Breaking News

என் வா‌ழ்க்கைக்கு புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டி: அப்துல்கலாம்

நிர்வாகி
0
''என் வாழ்க்கையில் புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டியாக அமைந்தது'' என ஈரோட்டில் நடந்த புத்தக திருவிழா நிறைவு நாளில் முன்னாள் குடியரசு‌த் தலைவ‌ர் டாக்டர் அப்துல்கலாம் பேசினார்.

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் கடந்த ஒரு வாரம் நடந்த புத்தக திருவிழா நிறைவு நாள் நேற்று மாலையோடு முடிந்தது. நிறைவு நாளில் முன்னாள் குடியரசு‌த் தலைவ‌ர் டாக்டர் அப்துல்கலாம் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகை‌யி‌ல், நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். என்னோடு சேர்ந்து பெற்றோர்களும் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். என் வீட்டின் பூஜை அறை அல்லது பிரா‌ர்த்தனை இடத்திற்கு அருகில் 20 நல்ல புத்தகங்களை வைத்து சிறு நூலகத்தை அமைப்பேன். என் வளர்ந்த மகன் அல்லது மகள் 20 புத்தகங்களை 200 புத்தகங்கள் கொண்ட நூலகமாக மாற்றுவார்.
என் பேரன், பேத்திகள் 2000 புத்தகங்கள் கொண்ட நூலகமாக மாற்றுவார்கள். எங்கள் குடும்ப நூலகத்தை தினமும் பயன்படுத்தி இன்று முதல் நல்ல புத்தகங்களை படிப்பேன். எங்கள் வீட்டு நூலகம்தான் பரம்பரை சொத்து. அறிவு களஞ்சியம், தமிழகத்தின் அறிவு புரட்சிக்கு அது ஆதாரமாக அமையும். இவ்வாறு அப்துல்கலாம் வாசிக்க அனைவரும் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
பின் அவர் பேசுகை‌யி‌ல், ஈரோட்டில் அறிவு களஞ்சியத்தை உருவாக்க மக்கள் சிந்தனை பேரவை எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பாராட்டு. நல்ல புத்தகங்கள் கற்பனை சக்தியை வளர்க்கும். கற்பனை சக்தி சிந்தனையை வளர்க்கும். சிந்தனை அறிவு நம்மை மேம்படுத்தும். மூத்த பத்திரிக்கையாளர்கள் அதிகளவு புத்தகங்களை படைக்க வேண்டும். எனது வாழ்க்கைக்கு புத்தகங்கள்தான் சிறந்த வழிகாட்டியாக அமைந்தது.
என் வாழ்க்கையை மூன்று புத்தகங்கள்தான் வழிநடத்தி சென்றது. 1954ஆம் ஆண்டு சென்னை மூர்மா‌ர்‌க்கெட்டில் ரூ.20க்கு வாங்கிய புத்தகத்தை நான் இன்றும் வைத்துள்ளேன். மனநிலையை சரிப்படுத்துவது புத்தகமே. நல்ல புத்தகங்கள் மட்டும் என்றும் உற்ற நண்பனாக இருக்கும் எ‌ன்று அப்துல்கலாம் பேசினார்.

Tags: அப்துல்கலாம் வழிகாட்டி

Share this