''எல்லாத் துன்பங்களுக்கும் பேராசையே காரணம்" ...!
எல்லாவற்றையும் மறந்து தொலைத்தோம் ஆனால் அந்த ஞாபகங்கள் மட்டும் அப்படியே மறக்காமல் தான் இருக்கிறது...
இரண்டு மூன்று தினங்களாக ஊரில் உள்ள நண்பர்கள் மின்சாரத் தடைபடுவதைச் சிலர் சீரியசாகவும், ஒருசிலர் மீம்சாசகவும் பதிவிடுகிறார்கள் வருத்தமாகத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் ஊரில் அந்த வெயிலையும், உஸ்னத்தையும் தாங்குவது என்பது பெரும்பாடாக இருக்கிறது. சமீபத்தில் அனுபவித்து வந்ததால் என்னால் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நம் வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைன்ட் பண்ணிப் பார்த்தால் எங்கள் ஊரில் யாருவீட்டிலும் AC எல்லாம் கிடையாது. எல்லார் வீட்டிலும் திண்ணைகள் இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் திண்ணையில் நண்பர்களோடு பேசிக்கொண்டு அங்கேயே இரவில் உறங்கிய காலங்கள் உண்டு.
வீராணத்திலிருந்து வரும் தண்ணீர் வாய்க்கால் மூலம் மடை பிரிக்கப்பட்டு ஊரைச்சுற்றி உள்ள விவசாய நிலங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும். அது போகும் வழியில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழியும், அவசியமில்லாமல் யாரும் எந்த மரங்களையும் வெட்டி நான் பார்த்ததில்லை.
பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்கள் தான் வாழ்ந்தார்கள். திருமணமாகி உடனே இரண்டு வருடத்தில் வீடு கட்டி விட வேண்டும் என்ற கனவெல்லாம் யாருக்கும் இருந்ததில்லை என்பதால் பெரும்பாலும் வயல்கள் வயல்களாகவே இருந்தது. அதில் நெல் உளுந்த பயறு என்று எப்போதும் விவசாயம் நடந்து கொண்டே இருந்தது. அக்னி வெயில் என்று சொல்லக்கூடிய அந்த நாட்களில் கூட லேசான காந்தல் இருக்கும் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் பணைமட்டை விசிரிகளால் விசிறிக் கொள்வார்கள்.
இங்கே எல்லா மாற்றத்திற்க்கும் நாம் தான் காரணம் ஆரம்பத்திலிருந்து அடுத்து வரும் தலைமுறைக்காக வீடு வாசல் சேர்த்தோம் ஆனால் இயற்க்கையை அழித்தோம்.
நீர் நிலைகளைச் சாக்கடைகள் சூழ்ந்து கொண்டது, நெர்பயிர் விவசாயிகளை ரியல் எஸ்டேட்டின் கம்பங்கள் மிரட்டியது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற புரிதலற்ற அரசியல் யார் யாரையோ தேர்ந்தெடுத்து நீர் நிலைகள் ஆக்ரமித்துத் திருமண மண்டபங்கள் ஆக்கி கொண்டவர்கள் கொடுக்கும் 500 ரூபாய் பணம் அவர்களுக்கு நல்ல பெயரை பெயரைச் சம்பாதித்துக் கொள்ளப் போதுமானதாக இருந்தது.
ஒரு இருபது வருடங்களுக்கு முன்பே நீர் மேலாண்மை குறித்தோ அல்லது இயற்கை குறித்தோ புரிந்த ஒருவரை நாம் தேர்ந்தெடுத்து இருந்தால் அவருக்கும் எதாவது புரிந்து இருக்கும். இந்த நீர் நிலைகளைக் காப்பாற்றி எப்படி அடுத்தத் தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று.
அரபு நாடுகள் பாலைவனத்தால் சூழ்ந்ததுதான் ஆனால் அவர்கள் பசுமையாக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு சோலார் பிளான்ட் உருவாக்கும் இடங்களைச் சுற்றி அடுத்தடுத்து சிறிய ஏரிகளையும், குளங்களையும் செயற்க்கையாக உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்.
மின்சாரமே இல்லை என்றாலும் நாம் உரங்கி எழுந்த காலங்கள் உண்டு. ஆனால் இன்று ஒரு மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியவில்லை அவ்வளவு வெப்பம், காரணம் நீர் நிலைகள் அழிந்து போனது வயல் வெளிகள் விவசாயம் இன்றி அழிந்து போனது இன்னும் கொஞ்சம் அறிவியல் பூர்வமான காரணங்களும் இயற்கை சேர்த்துக் கொண்டது.
ஒரு வேல நம்ம பசங்க எதுக்கு நம்ம ஊர்ல இந்தக் குளம் குட்டை வாய்க்கால் எல்லாம் இருந்துச்சின்னு கேட்டா நாம என்ன பதில் சொல்லாப்போறோம்னு நினைத்ததுன்டு.
நமக்கே தெறியல நீர் மேலாண்மைன்னா என்னான்னு
அவங்க குளம் குட்டை வயல் பயிர்னு எங்கேயும் போகாம வளர்த்துருக்கோம். இன்னும் கொஞ்சம் வருடங்கள் நாம எப்படியோ ஓட்டிடுவோம் ஆனால் "பாவம்ல நம்ம குழந்தைங்க"
ஒரு டீ கடைல வரும் முதல் நாள் வழியில் ஒரு கிராமத்தில் டீ குடிச்சிட்டு இருந்தேன். அவர் ஒரு விவசாயி கொஞ்சம் வயதானவர் அவரிடம் இப்படித்தான் இன்னொருவர் சொல்லிக்கொண்டிருந்தார்
"சொன்னதையே திரும்பச் சொல்லாதய்யா" குண்டி கழுவவே தண்ணி இல்லையாம் இவரு வெவசாயம் பண்ணப்போறாராம், நீ சொல்ற வெலயெல்லாம் அந்த வயல் போகாது ஏழுறுவாக்கு முடிச்சித்தறேன் ஒழுங்கா வித்துட்டு பையனுக்கு நம்மூர்லயே ஒரு பார்மசி தொறந்துக் கொடு.. டீ குடிச்ச கிளாசை வைத்து விட்டு கள்ளாப்பெட்டியின் மீது பார்த்தேன் அங்கே புத்தரின் படம்
"எல்லாத் துன்பங்களுக்கும் பேராசையே காரணம்" என்று இருந்தது..
எழுத்தாளர். ரஹமத்துல்லா, லால்பேட்டை
Tags: கட்டுரை லால்பேட்டை