Breaking News

வீராணம் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கியது

J.நூருல்அமீன்
0
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கியது.
போதிய மழை இல்லாததாலும், மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் 47.5 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி ஜூலை மாதம் முற்றிலும் வறண்டு போனது. சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து ஜூலை 12-ம் தேதி ஆண்டுதோறும் நீர் திறக்கப்படும். ஆனால் மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் திறக்கப்படவில்லை. தற்போது குடகு பகுதியில் பெய்த மழையினால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி கூடுதலாக உள்ள நீர் மேட்டுர் வந்தது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியதால் ஆகஸ்ட் 8-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்நிலையில் விவசாயிகள் வேண்டுகோளுக்கிணங்கவும், பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில் ஜூலை 28-ம் தேதியே மேட்டூர் அணையை திறக்க முதல்வர் மறு உத்தரவு பிறப்பித்தார்.
கல்லணையிலிருந்து ஆகஸ்ட் 1-ம் தேதி கொள்ளிடத்தில் நீர் திறக்கப்பட்டு அன்றிரவே கீழணையை அடைந்தது. கீழணையில் நீர் 8.5 அடி கொள்ளளவை எட்டியதால் முன்கூட்டியே கடலூர் மாவட்ட பாசனத்திற்காக ஆகஸ்ட் 3-ம் தேதி திங்கள்கிழமை திறந்துவிடப்பட்டது. வடவாறு மூலமாக வீராணம் ஏரிக்கு திங்கள்கிழமை நீர்வரத்து தொடங்கியுள்ளதால் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags: லால்பேட்டை வீராணம்

Share this