Breaking News

வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லை! - விவசாயிகள் கவலை

நிர்வாகி
0
வீராணம் ஏரி, பாசனத்துக்கு திறப்பதில் கால தாமதம் ஏற்படுவதால், சம்பா நெல் சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் தாலுகாக்கள் மற்றும் கடலூர் தாலுகாவில் ஒரு பகுதி ஆகியவற்றில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள், காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் ஆகும்.

இந்தப் பகுதிகளுக்கு கொள்ளிடம் கீழணையில் இருந்து, காவிரி நீர் கிடைக்கிறது. மேட்டூர் அணை கடந்த 28-ம் தேதி பாசனத்துக்குத் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து போதுமான தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும், இதனால் விவசாயப் பணிகளுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

முறையாகத் தண்ணீர் திறந்து இருந்தால் கடந்த 10-ம் தேதியே வீராணம் ஏரி நிரம்பி இருக்கும், ஆனால், இதுவரை நிரம்பவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

வீராணம் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தால் மட்டுமே பாசனத்துக்கு (44856 ஏக்கர்) தண்ணீர் திறக்க முடியும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வீராணம் ஏரியின் நீர் மட்டம் 40 அடி. சென்னை குடிநீருக்கும் தண்ணீர் அனுப்பவில்லை.
வீராணத்துக்கு வெறும் 100 கன அடி மட்டுமே திறக்கப்பட்டதால், காய்ந்து கிடந்த ஏரியில் உறிஞ்சப்பட்டும், கடுமையாக வெயில் காய்வதால் ஆவியாகியும், நீர் வீணாகியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வீராணத்துக்கு தண்ணீர் விநியோகிக்கும் கீழணையில் நீர்மட்டம், 3-ம் தேதி 9 அடியாக இருந்தது, சனிக்கிழமை 6.7 அடியாகக் குறைந்தது. இதனால் கடந்த 5 நாள்களாக வீராணத்துக்குத் தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்டவற்றிலும் தண்ணீர் வரத்து இல்லை.

இந்த நிலையில் 17-ம் தேதி வீராணம் ஏரி பாசனத்துக்குத் திறக்கப்படும் என்று, எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன்:
வடவாறில் 1000 கனஅடி வீதம் 7 நாள்கள் தண்ணீர் வந்தால்தான் வீராணம் ஏரியின் நீர் மட்டம் 44 அடியாக உயரும். மேட்டூர் அணை ஜூலை 28-ல் திறக்கப்பட்டதாகக் கூறியும், பாசனப் பகுதிகளுக்குப் பயனில்லை. மேட்டூர் அணை திறந்து 19 நாள் ஆகியும், வீராணத்துக்கு தண்ணீர் வந்து சேராதது இதுவே முதல்முறை.

பருவமழை பொய்த்ததால் நேரடி நெல் விதைப்பும் நடக்கவில்லை. குறுவை சாகுபடியும் இல்லை. சம்பா பயிரையாவது உரிய காலத்தில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதுவும் சந்தேகத்துக்கு இடமாகி விட்டது. இப்போது தண்ணீர் கிடைத்தால்கூட, மேல்மட்டப் பகுதிகளில் செப்டம்பர் 15க்கு மேல்தான் நாற்று நடவு நடைபெறும். கடைமடைப் பகுதிகளில் நடவு, அக்டோபர் 15க்கு மேல் ஆகிவிடும்.

இதனால் 90 முதல் 110 நாள்களில் அறுவடை ஆகும், ஏடிடி 43, ஏடிடி 39, ஏஎஸ்டி 19 நெல் ரகங்களையே பயிரிட முடியும். 130 முதல் 150 நாள்களில் அறுவடை ஆகும், நல்ல விலை கிடைக்கும் சன்ன ரகங்களான சி.ஆர்.1009, ஏடிடி44, ஏடிடி38, கோ43, வெள்ளைப் பொன்னி போன்ற ரகங்களைப் பயிரிட முடியாது. உளுந்து பயிரிடுவதும் பாதிக்கும் என்றார் ரவீந்திரன்.
பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் எத்திராஜ்: வீராணம் ஏரிக்கு 12-ம் தேதி முதல் தண்ணீர் வரத்து இல்லை. தற்போது 1000 கனஅடி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அளவு தண்ணீர் தொடர்ந்து வந்தால், 23-ம் தேதிக்கு மேல்தான் வீராணம் ஏரி, பாசனத்துக்குத் திறக்கப்படும் என்றார்.

Tags: லால்பேட்டை வீராணம்

Share this