Breaking News

சின்னாபின்னமாகி வரும் சிதம்பரம் நகரம்

நிர்வாகி
0
சிதம்பரம் நகரில் சாலையில் ஓடும் சாக்கடை நீர், குடிநீர் தட்டுப்பாடு, சாலையில் தேங்கியுள்ள குப்பைகள் ஆகியவற்றால் சிதம்பரம் நகரம் நாசமாகி வருகிறது என திமுக உறுப்பினர் இரா.வெங்கடேசன் உள்ளிட்ட பெரும்பாலான நகரமன்ற உறுப்பினர்கள் நகரமன்றக் கூட்டத்தில் குற்றம்சாட்டினர்.
சிதம்பரம் நகரமன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரமும், தலைவர் பதிலும் பின்வருமாறு:
இரா.வெங்கடேசன் (திமுக)- ரூ.48 கோடி செலவிலான புதிய சாக்கடை விரிவாக்கத் திட்டம் எப்போதுதான் செயல்படுத்தப்படும். காலியாக உள்ள துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தலைவர்: புதை சாக்கடை விரிவாக்கத் திட்டம் 3 முறை டெண்டர் விட்டும் யாரும் எடுக்கவில்லை. மீண்டும் விரைவில் டெண்டர் விடப்படும்.
காலியான பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
த.ஜேம்ஸ்விஜயராகவன் (திமுக)- ஏழைகளின் உயிர் காக்க மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வந்ததற்கும், இல்லத்தை தனது காலத்திற்கு பிறகு ஏழை - எளிய மக்கள் பயன்பாட்டிற்காக இலவச மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து டேபிள் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.
அப்புசந்திரசேகரன் (திமுக)- சீர்காழி, கும்பகோணம் செல்லும் கனரக வாகனங்கள் செல்லும் மிக மோசமான நிலையில் உள்ள போல்நாராயணன் தெரு சாலையை சீரமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடை அடைப்பை பம்ப் செய்து வெளியேற்ற வேண்டும்.
ராஜலட்சுமி (விடுதலைச் சிறுத்தைகள்)- அம்பேத்கர் நகரில் உள்ள 3 நகராட்சி கழிவறைகளும் பயன்பாடின்றி பூட்டப்பட்டுள்ளது. துப்புரவுத் தொழிலாளர் குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
குடியிருப்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் கிடையாது.
வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (திமுக)- மாலைக்கட்டித்தெரு நகராட்சி பள்ளி வளாகத்தில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும்.
ஏ.ஆர்.சி.மணி (திமுக)- நகரில் 2 வேளை வந்த குடிநீர் ஒரு வேளையாக மாறியது. பின்னர் தற்போது ஒன்றுவிட்டு ஒருநாள் மட்டும் ஒருவேளை குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் நகரில் பொதுகுழாய்கள் மற்றும் கைப்பம்புகள் இயங்கவில்லை. எனவே தினமும் இருவேளை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: முன்பு இருந்த அதிகாரிகள் சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. நெய்வேலி நிறுவனத்திலிருந்து டேங்கர் லாரி மூலம் குடிநீர் கொண்டு வருவதற்காக ஆட்சியரை சந்திக்க முயன்றேன்.
தொடர் தீ விபத்து பகுதிகளுக்கு சென்றதால் அவரை சந்திக்க முடியவில்லை. தற்போது புதிதாக ஆணையர், பொறியாளர் வந்துள்ளனர். விரைவில் குடிநீர்ப் பிரச்னையைப் போக்க நடவடிக்கை எடுப்பேன்.
சந்திரசேகரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)- ஒரு வருடம் முன்பு சொத்து பெயர் மாற்றம் குறித்து பணம் கட்டி மனு அளித்தேன். அதன்பின்னர் அம் மனுவை காணவில்லை எனக் கூறியதில் பலமுறை மனுக்கள் கொடுத்தும், கூடுதலாக கவனித்தும் இதுவரை பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. உயிரோடு இருக்கும் போதே பெயர் மாற்றம் செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில் ஆணையாளர் ஜான்சன், பொறியாளர் மாரியப்பன், மேலாளர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: சிதம்பரம்

Share this