Breaking News

அந்தமானில் கடும் நிலநடுக்கம் - சென்னை உள்பட தமிழகத்திலும் பூகம்பம் - மக்கள் பீதி

நிர்வாகி
0
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடலோர மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் நாகை, கடலூர் மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
நேற்று நள்ளிரவுக்கு மேல் 1.26 மணியளவில் போர்ட் பிளேருக்கு வடக்கே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவாகியிருந்தது.இதனால் அந்தமான் முழுவதும் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
வீடுகளில் உள்ள பொருட்கள் கீழே விழுந்து உடைந்தன. கட்டடங்களும் ஆடியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். இருப்பினும் அந்தமான் நிர்வாகம் சுனாமி எச்சரிக்கை எதையும் பிறப்பிக்கவில்லை.
விடிய விடிய மக்கள் தெருக்களிலேயே குழுமியிருந்தனர். சேத விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இருப்பினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று தெரிகிறது.தமிழக கடலோர மாவட்டங்களில்...தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டனம், கடலூர், காஞ்சிபுரம், சென்னை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
சென்னை நகரில் மயிலாப்பூர், அண்ணா நகர், பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம், தி.நகர், மடிப்பாக்கம், திருவான்மியூர், கொட்டிவாக்கம், திரு.வி.க.நகர், திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.வீடுகள் மற்றும் பொருட்கள் ஆடின.
இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பீதி காரணமாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசித்து வருவோர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.ஆனால் வெளியில் வந்தால் கன மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் வெளியிலும் இருக்க முடியாமல், வீட்டுக்குள்ளும் இருக்க பயமாக இருந்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.நாகையில் சுனாமி எச்சரிக்கை...
நாகை மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கடலில் அலைகள் கடுமையாக வீசியதால் மாவட்ட நிர்வாகம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. இதேபோல கடலூரிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.இருப்பினும் சிறிது நேரத்தில் இந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் கடல் மோசமான சூழ்நிலையில் இருப்பதால் கடலோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுளளனர். மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத்திலும்...
நிலநடுக்கத்தின் பாதிப்பை ஹைதராபாத், விசாகப்பட்டனம், புவனேஸ்வர் மக்களும் உணர்ந்துள்ளனர். இருப்பினும் இங்கு மிகச் சிறிய அளவிலான நிலநடுக்கமே ஏற்பட்டதால் பாதிப்பு ஏதும் இல்லை.சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் 60 பேர் படுகாயம்..
இதேபோல ஜப்பானிலும் சுகுரு என்ற தீவுக்கு அருகே பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 ஆக இருந்தது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பொருட்கள் கீழே விழுந்தன.இந்த நிலநடுக்கத்தில் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். கட்டங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோல இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தமானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தக் கூடிய வல்லமையுடன் கூடியதாக இருப்பதால் ஜப்பான், இந்தோனேசியா, மியான்மர், தாய்லாந்து, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

Tags: சுனாமி பூகம்பம்

Share this