Breaking News

தே.மு.தி.க அசைக்க முடியாத சக்தி எ‌ன நிரூபண‌ம் : விஜயகா‌ந்‌த்

நிர்வாகி
0

5தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் தே.மு.தி.க ஒருஅசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளதாகவும், இந்த தேர்தலில் கட்சி தனது பலத்தை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என்றும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. மத்தியலும், மாநிலத்திலும் ஆட்சி செய்கின்றவர்கள் ஒரே கூட்டணியாக உள்ளனர். ஆட்சி அவர்கள் கையில், அதிகார துஷ்பிரயோகத்திற்குப் பஞ்சமில்லை. காவல்துறை கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது. பண பலம் அவர்களிடம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை வாக்காளர்களுக்கு உணவிலோ, உடைகளிலோ, செலவழிக்கும் பணத்திலோ குறையில்லாமல் பார்த்துக் கொள்ளத் துடித்தனர்.
தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி முன்பே டோக்கன் கொடுத்து பயனில்லை. தேர்தல் ஆணைய‌த்‌திடம் எடுத்துச் சொல்லியும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. படை பலம் அவர்களிடம் மாற்று கட்சிக்கு தேர்தல் வேலை செய்தாலோ, வாக்காளர்கள் வாக்களித்தாலோ அவர்களை உருட்டி மிரட்ட சிறிது கூடத்தயங்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால் இதைத்தான் திருமங்கலம் பார்முலா என்று கொண்டாடினர். பணம் சூறாவளியாகக்கூட அல்ல, சுனாமியாக வாக்காளர்களுக்கு மட்டுமல்ல வழிப்போக்கர்களுக்கும் சேர்த்து தாராளமயமாக்கப்பட்டது என்பது ஊர் அறிந்த உண்மை.
எதிர்க்கட்சிகளே இல்லாமல் செய்துவிடுவோம் என்று ஆளும் வர்க்கத்தினர் ஆர்ப்பரித்தனர். இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளரையே தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டனர். இதர கட்சி நிர்வாகிகள் ஆளுவோர் பக்கம் சேர்ந்தால் எதையும் பெறலாம் என்ற நிலையை உருவாக்கினர். இவற்றைக் கண்டு மனசாட்சியுள்ள மக்களோ, தமிழ்நாட்டில் இனி தேர்தல்கள் என்றால் வெறும் சடங்குகளாகி விடுமோ என்று பயந்தனர்.
இந்த சூழ்நிலையில் ஜனநாயகத்திற்கே சவாலாக வந்த சர்வாதிகார கும்பலை எதிர்த்து தே.மு.தி.க தன்னந்தனியாக போட்டியிட்டது. கையில் காசு இல்லை. மனத்தில் மாசு இல்லை. நெஞ்சுரமும், நேர்மைத்திறமுமே தே.மு.தி.க.வின் ஆயுதங்கள், குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கின்ற ஜனநாயகத்தை ஆளும் வர்க்கம் குழிதோண்டி புதைத்து விடக்கூடாது என்பதால், தே.மு.தி.க இந்த தர்ம யுத்தத்தில் ஈடுபட்டது.
தே.மு.தி.க.வை அழித்துவிடுவோம் என்று ஆர்ப்பரித்தவர்கள் எண்ணத்தில் மண் விழும் வகையில் இந்த இடைத்தேர்தலில் தே.மு.தி.க கணிசமான முறையில் தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 10 சதவிகித வாக்குகளைப் போல இரண்டரை மடங்கு இந்த இடைத்தேர்தலில் வாக்குகளை தே.மு.தி.க பெற்றுள்ளது.
உதாரணத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பர்கூரில் 18,223 ‌லிரு‌ந்து தற்பொழுது 30,738 வாக்குகளையும், ஸ்ரீவைகுண்டத்தில் 8,347 லிருந்து 22,468 வாக்குகளையும் பெற்றுள்ளது. தமிழ்நாட்டைப் பிடித்துள்ள ஊழல் நோயை ஒழித்துக் கட்ட தமிழ்நாட்ட மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதும், சர்வாதிகார பிடியிலிருந்து ஜனநாயகத்தை மீட்டு உயிரூட்ட முன்வந்துள்ளனர் என்பதையும், எத்தகைய பணச்சுனாமி அடித்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் நேர்மையான வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.மக்களையும், தெய்வத்தையும் நம்பி தே.மு.தி.க நிற்கின்றது என்று, நான் கூறி வருவதைப் போல தே.மு.தி.க.வை மக்களும், தெய்வமும் கைவிட வில்லை. மூன்று மாதங்களிலேயே அபரிமிதமான வளர்ச்சியை தே.மு.தி.க.விற்கு அளித்துள்ளனர். தமிழ்நாடு ஒரு நல்ல எதிர்காலத்தைப் பெற வேண்டுமென்று விரும்பும் நல்லவர்கள் பெருமைப்படத்தக்க வகையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் அறிகுறியாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. ஆபாசங்களுக்கும், அதட்டல், மிரட்டல்களுக்கும் இரையாகாமல், அல்லும், பகலும் அயராது பணியாற்றிய கட்சியினருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுக்களைக் குவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
கருணாநிதியின் குடும்ப சர்வாதிகாரத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என்று கருதி வாக்களித்த எம்ஜிஆர். விசுவாசிகளுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இந்த நாடு நல்ல அரசியலைப் பெற வேண்டுமென்றும், இளைய தலைமுறையினருக்கு நல்லஎதிர்காலம் அமைய வேண்டுமென்றும் எண்ணி எதற்கும் இடம்கொடுக்காமல் தே.மு.தி.க.விற்கு துணிவோடும், தெளிவோடும் வாக்களித்த இளைஞர்கள், தாய்மார்கள் உள்பட அனைத்து வாக்காளர் பெருமக்களுக்கு என்றும் நான் நன்றியுள்ளவன் ஆவேன்.
இந்த இடைத்தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழ்நாட்டு அரசியலில் தே.மு.தி.க ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் இயக்கம் என்பதையும் நிரூபித்து காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு என்னால் இயன்ற பணிகளைத் தொடர்ந்து செய்வேன் என்று உறுதி கூறுகிறேன்'' எ‌ன்று ‌‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Tags: தே.மு.தி.க.

Share this