு தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டு சந்தோஷமாய்  வெளியேறினான் ஹபீப்.

நண்பர்களோடு நேரங்களை செலவளித்துவிட்டு   வீட்டுக்குத் திரும்பத் தனது இருசக்கரத்தில் அமர்ந்தான். அவனது வாட்சப் குறுச் செய்திக்கான சமிக்கை தந்தது. வண்டியை ஓரம் நிறுத்தி .. வாட்சப்பை திறந்து பார்த்தான்.

அணையிலிருந்து வரும் தண்ணீரைப் போன்று ..பல குறுச் செய்திகள்... வந்து விழுந்தன. அதில் அவன் கண்ணுக்கு ஒரு குறுச் செய்தி முக்கியமாகப் பட்டதால் திறந்து படித்தான்.... பின்பு மின்னஞ்சல் பக்கம் தனது பார்வை மேயவிட்டான் மலர்ந்த முகம்இருண்ட வானத்தின் நிறத்தை உடுத்திக் கொண்டது‌.

வீட்டுக்கு வந்தான். அப்படியே கட்டிலில் படுத்தான்.  கவலையை ஆடையாக அவனது முகம் அணிந்திருந்தது. சுவரில் தொங்கிய நாட்காட்டி பக்கம் சென்று நாட்காட்டியில் 22 ஆம் தேதிக்கான காகிதத்தை கிழித்து கையில் வைத்துக் கொண்டான்.

 "ஏன் என்னாச்சின்னு அவனது தந்தை கேட்டார்" ..

 "24 ஆம் தேதி காலை 7 மணிக்கெல்லாம்     டூட்டியில் இருக்கனுமாம்... இல்லையென்றால் கேன்சல் பேப்பர் அனுப்பிவிடுவோம்" என்று அவனது  நிறுவனத்தின்  மேலாளர் மின்னஞ்சல் அனுப்பியதைத் தெரிவித்தான்.

ஹபீப் துபையில் பத்து வருடமாக ஒரு  நிறுவனத்தில் வேலை செய்துவருகிறான். 30 நாள் விடுமுறையில் வந்தவன்... தம்பி திருமணத்திற்காக விடுமுறையை  நீட்டிக்கதான் பணி செய்யும் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் செய்திருந்தான். அதை ஏற்காமல் அவனது நிறுவனம் அனுப்பிய மறுமொழி மின்னஞ்சல் தான் அது‌.

 

"அல்லாஹ் இருக்கான் ... இந்த வேலை உனக்கு கிடைச்சது பெரும் பாக்கியம்". "நீ டிக்கட் போட்டு போறே.. வேலையைப் பார் என்று" தன்னை மீறி கண்ணில் வழியும் கண்ணீரை மகனுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டார் ...

அவனது மகள் அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்‌. அவளுக்குப் போட்டியாக அவனது வீட்டில் வளரும் பூனையும் அவனது மடியில் வந்து அமர்ந்து கொண்டது. அதன் முடிகளைக் கோதி விட்டான்.. அதற்கு வசதியாக  இருந்ததால்! அவனது மடியில் தாராளமாக உறங்க இடம் கேட்டது..

 அவனது மகள் எழுந்து அம்மாவை நோக்கி நடந்தாள்.

குண்டுமணி சப்தம் கூடஇடி சத்தம் போல் கேட்குமளவிற்கு வீடு முழுவதும் அமைதி  பரவி இருந்தது.

 துபை செல்வதற்கான தயாரிப்பில் இறங்கினான்.

டிராவல்ஸில் 24 ஆம் தேதி சென்னைலிருந்து இரவு புறப்பட்டுதுபையில்  காலை 5 மணிக்கு சென்றடையும் விமானத்தில்பயணச்சீட்டு எடுத்துக் கொண்டான்.  அந்த விமானத்தில் சென்றால்தான்‌  அவன் மேலாளர் கூறியபடி அதிகாலை ஏழு மணிக்குச் செல்லமுடியும்..

சிறிது தாமதம் குறுக்கே வந்தாலும்ஏழு மணிக்குச் செல்ல முடியாது என்பது தெரியும். என்ன செய்யசில மணிநேரம்  தாய் நாட்டில் இருப்போமே என்ற ஆர்வம் அவனுக்குள் மேலோங்கிப் போனது.  மனைவிமகள் மற்றும் தாய் நாட்டை விட்டுப் பிரிதல் என்பது எவ்வளவு வலி மிகுந்ததுஎன்பது வெளிநாட்டில் பணி செய்பவருக்கு மட்டும் தெரியும். ‌

23 ஆம் தேதி இரவும் வந்தது.. அவனது மனதை ஏதோ கவலைகள்  சிறைபிடித்துக் கொண்டது. எதிர்காலக் கனவு    அவற்றின் பக்கம்      கவனம் செலுத்துவதைவிட்டும் அவன்   முகத்தை திருப்பியது.

 தேவையான பொருட்களை அட்டைப் பெட்டிக்குள் வைத்து கட்டி வைத்திருந்தாள் அவனது மனைவி. தன் தந்தை தன்னை விட்டு வெகு தூரம் செல்லப் போவதை அறியாத இரண்டு வயது மகள் விளையாட்டில் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.பூனை வீட்டின் ஒரு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தது.

 

வீட்டில் உள்ளவர்களிடம் முஸாபஹா செய்து  கொண்டு... வீட்டைவிட்டு வெளியேறினான். அவனது மகள் அவன் மறந்து விட்ட தொப்பியை நீட்டினாள். தந்தை தன்னை விட்டு வெகுதூரம் போவது தெரியாமல் ‌.

மகளை இருக்கைகளால் உயர்த்தி முத்தமிட்டு தலையில் தொப்பியை அணிந்து வெளியேறினான்.

23 ஆம் தேதி இரவு... விமானநிலையத்தில் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. மக்கள் நிற்கும் வரிசையில் ஒரு இடத்தை பிடித்துக்கொண்டான். விமான நிலைய  காவலாளியிடம்... பயணச்சீட்டு மற்றும் கடவுச்சீட்டைக்  காண்பித்து விமான நிலையத்தின் உள்ளே  சென்றான்.

இவனுக்கு முன்னாலும்பின்னாலும்   மக்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.

எடை சரியாக இருந்தது  போன்று விபரக் குறிப்புகளை  ஒரு சிலர் வீட்டிற்குத் தகவல் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.

 இவனுக்குப் பின்னால் நிற்பவர்              " பாய் உங்களைக்  கூப்பிடுகிறார்" என்றார்.யார்?  என்று கேட்க ..

"பாய் இதர் ஆவோ" என்றார் இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட விமான நிலைய காவலாளி.

அவரை நோக்கிச்  சென்றான். அவனுக்கு முன்னாலும்,பின்னாலும் யாரும் நிற்கவில்லை. சற்று பயம் பற்றிக் கொண்டது. இரு கைகளையும் உயர்த்தி நிற்கக் கூறினார் அந்த காவலாளி. அனைவருக்கும் முன்னால் சோதனை செய்யப்பட்டான்.. இவனின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பல நூறு நபர்களைக் கொண்ட விமான நிலையத்தில் இவனை மட்டும் சோதிப்பதால்அனைவரின் பார்வைகளும் இவன் பாக்கம் திரும்பின.

சோதனை முடிந்து வரிசைக்கு மறுபடியும் திரும்பினான்.. இப்போது இறுதி ஆளாக நின்றான்.

Immigration counter லில் கடவுச்சீட்டோடுபயணச்சீட்டை  நீட்டினான்..

 

ஏய் எங்கே போரே" என்றார்  Immigration சோதனை செய்பவர். "சார் கொஞ்சம் மரியாதையாக பேசுங்க என்றான்".

"தாடி வச்சி இருக்கஎந்த அமைப்பு"என்று கேட்டார்.  "நான் எதிலும் இல்லை . கொஞ்சம் மரியாதையுடன் நடத்துங்கள்  என்றான்". "உனக்கு என்ன மரியாதைஏய் நீ சரிவர மாட்ட"  என்றவர் ..தனக்கு மேல் அதிகாரிகளைத்  தொடர்பு கொண்டு அழைத்தார் .

எந்த அமைப்பும் சார்ந்தவனில்லை" என்றான். அவர் காதில் கேட்கவில்லை.

இரண்டு அதிகாரிகள் விரைப்பாகக்  காணப்பட்டனர். விபரம் ஏதும் கேட்க விரும்பாதவர்களாக இருந்தானர். கோபம்  அவர்களின் இயல்பு போல் இருந்தது.

"ஏய் என்ன பிரச்சினை ?‌ இங்கே வா" என்றார் ஒரு அதிகாரி.." நீ என்ன அமைப்புபார்க்கத்  தீவிரவாதி போல் இருக்க உள்ளே வா". என்றார் சப்தத்தை உயர்த்தி ‌.

 ஹபீப் அலைபேசியைப்  பிடுங்கிக் கொண்டு ஒரு அறையில் அமர வைத்து...அவனிடம்

 எதும் பேசவில்லை.  அவன் பேசுவதும் அவர்களுக்கு கேட்கவில்லை‌.கசப்பு மருந்து  சாப்பிட முகம்‌போன்று அவர்கள் முகம் காணப்பட்டன. அவர்களின் பார்வையில்  எள்ளல் மேலோங்கி இருந்தது.

தூக்கம் வராமல் இருக்க அடிக்கடி தேநீர் குடித்துக் கொண்டார் அந்த அதிகாரி. இதற்கிடையில் சிகரெட்டும் புகைந்து கொண்டிருந்தார்.

 சில அதிகாரிகள் அவனது வாட்சப் ... முகநூல் மற்றும் மின்னஞ்சல்  போன்றவற்றை  ஆய்வு செய்வதில்  தங்கள் கவனங்களைக்  கூர்மையாக்கினர்.

பின்னர்தனி அரையில் அமர வைக்கப்பட்டான். இன்னும் கண்காணிப்பு கேமராக்களுடன் கண்காணிக்கப்பட்டான். தன்னை சுற்றி ஏதோ நடக்கிறதுஇவர்களின் சூழ்ச்சிகளுக்கு  நாம் தான் இரை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

"நீ யார்?  உன் நண்பர்கள் என்ன வேலை செய்ராங்க" போன்ற கேள்விகள் அவனின் மனக்கவலைக்குத்  தீனி போட்டன.

குளிரூட்டிகளால் குளிரூட்டப்பட்ட அறையிலிருந்த போதும்வயதுக்கு வந்த பெண்போன்று நெற்றியில்  வியர்வைத் துளிகள்  எட்டிப்பார்த்தன.

"துபையில் வேலை செய்ரேன்...எந்த அமைப்பிலும் இல்லை. என் நண்பர்கள் வியாபாரம் செய்ராங்க. சிலர் வெளிநாட்டில் வேலை செய்ராங்க. எனக்குத்  தந்தை,தம்பி ,மனைவி மற்றும்  மகள் உள்ளனர் " .என்று கூறி முடிக்கும் முன்பு, "பிறகு ஏன் தாடி வச்சி இருக்கே"என்று அதிகாரிகளின் முறையற்ற கேள்விகள் அவனுக்குள் பல அதிர்வுகளை ஏற்படுத்தின.

தன்னை திடநிலையில் கொண்டு வந்து.."அது நபியின் வழிமுறை என்றான்".

"உன் பேரில் எத்தனை FiR இருக்குஎன்று கேட்டார்". மற்றொரு அதிகாரி..

"என் பெயரில் எதுவும் இல்லை... நான் நாளை காலை டூட்டியில் ஏறனும் இந்த ஃபிளைட்டை தவற விட்டால்! என் வாழ்க்கை வீணாகி விடும் என்றான்"

..உன் ஃபிளைட்  போய் 2 மணி நேரம் ஆகுது என்றார்" சிகரெட்டின் சாம்பலைத்  தட்டியவாறு..

என் வாழ்க்கை போச்சு சார் .என்று  தண்ணீரைத்  தவறவிட்ட மீனைப்  போன்று துடித்தான். கதறி அழுதான்...அவனது கதறல்.. அவர்களின் காதுகளில் சிட்டுகளின் ரீங்காரம் போல் கேட்டது.  அவன் அழுகை  அவர்களுக்குள்  எந்தவொரு சலனத்தையும் கொண்டுவரவில்லை. "இவனைப்  பற்றி முழுசா விசாரிச்சாச்சிட்டேன் ...சார்... இவன் மேலே ... எந்த Fir ரும் பதிவாகவில்லை"...என்று காண்ஸ்டபில் காதோடுகாது வைத்துச் சொன்னார்..

 

"அப்படியா"என்றார் ..  அவர் இரண்டு உதடுகளுக்கு மத்தியில் பிடிப்பில்லாமல் சிகரட் தொங்கி புகையைக்  கக்கிக்கொண்டிருந்தது‌."

"ஆமாம் சார் ரொம்ப நல்லவனா இருக்கான்.  இவனை விட்டுவிடுவோம்". "சரி முழு அட்ரஸும்,  கையெழுத்தும் வாங்கிட்டு அனுப்புயா என்றார்" காஃபி குடித்த அடையாளம்‌ அவர் உதட்டில் மீதம் இருந்தது.

ஒகே... நீ "போகலாம்" ...என்றவுடன்..."தொப்பி,தாடி வச்சது குத்தாமா சார்... என் வாழ்க்கையை இப்படி வீணாக்கிடீங்களே"..ன்னு வெளியே வந்தான்..

"இந்தா உன் மொபைல்  எடுத்துக்கோ.. இதுக்கு பிறகு அதிகாரிகள் கிட்ட வேகமா பேசாதே .. போ" என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார் அதிகாரி.

கையில் வாங்கிய அலைப்பேசியை பார்த்தான்‌. பல தவறவிட்ட அழைப்புகள் வந்திருந்த தகவல்கள் இருந்தன. தன் பொருட்களை எடுத்து வெளியேறும் போது‌‌ ..    வேலையிலிருந்து நீக்கிய நிறுவனத்தின் மின்னஞ்சல் முன்னால் நின்றது..

 

                                                                                                                                                                 

 

A.H.யாசிர்அரபாத் ஹசனி லால்பேட்டை,

 

Tags: சிறுகதை

Share this