இரண்டாவது பத்தில், ரமலான்!
இரண்டாவது பத்தில் முறையாக அல்லாஹ்விடம் மனமுருகி அதிகம் அதிகம் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். நாம் அறிந்தும் அறியாமலும் நம்மால் நிகழ்ந்த அமல்களின் குறைபாடுகள், சிறிய பெரிய பாவங்களை நினைவு கூர்ந்து, அவற்றைப் பற்றி மனம் வருந்தி, மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் இருக்க உறுதியெடுத்துக் கொண்டு அனைத்துத் தொழுகைகளிலும் குறிப்பாக இரவுத் தொழுகைகளிலும் பாவமன்னிப்பையும் இவற்றில் இருந்து பாதுகாவல் பெற அல்லாஹ்வின் உதவியும் கேட்க வேண்டும் என்று உணரலாம்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செயல்க)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப) வாழ்வேயன்றி வேறில்லை. (அல் குர் ஆன் 3 : 185)
இம்மை எனும் நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் மாயையிலும் அலங்காரங்களில் மூழ்கி உலகமே சதம் எனும் போக்கில் அதனைப் பெருக்கும் பேராசையில் தமது சொந்த ஆசாபாசங்களுக்கும் மனோயிச்சைகளுக்கும் தமது குடும்பத்தினர்களுக்கும் வாரிசுகளுக்கும் என்று அயராமல் உழைத்து மனிதன் சம்பாதிக்கும்-செலவிடும்-சேமிக்கும் ஒவ்வொன்றிலும் மறுமை வாழ்க்கையை மறந்து, மனம் போன போக்கில் இறை வரம்புகள் மீறப்பட்டு அல்லது உதாசீனப் படுத்தப்படுமானால், மிகப்பெரும் வாழ்க்கை வசதிகளும் இன்பங்களும்,சகல துறைகளில் வெற்றிகள் பெற்றாலும் அது உண்மை வெற்றியாகாது. நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றியே உண்மை வெற்றி என்பதை வலியுறுத்தும் மேற்கண்ட இறைவசனத்தை எந்நேரமும் மனதில் நிறுத்தி இவ்வெற்றியை பெற்றிட நமது அயராத முயற்சிகள் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் மூலம் செயல் படவேண்டும்.
"எவர் ஒருவர் ரமலான் மாதத்தைப் பெற்று அல்லாஹ்விடமிருந்து பாவமன்னிப்பு கோரவில்லையோ அவரும் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாகட்டும்" என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் துவா செய்தபோது நபி (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறியதாகக் கீழ்க்காணும் ஹதீஸில் காணமுடிகிறது.இதுவும் நமக்கு ரமலானின் துவாக்களில் பாவமன்னிப்புக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது:
"நீங்கள் மிம்பருக்கு அருகில் செல்லுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவ்வாறு சென்றோம். அவர்கள் முதல்படியில் ஏறிய போது 'ஆமீன்" என்றனர். இரண்டாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர். மூன்றாவது படியில் ஏறிய போதும் 'ஆமீன்" என்றனர்.
இதுவரை நாங்கள் செவியுறாத ஒன்றை உங்களிடமிருந்து செவியுறுகிறோம் என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்து யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட(க்கோர)வில்லையோ அவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள், நான் ஆமீன் என்றேன். 'உங்கனைப் பற்றிக் கூறப்படும் போது அதைக் கேட்டு உங்களுக்காக ஸலவாத் கூறாதவர் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன். 'தனது பெற்றோர்களிருவரையும் அல்லது இருவரில் ஒருவரை முதிய வயதில் பெற்று (அவர்களுக்கு சேவை செய்து) யார் சொர்க்கம் செல்லவில்லையோ அவரும் (இறையருளை விட்டும்) தூரமாகட்டும்" என்றார்கள். நான் ஆமீன் என்றேன் என நபி (ஸல்) விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஃபு பின் உஜ்ரா (ரலி), நூல்: ஹாகிம்)
அதிரை POST
Tags: ரமளான்