Breaking News

தொடரும் பட்டாசு விபத்துகள்; பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை!

நிர்வாகி
0
வருமுன் காப்போம் என்பது அரசின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும். ஆனால் நம்மை ஆளும் அதிகார வர்க்கத்திற்கோ நாம் சில இழப்புகளை சந்தித்தபின்தான் அவர்களுக்கு சட்டம் போடவேண்டும் என்ற என்னமோ அல்லது இருக்கும் சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற என்னமோ ஏற்படுவதை நாம் காண்கிறோம். தனியார் ஒரு கல்விக்கூடத்தை நடத்த வேண்டுமெனில், அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.

அந்த விதிமுறைகளின் படிதான் தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்றதா என்பதை கடுமையாக கண்காணித்து இருந்தால் சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை தீயின் கோரத்திற்கு பலிகொடுத்திருக்கமாட்டோம்.

அதுபோல் விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் முறையாக உரிய வசதிகளுடன் இயங்குகிறதா என்பதை கண்காணித்திருந்தால் தொடரும் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளும்- உயிரிழப்புகளும் ஏற்படாமல் பாதுகாத்திருக்க முடியும். அதிலும் சில மாதங்களாக பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து என்பது சர்வசாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. நேற்று கூட லாரியில் ஏற்றப்பட்ட பட்டாசு பண்டல்கள் திடீரென தீப்பிடித்து எறிந்ததாக பத்திரிக்கைகளில் பார்க்கிறோம்.

இந்த விபத்துகளை நீக்க, பட்டாசு தொழிற்சாலை விஷயத்தில் கடுமையான விதிமுறைகள் அமுல்படுத்தப்படவேண்டும். இதற்கிடையில்பட்டாசு தயாரிக்கும் தொழிற்கூடங்களில் ஏற்படும் தீவிபத்துகள் தொடர்பாக தலைமை செயலர்- மற்றும் வருவாய்துறை- காவல்துறை- தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் தொழிற்சாலைகள் ஆகிய துறைகள் கொண்ட குழு கூட்டு ஆய்வு மூலம் விதகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என அரசு அறிவித்துள்ளது. அறிவிப்போடு நின்றுவிடாமல் மேற்கண்ட அதிகாரிகள் கடமையாற்றுகிறார்களா?என்பதை கண்காணிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.அதோடு இந்த பட்டாசினால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள்தான் ஏற்படுகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.
உயிரிழப்புகள்;
ஒரு காலத்தில் தீபாவளி நாளில் மட்டும் கேட்ட வெடிச்சத்தம் இன்று அன்றாடம் வாழ்வில் ஏற்படும் அனைத்து சுப நிகழ்வுகளிலும்- சவ ஊர்வலத்திலும் கூட பட்டாசு ஆக்கிரமிப்பு. ஒவ்வொரு தீபாவளியிலும் உயிரிழப்பு இல்லாத தீபாவளி இல்லை என்று சொல்லிவிடலாம். இந்த பட்டாசு தீயில் சில ஆண்டுகளுக்கு முன்னால் எனது இரு சிறிய தாயார்களை ஒரே நேரத்தில் பறிகொடுத்தவன் என்பதால் ஒரு இந்த பட்டாசு தரும் வேதனையை நான் நேரடியாக உணர்ந்தவன்.
பொருளிழப்பு;
மக்களில் சிலர் மகிழ்ச்சியாக விடும் ராக்கெட்டுகள் எழைகளின் குடிசையை பதம் பார்க்கிறது. அங்கு அவர்கள் குருவி சேர்த்ததுபோல் சேர்த்துவைத்த பொன்னையும்-பொருளையும் அளிக்கிறது. மேலும், 'காசை கரியாக்குதல்' என்பார்களே அது இந்த பட்டாசுக்கு சாலப்பொருந்தும்.
நோய்;
இந்த பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு அவர்கள் அறியா வண்ணம் நோய் தாக்குவதாகவும், அவர்களின் வயோதிக காலத்தில்தான் அதன் தாக்க்கத்தை உணரமுடிவதாகவும் கேள்விப்பட்டுள்ளோம். மேலும், இந்த வெடிச்சத்தம் இருதய நோயாளிகள்-வயோதிகர்கள்-குழந்தைகள் நலன் ஆகியவற்றிற்கு தீங்கிழைப்பதாகவும், காதுகளின் கேட்கும் திறனை குறைப்பதாகவும் உள்ளதை அறிவோம்.
சுற்றுச்சூழல் மாசுபடுதல்;
பட்டாசிலிருந்து வெளிப்படும் புகை காற்றில் கலந்து காற்றின் தூய்மையை கெடுத்து அதை சுவாசிப்பவர்களுக்கு கேடு உண்டாக்குகிறது என்பதை பல சுற்றுசூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்ததையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு உயிர்-பொருள்-ஆரோக்கியம்-சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் பட்டாசு தொழிலை தடை செய்வது பற்றி அரசு பரிசீலிக்கவேண்டும். சிலர் சொல்லலாம் இந்த தொழிலுக்கு பின்னால் பல்லாயிரம் குடும்பங்கள் உள்ளதே என்று! இந்த தொழில் மட்டுமல்ல எந்த தொழிலுக்கு பின்னாலும் அதைவைத்து ஜீவனம் நடத்தும் பல்லாயிரம் குடும்பங்கள் இருக்கவே செய்யும். அவ்வளவு ஏன்? அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி தொழிலுக்கு பின்னால் லட்சக்கணக்கான குடும்பம் இல்லையா? அரசு லாட்டரியை தடை செய்தபோது மக்கள் வரவேற்றார்களா இல்லையா? எனவே பட்டாசுக்கு தடை வித்திப்பதை கருணையுடன் பரிசீலிக்க அரசும்- அரசை வலியுறுத்த சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும்.

Share this