Breaking News

தாயின் தேடல்.... யாசிர் ஹசனி, லால்பேட்டை

நிர்வாகி
0

 


    சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும்  பேருந்தில் பயணித்த சுருக்கம் விழுந்த முகம் நரை ஆக்கிரமித்த தாடியுடன் காணப்பட்ட நிஜாம். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார். சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டார். லால்பேட்டை நிறுத்தத்தைக் கண்டவுடன் வெள்ளிக்கிழமை என்பதால் அடித்துப் பிடித்துப் பேருந்திலிருந்து வந்திறங்கினார். பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தில்   பள்ளிவாசல் நோக்கி    விரைந்தார்.

 சிக்கனமான ஊரின் நுழைவாயிலில் இருபக்கமும் அமைந்துள்ள கடைகளில்  ஜூம்ஆ தொழுகைக்காகக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில கடைகள் பகுதி அடைத்தும் பகுதி அடைக்காமல் இருந்தன. ஆட்டிறைச்சி கடைகள் சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.

ஆட்டோக்களும், பைக்குகளும் ஊரின் பிரதானச் சாலையில் பின்னிக்கொண்டு ஓடின. எந்தப் பக்கமும் தன் பார்வையைச் செலுத்தாமல் ஊரின் முகப்பிலிருந்து ஒரு மைல் கல் தூரம் தள்ளிருக்கும் ஜும்ஆ பள்ளியை அடைந்தார். ஒரு சில மிதிவண்டிகள், இரு சக்கர வாகனங்கள்  வெயிலுக்குப் பயந்து பள்ளிக்கு முன் கீற்றி லான பந்தலில்  நிறுத்தப்பட்டிருந்தன. தொழுகை முடியும் வரை சூரியன் பார்வைப் படாத  இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தி பள்ளிக்குள் நுழைந்தார்.

அவர் வந்தடைந்த பள்ளிவாசலானது   இருநூறு  ஆண்டுகள் பழமைவாய்ந்த பள்ளிவாசல். ஊரின் பழமையை நினைவுக் கூறிக் கொண்டே நிற்கிறது.   அதன் உள்கூட்டில் நிற்கும்  பத்திற்கும் மேற்பட்ட தூண்கள் லால்கானின் கட்டிடக்கலைகளைத்  தாங்கி நிறுத்துகிறது.. இப்போது நினைத்தாலும் கூட அப்படி ஒரு தூணைச் செய்யமுடியாது என்பேன்.

இதற்கு ஜாமிஆ மஸ்ஜித் என்ற பெயர் இருந்தப் போதும் பெரியப்பள்ளி என்றே அழைக்கப்படுகிறது. அதனுள்ளே  நுழையும்போதே உள்ளுக்குள் இறையச்சம் ஊற்றுப்போல் உருவெடுக்கும் அப்படியொரு அமைதி நிலவும்.

ஊரில் பல பள்ளிவாசல் இருக்கும் போது இதற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்பதுதானே? உங்கள் உள் மனதில் ஓடும் கேள்வி. ஊரில் பல பள்ளிவாசல்கள் இருந்தபோது இதுத்தான் தாய் பள்ளிவாசல். ஊர் மக்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகைக்கு ஒன்று கூடுவர்.  பலநூறு வெண்ணிற புறாக்கள் ஒன்றுச் சேர்ந்து பறப்பது போல் மக்கள் வெளியேறும் காட்சிக் கனவிலும் காணக் கிடைக்காதவை. பணிரெண்டரை மணிக்குத்  தொடங்கும் பிரசங்கத்திற்கு முன்னதாகவே பலரும் பள்ளிவாசல் வந்து முன் வரிசையில் அமர்ந்து விடுவார்கள்‌ . அப்படி ஒருவர்  தான்  நிஜாம் .இறையச்சமுடைய இவர் தொடர்ந்து இங்குத்  தொழுதுவந்தார். பெரிய‌ ஹஜ்ரத்தின் குரலால் ஈர்க்கப்பட்டவர். நிஜாமுக்கு ஜூம்ஆ தொழுகை என்றால் அது இங்குத்தான். மற்ற பள்ளியில் தொழுதால் அவருக்கு ஜூம்ஆ தொழுத மனநிறைவுக் கிடைக்காது . என்ன வேலையாக இருந்தாலும் இங்கு வந்திருவார்.

மக்கள் வருவதற்கு முன்பே இவர்‌ வந்துவிடுவதால் இவருக்கும், பள்ளிவாசலுக்கும் மல்லிச்செடிப் போன்ற நட்பு படரத் துவங்கியது. இவரைப் போன்றே  பள்ளிவாசலுக்குப் பல நண்பர்கள் உண்டு என்பது வேறு விஷயம்.

அப்படித்தான்  ஒரு நாள் ஜும்ஆவிற்கு வந்தவர் பள்ளிவாசலுக்கு முகமன் கூறி அமர்ந்தார். முகமனுக்குப் பதில் கூறி "போன வாரம் எங்கேப் போனே ஏன் தொழுக வரல?" பள்ளிவாசல் கேட்க  " சாரி ,போன வாரம் வியாபார ரீதியா சேம்பரம் போய்ட்டேன்" இப்படியாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். 

ஒவ்வொரு ஜும்ஆ தினத்திலும் பள்ளிவாசலுக்கும் அதன்  நண்பர்களுமிடைய சிறிய உரையாடல்கள் நடைபெறும்  அது வேறுகதை. 

 பெரிய, பெரிய ஆலிம்கள் இமாமத் செய்த இடமது. தற்காலத்தில் கட்டப்பட்டப் பள்ளிவாசல்கள் புதுப்பிக்கப்பட்டு மறு திறப்பு விழா நடைத்தியாச்சு. ஆனால், இதன் பழமையை மாற்றாமல் அப்படியே விட்டிருப்பதால் முன்னால், இன்னாள் முத்தவல்லிகளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஊரின் துவக்கத்தை இதனை வைத்தே நாம்‌ அறியமுடியும் 

இங்கு மோதினார் ஒருவர் பணி செய்துவந்தார். முஅத்தினைத்தான் மோதினார் என்று அழைப்பது வழக்கம். அவர் மறைவுக்குப் பின்னர் அவரைப் போன்ற மோதினாரை பள்ளிவாசல் பார்த்திருக்காது என்று எண்ணுகிறேன்.

வெள்ளிக்கிழமை காலையில் ஜும்ஆ விற்கான தயாரிப்பில் இறங்கிவிடுவார். அனைத்து பாய்களைச் சுருட்டி ஓரத்தில் நிற்கவைத்து சுத்தம் செய்வார். " என்ன மோதினாரே..! பாய்களைப் படுக்க வாட்டத்தில் போடுயா..! யாராவது மௌத்தாகிடப் போறாங்க" என்று போகிறபோக்கில் ஒருவர்  கூற " பாய்களை நிற்க வைத்தால் மஹல்லாவில் ஒருவர் மரணமடைந்து விடுவார்  என்ற மூட நம்பிக்கையில் கூறினாலும்,ஊர் வம்பு நமகெதுக்கென்று ...! படுக்க வாட்டில் வைத்துவிட்டு தூய்மை பணியைத் தொடங்குவார். மூடப்பட்டிருந்த மடக்கு கதவுகளை அதன் போக்கில்  அழகாக மடித்து சுவற்றின் ஓரத்தில் வைத்துவிடுவார்.

 காலை இட்லி, வீதியெங்கும்  ஆட்டுக்கறி சமைக்கும் வாசம் , வெள்ளைச் சட்டை, வெள்ளை கைலி, மாமியார் வீட்டு விருந்து இப்படியாகத்தான் இங்கு வெள்ளிக்கிழமை பொழுது கழியும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் அது வெள்ளிக்கிழமையை முழுமைப்படுத்தாது என்பது பலரின் எண்ணம்.

இமாம் பிரசங்கம் தொடங்கும் முன்பே ஒரு சிலரும், பிரசங்கம் தொடங்கியதும் ஒரு சிலரும்,பிரசங்கத்திற்கு மத்தியில் ஒரு சிலரும், மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேனீக்கள் அதிகம் தேன் எடுப்பது போன்று வாரத்திற்கு ஒருநாள் மட்டும் தொழக்கூடியவர்களும் வெள்ளை சட்டை,வெள்ளை கைலியுடன்  பள்ளிவாசலின் கீழ் தளத்திலும் மேல் தளத்திலும் நிரம்பியிருப்பார்கள். மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைகளைக்  தாய் காண்பது போல் தன் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைகளைத் கருணையுடன் காணும்.

தொழுகை முடிந்து வீடு  திரும்பும்  மக்கள் கூட்டத்தில் குண்டூசிக்குக் கூட, நுழைய இடம் கிடைக்காதயளவிற்கு குழு,குழு‌வாகச்  செல்வார்கள். இந்தக் காட்சிகளைக் கம்பீரமாக நின்று ரசிக்கும் இரு மினாராக்கள்.

இப்படித்தான் ஒவ்வொரு ஜும்ஆ தொழுகை கழிந்தது. சில வருடங்களுக்கு முன்பு ஒரு இடத்தில்  நடைபெற்ற ஜும்ஆ, மூன்றாக பிளவுபட்டுப் போனதில் அந்தத் தாய் பள்ளி மிகுந்த மனவேதனை அடைந்ததை நிஜாம் போன்ற நண்பர்களிடம் பகிர்ந்திருந்தது. பலருக்கும் அதன் வலி அறிய  வாய்ப்பில்லை. 

திடீரென கொரோனா உலகை தன் கையில் சுருட்டிக் கொண்டது. என்னடா?  கொரோனா பற்றி பேசுரேன்னு நினைக்க வேண்டாம். உலகின்‌ சகஜ நிலைக்கு வேட்டு வைத்ததுப் போல இங்கும் மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த நோய். போக, போக உங்களுக்கே புரியும். நோயின் தீவிரம் காரணமாக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு  மக்கள் கூடும் வழிப்பாட்டுத் தலங்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தனர்.

 ஊரின் சூழல் மாறத் தொடங்கியது. மூன்று இடங்களில் நடைபெற்ற ஜும்ஆ, பள்ளிக்குப் பள்ளி நடைபெறத் தொடங்கியது. கொரோனாவின் கோரதாண்டவம் முடிவுக்கு வந்தும் இந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. 

இப்போது தூரத்திலிருந்து வரும் நிஜாம்  வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை அவர் அருகிலிருக்கும் பள்ளியில் முடித்துக், கொள்கிறார். ஆனால், நிஜாம் போன்ற தன் நண்பர்களுக்காகவும்  தூரத்தில் வாழும் தன் பிள்ளைகளுக்காகவும் வழி மீது வழிவைத்து ஏங்குகிறது தாய் பள்ளிவாசல் .

தொழுகையை நிறைவேற்றி வீதி முழுவதும் சென்ற மக்களுக்கிடையில் , தற்போது  தொழுகைக்காகக் கூடி ,களையும்  மக்கள் கூட்டத்தில் கவிஞர் பழநிபாரதி கவிதைப் போல், நனைந்த மலர்களில் தும்பிகள் அமரும் மெல்லிய அதிர்வுகளின்  குலுங்கல் கூட பெரும் சத்தமாய் கேட்கிறது என்று பரிதவிக்கிறது தாய் பள்ளி.

A.H. யாசிர் ஹசனி

Tags: லால்பேட்டை

Share this