Breaking News

மாந்தரின் மனதை வென்ற மாமனிதர் முகமது அலி, (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ)

நிர்வாகி
0

 
உலக குத்துச் சண்டையை மூன்று முறை வென்று, Sports Illustrated என்ற அமைப்பால் 'தி கிரெடேஸ்ட் ஆப் தி செஞ்சுரி' அதாவது 'இந்த நூற்றாண்டின் மாமனிதர்' என்றும் வர்ணிக்க பட்டு, பி.பி.சி. இங்கிலாந்து நிறுவனத்தால், 'Sports personality of Century' என்று வர்ணிக்கப் பட்டவரும், தனது 22 இளம் வயதிலேயே உலக ஹெவி வெய்ட் சாம்பியன் பட்டத்தினை வென்றவருமான கேஷியஸ் கிளே என்ற முகமது அலி, 1971ம் ஆண்டில் அமெரிக்காவின் கொள்கைபடி ஒவ்வொரு அமெரிக்கனும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தில் அவரை அமெரிக்க-வியட்நாம் யுத்தத்தில் கலந்து கொள்ள அனுப்பும்போது நான் அப்பிராணி மக்களை கொல்ல விரும்பவில்லை என்றதால் 1971ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தினை துறந்தவர், ஆனால் தன்னிடம் பறிக்கப் பட்ட பட்டத்தினை தன்னைவிட குத்துச்சண்டை கோதாவில் வெல்ல உலகில் யாருமில்லை என்று நிரூபணம் செய்து வென்று காட்டிய முகமது அலி தான் அந்த மாமனிதர். அவர் குத்துச் சண்டை கோதாவில் இறங்கி வளையத்தினை  குதித்து, குதித்து, சுற்றி, சுற்றி வந்து எதிரிக்கு சவால் விட்டு   காட்டும் அழகே தனி என்று சொல்லலாம். தான் கலந்து கொண்ட 61 போட்டிகளில் 56 போட்டிகளை  வென்று தனது தனி முத்திரையினை பதித்தவர். முகமது அலி, ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க தந்தையும், பெயிண்டருக்கும் மகனாக பிறந்தவர். பிற்காலத்தில் ஒரு சிறந்த கவிஞராக , கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடிய போராளி, திருமணமாகி ஒன்பது குழந்தைகளுக்கும் தகப்பனானவர். அவருடைய திறமையை பாராட்டிதான் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தான் பதவி ஏற்ற ஜனவரி 20, 2009 ம் ஆண்டில் சிறப்பு விருந்தினராக, அவர் பார்க்கின்சன் உடல் நடுங்கும் நோயால் பாதிக்கப் பட்டாலும் அழைத்து பாராட்டப் பட்டார். அவர் தனது 74ம் வயதில், 2016ம் ஆண்டு எல்லாம் வல்ல அல்லாஹ் சிறப்பு அழைப்பினையும் ஏற்றுக் கொண்டார் என்பதெல்லாம் நீங்கள் அறிந்த வரலாறு.

          உங்களுக்கெல்லாம் தெரியும் 11.9.2001 அன்று அமெரிக்க நியூயார்க் நகரில் இருக்கும் இரட்டை கோபுரம்(WTC) உலக வர்த்தகத்தில் உள்ள வல்லமையினை காண்பதிற்காக அமைக்கப் பட்டது ஆகும். அவைகள் தகர்க்கப் பட்ட நாளில் காலையில் ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்ட நிகழ்வின் படி 'Readers Digest' அமெரிக்க நிருபர் அவருடைய இல்லத்தில் முகமது அலியினை சிறப்பு பேட்டிக் கண்டார். அப்போது தனது உடல் நடுங்கினாலும் தனது மனம், சொல் நடுங்காது தெள்ளத் தெளிவாக அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தது என்றும் பலரால் பாராட்டப் படுகிறது. அதில் கண்ட சில சிறப்பு அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

          அவ்வாறு எந்த முஸ்லிமும் ஈடுபட்டிருந்தால் அவர்கள் முஸ்லிம்களே இல்லையென்றும் அவர்கள் மத வெறியர்கள் தான் என்றும் சாடினார். எல்லா மக்களும் இறைவனால் படைக்கப் பட்டவர்கள்தான் அவர்களை வெறுப்புகளுடன், கறுப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர், சிகப்பு நிறம் கொண்டவர் என்று நிறத்தினை வைத்து வெறுக்கக் கூடாது என்றும் சொன்னார். எல்லா மதங்களும், குளம், குட்டைகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள் போன்றவைகள் தான். அதில் இருக்கும் பொருள் நீர்தானே என்றார். எல்லா மதத்திலும் சில உண்மைகள் இருக்கத்தானே செய்கின்றன அதனை யாரும் மறுக்க முடியுமா  என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எல்லா மனிதர்களும் இறப்பது உறுதி. அப்போது ஒரு மனிதன் செய்யும் நற்செயல் அவன் செய்த தீய செயலைவிட அதிகமாக இருந்தால் அவன் நிச்சயமாக சுவர்க்கம் செல்வான், அதுவே தீய செயல் அதிகமாக இருந்தால் அவன் நரகம் செல்வது உறுதியல்லவா, அதனை எல்லா மதங்களும் தானே கூறுகின்றது. மாந்தருக்கு உதவுபவர்கள் நிச்சயமாக சுவர்க்கம் செல்வதும் உறுதி தானே!

          நற்செயல்கள் என்ன என்பதினை ஒரு அருமையான உதாரணத்துடன் விளக்குகின்றார். ஒருவர் ஒரு இரவு விடுதிக்குச் செல்கிறார். அங்கே ஒரு மனதைக் கவரக்கூடிய பெண்ணைப் காண்கிறார். அவர் மனதில் சபலம் தட்டுவது இயற்கைதானே. அப்போது அவர் தன்னுடைய தீப்பெட்டியினை எடுத்து அதில் ஒரு குச்சியினைப் பொருத்தி தன்னுடைய கையில் சுட்டுக் கொண்டால் அவர் நல் செயல் புரிந்தார் என்று அர்த்தம். அதற்கு மாறாக அவர் அந்த பெண் உரியும் ஆடையினை கண்டு ஜொள் விட்டால் தீய செயல் என்று அர்த்தம் என்று விளக்கினார்.

          முகமது அலியிடம் நிருபர், 'குத்துச் சண்டை மிகவும் கொடூரமானது என்று சொல்கிறார்களே' என்று கேட்டதிற்கு, ' ஏன் கால் பந்து, மோட்டார் ரேஸ், மல் யுத்தம், கிரிக்கட்டு, பேஸ் பால்,  அமெரிக்கன் புட் பால் போன்றவைகளெல்லாம் வன்முறை இல்லையா என்று அவர் திருப்பி கேட்டுவிட்டு, நிதானமான பதிலில் எல்லா விளையாட்டு போட்டிகளிலும் கறுப்பின மக்களே ஆதிக்கம் செலுத்துவதால் தான் அப்படி குறை சொல்கிறார்கள் என்றார். நீங்கள் சிறு வயதிலிருந்தே நான் ஒரு நாளைக்கு உலக குத்துச் சண்டை சாம்பியனாக வருவேன் என்று கூறி வந்துள்ளீர்கள் அந்த நம்பிக்கை எங்கேயிருந்து வந்தது என்ற கேள்விக்கு, அது என் இதயத்திலிருந்து வந்தது என்று அசைக்க முடியா நம்பிக்கை வெற்றியினை தேடித் தரும் என்றது தற்கால இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக் கொண்டால் மறுக்க முடியுமா?

          ஒவ்வொருவர் நம்பிக்கைக்கும் மூல காரணமாக ஒருவர் இருப்பார். அப்படி உங்களுக்கு யார் என்று கேட்டபோது, அமெரிக்க கறுப்பின மக்களை ஒரு அடிமையாக இருபதாம் நூற்றாண்டில் நடத்துகிறார்களே என்று கொதித்தெழுந்த மால்கம் எக்ஸ், மற்றும் எலிஜா முகமது ஆகியோரின் உறுதியான நம்பிக்கை அவர்களின் செயல் பாடுகள் தனக்கும் மனதுக்குள் எழுச்சியினை ஏற்படுத்தி, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வேண்டி களம் இறங்கினேன் அதில் வெற்றியும் கண்டேன் என்று சொல்லியுள்ளார்.

          இஸ்லாமிய மார்க்கம் அப்படியென்ன உங்களுக்கு பெரிதாக செய்து விட்டது என்று கேட்டதிற்கு, 'ஏக இறைவன் என்னை இஸ்லாமின் கொள்கைகளை உலக அளவில் பரப்புவதற்கு ஒரு மக்கள் பிரதிநிதியாக அனுப்பியுள்ளான். 150 வருடங்களாக வெள்ளை நிற அமெரிக்கர்கள் கறுப்பின மக்களை நீக்குரோக்கள் என்று கீழ்த்தரமாக நடத்தினர். ஏன் பிரிட்டிஷார் கூட இந்தியரை 'நிகர்' அதாவது நீக்ரோக்கள் என்று என்று அழைக்கவில்லையா? பலரும் சீன நாட்டு மக்களை சீனர் என்றும், கியூபா நாட்டு மக்களை கியூபன் என்றும் ஜெர்மன் நாட்டினரை ஜெர்மானியர் என்று அழைக்கும்போது அமெரிக்க கறுப்பின மக்களை மட்டும் நீக்ரோக்கள் என்று அடை மொழியிட்டு கேவலப் படுத்தி ஏன் அழைக்க வேண்டும். என்ற நியாயம் என் மனதில் எழுந்தது ஆகவே அந்த கேவலமாக கருதப்பட்ட மக்களை தட்டி எழுப்பி உங்களுக்கும் இந்த நாட்டில், சமுதாயத்தில் சம உரிமை உண்டு, நீங்கள் எந்த விதத்திலும் வெள்ளைநிற மக்களுக்கு தாழ்ந்தவரில்லை என்றும், அனைவரும் சகோதர சகோதரிகள் தான் என்றும், அல்லாஹ்வின் போதனையினை எலிஜா முகமது பரப்பினார். அந்த வேத வாக்கினை உலகிற்கும் பரப்பும் தேவ தூதராக நான் கருதி பெருமைப் படுகிறேன் என்றது அவர் எவ்வாறு இறை நம்பிக்கை மீதும் அவனது கட்டளைகளையும் மனதில் நிறுத்தி அதனை பலருக்கும் பரப்பும் பிரதிநிதியாகவே கடைசிவரை வாழ்ந்தார்.

          கேஷியஸ் கிளே என்ற பெயரை ஏன் மாற்றினீர்கள் என்று கேட்டதிற்கு, 'கிளே என்றால் ஆங்கிலத்தில் 'களிமண்' அதனால் இறைவனால் போற்றப் பட்ட, புகழைப் பட்ட  'முகமது' என்ற பெயரினை தேர்ந்தெடுத்தேன் என்றார். எந்தளவிற்கு கறுப்பின மக்களை அமெரிக்கர்கள் வெறுத்தார்கள் என்ற கேள்விக்கு, ' விழாக்களுக்கு சுவையான கேக்குகள் தயாரிக்கும் போது 'ஏஞ்சல்' தேவதை கேக்குகளை வெள்ளை நிறத்திலும், 'பிசாசு' கேக்குகளை கருப்பு சாக்குலேட்டுகளாக தயாரித்து கறுப்பின மக்களை கேவலப் படுத்திய கொடூர குணம் கொண்டவர்களாக இருந்தனர். மேலும் அவர் கூறியபோது 'பிளாக் பெரி' பழம் கருப்பு நிறம் கொண்டது தான் ஆனால் அதன் ஜூஸ் மிகவும் சுவையாக இருக்கும் என்று அறியாத மக்களாக வெள்ளை நிற அமெரிக்கர்கள் இருந்தனர். ஆனால் அந்த கறுப்பின மக்கள் தான் உலக, ஒலிம்பிக் போட்டிகளில் ரிக்கார்டுகளை தகத்தெரிந்து வெற்றி வாகை சூடியவர்கள் என்று நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

          அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் 1996ல் நடந்த ஒலிம்பிக் போட்டி துவக்கத்தின் அடையாளமாக உங்களை தீபம் ஏற்ற செய்த போது உங்கள் மன நிலை எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, 'வியட்நாம் போருக்கு தான் போக விருப்பமில்லை என்றதால் தனது உலக குத்துச் சண்டை பட்டத்தினை பறித்த வெள்ளைநிற அமெரிக்கர்கள் தங்கள் தவறை உணர்ந்து, தன்னையும் மதித்து உலக ஒலிம்பிக் போட்டியின் துவக்க தீபத்தினை ஏற்ற அவர்கள் மனதினை மாற்றிய பெருமை ஏக அல்லாஹ்விற்கே தகும்' என்று பதில் கூறியுள்ளார்.

          நீங்கள் வருங்கால இளைஞர்கள் முன் மாதிரியா என்று கேட்டதிற்கு 'ஆம் நான் எதற்கும் துணிந்து எதிரியை வெற்றி கொள்ளும் மன உறுதியுடன் இருந்ததினால் இழந்த வெற்றியினை திரும்ப, திரும்பப் பெற்றேன், அதே போன்று தோல்வியினைக் கண்டு துவழக்கூடாது' என்று வேண்டுகோள் விடுத்தார். உங்களுடைய 'பார்க்கின்சன் என்ற உடல் நடுக்க நோய் குத்துச் சண்டையால் வந்ததா என்று கேட்டதிற்கு அது இல்லையே இல்லை, வாழ்க்கை என்ற ஓடத்தில் பல நல்ல காரியங்களும், சில கெட்ட செயல்களும் மனிதன் சந்திக்க நேரிடும், என்ற இறைவன் தீர்ப்பினை சுட்டிக் காட்டினார். உங்களை உலக மக்கள் எவ்வாறு நினைவில் கொள்ள வேண்டும் என்று நினைகிண்றீர்கள் என்று கேட்டதிற்கு, 'சில அன்பு என்ற மரத்தினால் ஆன கோப்பையும், கரண்டிபோன்ற பொறுமையும், சில சக்கரை போன்ற பரந்த மனப் பான்மையும், அரை லிட்டர் பால் என்ற பாசத்தினையும் நன்றாக கலந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் நெஞ்சம் நிறைந்த தேநீராக கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார்.

          மால்கம் எக்ஸ், எலிஜா முகமது, மார்ட்டின் லூதர் கிங், முகமது அலி ஆகியோர் நினைத்தது போல கிளே என்ற களிமண் கறுப்பின இளைஞர் பாரக் ஒபாமா 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அந்த விழாவிற்கு குத்துச்சண்டை புகழ் 'முகமது அலி'யையும் மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையில் அமர வைத்து அழகு பார்த்த பெருமை பாரக் ஒபாமாவைச் சாரும்.

          முகமது அலி தனது பணியினை மன நிறைவோடு நிறைவேற்றி, உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்ட வெற்றிக் கொடி நாட்டி, இன்று மட்டுமல்ல என்றும் பேசப்படும் ஒரு மாபெரும் மகத்துவமிக்க மனிதர் தனது 74 வது வயதில் 2016ல் இறைவனடி சேர்ந்தார். தோன்றி புகழோடு தோன்றுக என்ற பழமொழியினை நிலை நாட்டியவர் முகமது அலி என்றால் மறுக்க முடியுமா?

          முகமது அலி இறைவனடி சேர்ந்தபோது பாரக் ஒபாமா தனது இரங்கல் செய்தியில், 'Ali shook up the world, And world is better for it' அதாவது முகமது அலி உலகை தனது குத்துச் சண்டையாலும், கொள்கைகளாலும் உலுக்கினார். உலகமும் விழித்தெழுந்தது' என்று எழுதியது அவர் கொடுத்த பத்திரிகையாளர் பேட்டிக்கு பொருத்தமானது என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்!

Tags: கட்டுரை

Share this