Breaking News

'சமச்சீர் கல்வித் திட்டம்,

நிர்வாகி
0
தமிழகத்தில் பல்வேறு தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சமச்சீர் கல்வித் திட்டம், எதிர்வரும் கல்வியாண்டு முதல் நடை முறைப்படுத்தப்படும்' என தமிழக அரசு இப்போது அறிவித்துள்ளது. 'சமச்சீர் கல்வித் திட்டம் என்றால் என்ன?' என்று தெரியாதவர்கள்கூட, 'அது வந்தால் நல்லது' என்று கூறுகிற அளவுக்கு அதைப் பற்றி சாதகமான ஓர் எண்ணம் எல்லோரிடமுமே பரவியிருக்கிறது
அதற்குக் காரணம், இப்போதுள்ள கல்வி முறைதான்..! ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி, வசதி இருப்பவர்களுக்கு இன்னொரு விதமான கல்வி என்று பெரும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது! எனவே, 'சமச்சீர் கல்வி என்பது சமத்துவமான கல்வியை வழங்கும்' என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் இதை வரவேற்கிறார்கள்.
சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த ஆலோசனை சொல்வதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், தமிழக அரசு அதை நடை முறைப்படுத்துமா என்ற சந்தேகம் பரவலாக இருந்தது. முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகள் குறித்துக் கல்வியாளர்கள் மத்தியிலும், கல்வி நிறுவனங்களை நடத்துகிறவர்கள் மத்தியிலும் விவாதங்கள் நடத்தப்பட்டு, பல்வேறு கருத்துகளும் அப்போது தெரிவிக்கப்பட்டன. முத்துக்குமரன் குழு அறிக்கையைத் தொடர்ந்து அதில் கண்டுள்ள பரிந்துரைகளை எவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் செயல்படுத்துவது என்பதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமாரை தமிழக அரசு நியமித்தது... தன்னுடைய பரிந்துரைகளை அரசுக்கு அளித்தார். இந்நிலையில் தமிழக அரசு, 'சமச்சீர் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்' என அறிவித்திருப்பது நம்ப முடியாத... ஆனால், வரவேற்கத் தக்க முடிவாக இருக் கிறது..!
முத்துக்குமரன் குழுவின் முக்கியமான பரிந்துரையாகக் கருதப்பட்டது, பயிற்றுமொழி குறித்த பரிந்துரைதான். 'பள்ளிக் கல்வி முழுவதையும் தமிழ் வழியில் அளிக்க வேண்டும்' என்று அக்குழு கூறியிருந்ததை தமிழ் ஆர்வ லர்கள் வரவேற்றனர். ஆனால், பெற்றோர்களும், தனியார் பள்ளி நிறுவனர்களும் எதிர்ப்புத் தெரிவித் தனர். அதனால்தானோ என்னவோ, தற்போது பயிற்றுமொழி குறித்த அந்தப் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது தமிழக அரசு செயல்படுத்தப்போவதாக கூறியுள்ள திட்டத்தில் நான்கு அம்சங்கள் இடம்பெற உள்ளன. தற்போது உள்ள பல்வேறு போர்டுகளை ஒன்றிணைத்து, ஒரே போர்டாக உருவாக்குவது... மாநில பாடத்திட்டம், மெட்ரிக் பாடத் திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம்,
ஓ.எஸ்.எல்.சி. பாடத்திட்டம் ஆகிய நான்கு விதமான பாடத்திட்டங்களுக்கு நான்கு போர்டுகள் தற்போது இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து ஒரே போர்டாக்குவது வரவேற்கப்பட வேண்டியதுதான். அண்மையில், 'இந்தியா முழுவதும் ஒரே கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும்' என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருந்தார். 'அது மாநிலங்களின் உரிமையில் தலையிடுவதாக உள்ளது' என எதிர்ப்புக் கிளம்பியது. அதனால் அந்த முடிவை மத்திய அரசு கைவிட்டு விட்டது. அதே போல மாநில அளவில் மேற்கொள்ளப்படுகிற இந்த முயற்சிக்கும் எதிர்ப்பு வரலாம். குறிப்பாக, மெட்ரிக் பள்ளிகளை நடத்துகிறவர்கள் இதை ஏற்க விரும்ப மாட்டார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி சமச்சீர் கல்வியை அரங்கேற்ற தமிழக அரசு உறுதியாக இருக்கும் பட்சத்தில், நிச்சயமாக இதை செயல்படுத்த முடியும்.
ஒரே விதமான போர்டை உருவாக்குவது மட்டுமின்றி, எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமான பாடத் திட்டத்தை உருவாக்கப்போவதாகவும், தமிழக அரசு கூறியுள்ளது. அதன் முதற்படியாக, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு புதிய பாட நூல்கள் எதிர்வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு பாடத் திட்டத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டுவிடாமல், அவற்றில் நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டு, புதிய அம்சங்களையும் இணைத்து புதிதாகப் பாட நூல்களை உருவாக்கப் போவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுவும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.தமிழக அரசு செய்யவிருக்கும் இன்னொரு விஷயம், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே விதமான தேர்வு முறை! ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை தேர்வுகளை மாண வர்கள் எழுத வேண்டும் என்பதை, ஒரே சீராக அரசு முடிவு செய்ய இருக்கிறது. 2011-12-ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் பொதுப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாட நூல்கள் எழுதி, அச்சிட்டு விநியோகிக்க, இந்தக் கால அளவு தவிர்க்க முடியாதது.சமச்சீர் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமான அம்சங்கள் இவை என்றபோதிலும், மேலும் சில இன்றிய மையாத அம்சங்கள் இருக்கின்றன. அவற்றையும் நடை முறைப்படுத்தினால்தான் உண்மையிலேயே நம்முடைய கல்வி, சமச்சீரான கல்வியாக இருக்கும். அந்த அம்சங்கள் குறித்தும் முத்துக்குமரன் குழு விரிவாகப் பேசியிருக்கிறது.
ஆசிரியர், மாணவர் விகிதம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற அக்குழுவின் பரிந்துரை முக்கிய மானதாகும். 'முப்பது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்' என்ற விகிதத்தில் ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட வேண்டும். தற்போது ஆயிரக்கணக்கில் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்துவந்தாலும், இந்த விகிதத்தில் ஆசிரியர்கள் இருப்பது சந்தேகமே. அதிலும் குறிப்பாக, தமிழக அரசு அறிமுகப்படுத்தி, பல்வேறு மாநிலங்களாலும் பின்பற்றப்படுகிற 'செயல்வழி கற்றல் முறை' கூடுதலாக ஆசிரியரின் கவனத்தைக் கோருகின்ற காரணத்தால், 'இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்' என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.முத்துக்குமரன் குழுவின் பரிந்துரைகளில் இன்னொரு அம்சம், பள்ளிகளின் நிர்வாகம் பற்றியதாகும். பள்ளி களின் நிர்வாகத்தில் தன்னாட்சி இருக்க வேண்டுமென்று அது பரிந்துரை செய்திருந்தது. 'பொதுப்பள்ளி முறை' உருவாவதற்கு இப்படி தன்னாட்சி கொடுப்பது உதவியாக இருக்கும் என்று பல்வேறு கல்வியாளர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர். அண்மைக் காலமாக பெரிதும் விவாதிக்கப்படுகிற 'அருகமைப் பள்ளி' முறை குறித்தும் தமிழக அரசு கவனம் செலுத்தியாக வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்யாவிட்டால் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் கல்வியில் பிரதிபலிப்பது மேலும் தொடரும். முத்துக்குமரன் குழு, விஜயகுமார் குழு ஆகியவற்றின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பள்ளிக் கல்வியை சீரமைக்க அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட 'நூறு நாள் செயல் திட்டத்'தில் இருக்கும் அம்சங்களையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.சமச்சீர் கல்வியை மொத்தமாக ஒரே நாளில் வழங்கிவிட முடியாது... ஆனால், அதை நோக்கித் துணிச்சலாக அடியெடுத்து வைத்துள்ளது தமிழக அரசு. உறுதியோடு இதில் நின்று, செயல்முறைக்கும் கொண்டு வந்தால் அரசையும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசையும், உறுதுணையாக இருக்கின்ற அதிகாரிகளையும் மனமாரப் பாராட்டலாம்!

Tags: சமச்சீர் கல்வி

Share this