Breaking News

குவைத்தில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு மாநாடு!

நிர்வாகி
0
குவைத் மண்டல தமுமுக, குவைத் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் சமூக விழிப்புணர்வு மாநாட்டை குவைத் ரவ்தா பகுதியில் அமைந்துள்ள ஜம்இய்யத் அல்-இஸ்லாஹ் அரங்கில் சிறப்புடன் நடத்தியது.
மாலை சரியாக 5 :30 மணிக்கு சவூதியிலிருந்து வருகை தந்திருந்த பொறியாளர் சர்புதீன் தலைமை தாங்க, குவைத் மண்டல தமுமுக தலைவர் திருச்சி அமானுல்லா அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய முதல் அமர்வின் தொடக்கமாக,
'ஒற்றுமை' என்ற தலைப்பில் பேசிய குவைத் விடுதலை சிறுத்தைகளின் பிரதிநிதி அன்பரசன் அவர்கள், முஸ்லிம் சமுதாயம் பின்தங்கியதற்கு காரணம் உங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமையின்மையே. எனவே ஒவ்வொருவரும் எங்கள் பின்னால் அணிவகுக்க வாருங்கள் என்று அழைப்பதை விடுத்து எங்களை போன்றோர் பார்வையில் சிறப்பாக சமுதாயப்பணியாற்றிக் கொண்டிருக்கும் தமுமுகவில் முஸ்லிம்கள் அணிவகுத்து வெற்றிகளை ஈட்ட முன்வரவேண்டும் என்றார்.அடுத்து, 'ஊடக விழிப்புணர்வு' என்ற தலைப்பில் உரையாற்றிய 'அரவணைப்பு' என்ற அமைப்பின் அமைப்பாளர் இளங்கோவன், தங்களது அமைப்பு செய்து வரும் கல்வி பணிகள்- அநாதை குழந்தைகள் அரவணைப்பு பற்றி எடுத்துக்கூறியதோடு, நாம் ஒவ்வொருவரும் நமது வருமானத்தில் குறைந்தது ஒரு சதவிகிதமாவது அனாதைகள் அரவணைப்பு மற்றும் எளியோர்களின் கல்விக்காக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றவர், குறைந்தது 25 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வதுதான் தமது அமைப்பின் எதிர்கால லட்சியம் என்று கூறி முடித்தார்.அடுத்து 'உயர்கல்வி மற்றும்- உயர்பதவிகளில் சிறுபான்மையினர் ஏமாற்றப்படுகிறார்களா?' என்ற தலைப்பில் பேசிய வளநாடன் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் வளநாடன் அவர்கள், மத்திய-மாநில அரசுகளின் உயர்பதவிகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்தை பட்டியலிட்டு பேசியவர், இந்நிலைக்கு நமது கல்லாமையும் காரணம் என்றதோடு, பாஸ்போர்ட் மோகத்தை ஒழித்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கல்வியாளர்களாக நாம் மாறவேண்டும். அப்போதுதான் அரசின் உயர்பதவிகளை நம்மால் எட்டிப்பிடிக்க முடியும் என்றார்.அடுத்து 'கல்வி விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையின் பொதுச்செயலாளர் சகோதரர் அப்துல் அலீம் அவர்கள், சமீபத்தில் குவைத்தில் பணிக்கு வந்து முதலாளிகளின் கைவிரிப்பால் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகி தமுமுகவின் உதவியால் தாயகம் சென்ற ஒன்பது நபர்களை சுட்டிக்காட்டி, இதற்கு காரணம் கல்வி விழிப்புணர்வு இன்மையே என்று கூறியவர், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெற்றுத்தந்த தமுமுக, முஸ்லிம்களின் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிறைவு செய்தார்.அடுத்து இஷா தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டு, தொழுகை முடிந்தவுடன் ஆரம்பமான இரண்டாம் அமர்வுக்கு சவூதியில் இருந்து வருகை தந்த சகோதரர் பொறியாளர் ஷபியுல்லா கான் தலைமை தாங்கினார். தொடர்ந்து 'அரசியல் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் பேசிய தமிழ் ஓசை கவிஞர் மன்ற பிரதிநிதி ராவணன் அவர்கள், தற்போதைய அரசியல் நிலவரங்களை எடுத்துக் கூறியவர், பிறந்த இரண்டே மாதங்களில் கூட்டணி என்ற நடைவண்டியின் துணையின்றி மமக எனும் குழந்தை நடந்து காட்டியது பாராட்டுக்குரியது என்றவர், உங்கள் சமுதாய அமைப்புகள் தேர்தல் நேரத்தில் ஆளுக்கொரு கட்சியின் கதவை தட்டுவதை விடுத்து, நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒரே அணியாக ஒரு கட்சியின் கதவை தட்டினால் அவர்கள் திறந்தே தீரவேண்டிய நீங்கள் கேட்கும் இடங்களை தந்தே தீரவேண்டிய நிலை உருவாகும் என்றார்.இரண்டாவது அமர்வின் இரண்டாவது பேச்சாளராக மேடையேறிய, இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பாளர் மவ்லவி ஜமாலுத்தீன்ஃபாஸி அவர்கள், 'பொருளாதார விழிப்புணர்வு' என்ற தலைப்பில், பொருளாதாரம் வாழ்க்கைக்கு அவசியமானது தான். அதே நேரத்தில் பொருளாதரம் மீது பேராசை கொள்ளக்கூடாது என்றவர் 'சூரத்துல் தகாஸுர்' அத்தியாத்தை மையமாக கொண்டு தனது உரையை கொண்டு சென்றவர், ஆடம்பர வாழ்க்கைக்காக காலமெல்லாம் அரபுநாடுகளில் இளமையை தொலைத்து வாழ்வதை விட இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்வது தான் சிறந்தது என்றும், முஸ்லிம்கள் வட்டி போன்ற கொடும்பாவங்களில் சிக்கித்தவிப்பதை தவிர்க்க ஊர்கள் தோறும் 'பைத்துல் மால்' உருவாக்கப்பட வேண்டும் அதற்கு தமுமுக முழுமுயற்சி செய்யவேண்டும் என்றார்.இறுதியாக சிறப்புரையாற்றிய தமுமுகவின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள், மமக தொடங்கப்பட்ட ஒன்றிரண்டு மாதங்களில் அதுவும் கூட்டணி எதுவுமின்றி தேர்தல் களம் கண்டது சரியா என்ற சிந்தனை நம் சமுதாயத்தில் பெரும்பாலோர் உள்ளத்தில் உள்ளது. கூட்டணி அமைந்தால் தலைமை நிர்வாகிகளாகிய நாங்கள் நிற்பதாக இல்லை. தனித்து நின்று தோல்விதான் கிடைக்கும் என்பதை அறிந்துதான் அந்த தோல்வியை மற்றவர்களை விட தலைமை நிர்வாகிகளாகிய நாங்கள் ஏற்பதுதான் சரி என்பதால் தேர்தலில் போட்டியிட்டோம், மேலும் ஒரு சீட்டை பெற்றுக்கொண்டு தன் சுய முகவரியை இழந்து நிற்கும் முஸ்லிம்லீக் போல் அல்லாமல், தனித்து நின்று வெற்றி பெறாவிட்டாலும் முஸ்லிம்கள் எங்கள் அடையாளம் தொலைத்து எவருக்கும் அடிமை சாசனம் எழுதித்தந்து பதவியை அனுபவிக்க வேண்டியதில்லை என்று காட்டியுள்ளோம். அதனால் தான் வக்பு வாரிய பதவியை தூக்கி எறிந்தோம்.
எங்களை பொருத்தவரை பதவியை கொண்டு சமுதாயத்திற்கு பயன்தரும் பணிகளை செய்ய முடிந்தால் அதை ஏற்றுக் கொள்வோமே தவிர அலங்காரத்திற்காக நாம் பதவிக்கு வர ஒருபோதும் விரும்பமாட்டோம் என்றவர், வக்பு வாரியத்தில் தான் பதவிக்கு வரும் முன் இருந்த நிலையையும், தான் வந்த பின் வாரியத்தில் செய்த சீர்திருத்தங்களையும், மீட்கப்பட்ட வக்பு சொத்துக்கள பற்றியும் எடுத்துரைத்தவர், அரசியலில் மமக ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் இன்றல்லா விட்டாலும் வரும் காலத்தில் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் வெற்றியைத் தரும் என்று தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது நேரமின்மையால் சில கேள்விகளுக்கு மட்டுமே ஹைதர்அலி பதிலளித்தார். அதில் பிரதானமாக, பீஜே விவாதத்திற்கு அழைத்தபோது ஒடி ஒளிந்துவிட்டீர்களாமே என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு முதல் நாள், வேட்பாளரான நான் தேர்தல் ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளும் நாளை தேர்ந்தெடுத்து அவராக ஒரு ரூம் போட்டுக்கொண்டு, ரூம் போடுவது அவர்களது வழக்கம் போலும். அவர் போட்ட ரூமுக்கு அவர் அழைத்த நேரத்தில் நான் போகவேண்டும் என்றால், இது அறிவுடையோர் ஒப்புக்கொள்வார்களா? எனவே விவாத பூச்சாண்டி காட்டும் பீஜே, பொதுமேடையில் மக்கள் முன்னிலையில் என்மீதான குற்றச்சாட்டை முன்வைத்து விவாதத்திற்கு வரத்தயாரா என்று நாம் ஏற்கனவே சவாலாகவே சொல்லியுள்ளோம். அதோடு கருணாநிதிக்கு இப்போது நெருக்கமாக உள்ள பீஜே, கருணாநிதியிடம் சொல்லி என்மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை வைக்க சொல்லட்டுமே! நாம் சந்திக்க தாயார் என்று தானே இப்போதும் சொல்கிறோம் என்று ஹைதர் பதில் அளித்தார்.அரங்கின் கீழ்பகுதியில் ஆண்களும், மேல்பகுதியில் பெண்களாலும் நிரம்பிய இந்த மாநாடு சரியாக 10 ;30 மணிக்கு குவைத் மண்டல தமுமுக தலைவர் அமானுல்லா அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்! மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு சிறப்பான உணவு ஏற்பாட்டையும்- வாகன ஏற்பாட்டையும் மண்டல தமுமுக செயல்வீரர்கள் சிறப்பாக செய்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: குவைத் தமுமுக

Share this