Breaking News

ஹஜ் பயணம் செல்ல இருந்தவரிடம் ரூ. 1.70 லட்சம் பறிப்பு

நிர்வாகி
0
நெய்வேலியிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள இருந்தவரிடமிருந்து மர்ம நபர்கள் ரூ.1.70 லட்சத்தை புதன்கிழமை பறித்துச் சென்றனர்.
நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த ஹசன் முகமது என்பவர் தனது மனைவியுடன் செப்டம்பர் மாதம் ஹஜ் பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள அப்துல்கனி என்பவர் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக புதன்கிழமை நெய்வேலி மெயின்பஜாரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, மெயின்பஜார் காமராஜர் சிலையருகே நின்றுகொண்டிருந்த அப்துல்கனியிடம் கொடுத்துள்ளார்.
அப்துல்கனியும், ஹசன் முகமது கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு, தனது பைக்கில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு, இருவரும் எதிரில் உள்ள டீக்கடைக்குச் சென்றனர்.
பின்னர் அப்துல்கனி தனது வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு கடைக்குச் சென்று மளிகைப் பொருள் வாங்கிக் கொண்டு, பைக்கில் உள்ள பெட்டியைத் திறந்தபோது, அதிலிருந்த பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியுற்றார், ஹசன் முகமதுவிடம் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இருவரும் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வங்கிக்குச் சென்று விசாரணை நடத்தி, வங்கிக்கு வந்து சென்றவர்கள் குறித்து ரகசிய கேமரா பதிவைப் பார்த்து சந்தேகபடும்படியான நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலியில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற பணம் பறிப்புச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த மாவட்ட எஸ்பி அக்னிஸ்வர் கோட்னீஸ் வங்கிக்குச் சென்று பார்வையிட்டு, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags: எச்சரிக்கை

Share this