Breaking News

பொதுநலப் போர்வையில் சுயநலம்!

நிர்வாகி
0
மருத்துவச் செலவுகள் பொதுவாக கைக்கு மீறியதாக இருப்பதாலும், குறிப்பாக ஏழைகளுக்கு அறுவைச் சிகிச்சை மருத்துவம் என்பது நினைத்துப் பார்க்கவும் முடியாத அளவுக்கு செலவு மிக்கதாக மாறிவிட்டதாலும், எல்லாருக்கும் முக்கிய அறுவைச் சிகிச்சை மருத்துவத்தை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்குவது அரிது என்பதாலும், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு. கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் நோக்கம், ஏழைகள் தங்களிடம் பணம் இல்லாவிட்டாலும், எந்தத் தயக்கமும் இல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து தேவைப்படும் அறுவைச் சிகிச்சையைச் செய்துகொள்ளலாம். அதற்கான செலவை, காப்பீட்டு நிறுவனம் ஈட்டுத் தொகையாக அந்தத் தனியார் மருத்துவமனைக்கு அளித்துவிடும். இதனால் ஏழையை எந்தத் தனியார் மருத்துவமனையும் விரட்டி அடிக்காது.
ஒரு கோடி குடும்பங்கள் பயனடையும் இந்த காப்பீட்டுத் திட்டத்துக்காக "ஸ்டார் ஹெல்த்' இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ஓராண்டுக்கான சந்தா தொகையாக ரூ.517 கோடியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் 320 தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் எஸ். விநாயகம், நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ""தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள 14 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒரு சிறப்பு வார்டு, தனியார் மருத்துவமனைக்கு இணையாக உயர் தரத்தில் உருவாக்கப்படும். இவ்வாறு அரசு மருத்துவமனையை மேம்படுத்தி சிகிச்சை அளிப்பதால், காப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதி அரசுக்கே திரும்பக் கிடைக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது, தனியார் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ சிகிச்சையை ஏழை பெறுகிறார் என்பதோடு, ஏதோ ஒரு தனியார் மருத்துவமனைக்குப் போக வேண்டிய காப்பீட்டுத் தொகை அரசு மருத்துவமனைக்குக் கிடைத்துவிடுகிறது.
இதே விஷயத்தை கொஞ்சம் மாற்றிப் போட்டு யோசிக்க வேண்டியிருக்கிறது.
எந்தவொரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனமும், தோராயமாக அளிக்க நேரிடும் 60 சதவீத ஈட்டுத் தொகை, தனக்குக் கிடைக்க வேண்டிய 40 சதவீத லாபம் ஆகியவற்றை தோராயக் கணக்குப் போட்டுத்தான் ஆண்டுச் சந்தாவைத் தீர்மானிக்கின்றன. இதிலும் எதிர்பார்த்த அளவுக்கு நோயாளிகள் ஈட்டுத்தொகை கேட்பு இல்லையென்றால், லாபத்தின் அளவும் அதிகமாக இருக்கும்.
தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவச் செலவுக்கான ஈட்டுத்தொகையை காப்பீட்டு நிறுவனம் தந்தே ஆகவேண்டும். வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். கொடுக்காமல் இருக்கவே முடியாது. ஆனால், அரசு மருத்துவமனைகள் அப்படியல்ல. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தாமதப்படுத்தலாம். அல்லது சிறப்பு வார்டில் பத்து ஏழைகளுக்கு முக்கிய அறுவைச் சிகிச்சை நடந்தால் அதில் 5-க்கு மட்டும் காப்பீடு கோரும்படியும், மீதி 5 நோயாளிகளை வழக்கமான பொது வார்டு கணக்கில் சேர்ப்பதும் பெரிய விஷயமல்ல.
ஏழைகளுக்கான உயிர்காப்பு உயர் சிகிச்சைத் திட்டத்திற்கான ஈட்டுத்தொகை மிகமிகத் தாமதமாகக் கிடைக்கும் என்ற சூழல் ஏற்படும், அல்லது வதந்தி பரவும் என்றால், தனியார் மருத்துவமனைகள் ஏழைகள் மீது பாசத்தைப் பொழியாது. "அரசு மருத்துவமனையிலேயே சிறப்பு வார்டு இருக்கிறதே, அங்கேயே போங்கள்' என்று விரட்டி விடுவார்கள்.
ஆக, ஏழைகள் மீண்டும் அரசு மருத்துவமனைக்கே வந்து சேரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆண்டுச் சந்தா ரூ.517 கோடியில், காப்பீட்டு நிறுவனத்துக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
அரசின் காப்பீட்டுத் தொகை, அரசு மருத்துவமனைக்கே இப்படியாகச் சுற்றி வளைத்து வருவதைவிட, அரசு நிறுவனமான எல்.ஐ.சி-க்கே இந்த காப்பீட்டுத் திட்டத்தைத் தந்திருந்தால், செலவானாலும் அரசுக்கே, மிச்சமானாலும் அரசுக்கே என்று ஆகாதா?
மருத்துவக் காப்பீட்டுக்கு சந்தா என்பதும், ஏழைகள் பலனடைவார்கள் என்பதும் சுயநலத்தில் சற்று பொதுநலமும் கலந்திருப்பது என்பதுதானே தவிர வேறென்ன?
அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளைவிடத் தரம் மிகுந்ததாக மாற்றப்படுவதற்கு முயற்சிக்காமல், தர்மத்திற்கு நடத்தப்படும் தர்மாஸ்பத்திரிகளாக்குவதுதான் அரசின் நோக்கம் போலிருக்கிறதே. கருணையின் பெயரால் நிதி தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது. அவ்வளவே!

Tags: தலையங்கம் தினமணி

Share this