Breaking News

ஷிஹாப் தங்ஙள் வஃபாத் - குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இரங்கல்

நிர்வாகி
0
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் பானக்காடு சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் வஃபாத் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இரங்கல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் (வயது 73) சனிக்கிழமை (01.08.2009) அன்று கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அன்னாரின் மறைவு செய்தி கேள்வியுற்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க (K-Tic) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் அன்னாரின் ஹக்கில் துஆ செய்தனர்.

அன்னாரின் வாழ்க்கைக் குறிப்பு..
கேரள மாநிலம் மலப்புரம் ஜில்லா பானக் காட்டில் வசித்து வந்த ஷிஹாப் தங்ஙள் 1936-ம் வருடம் மே மாதம் 4-ம் தேதி பிறந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெருந்தலைவர் பூக்கோயா தங்ஙள் மறைவிற்குப் பின் 1975-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி கேரள மாநில தலைவராக பொறுப் பேற்ற ஷிஹாப் தங்ஙள் 34 வருடங்கள் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து சரித்திர சாதனை படைத்துள்ளார். கேரள மாநிலத்தில் அரசியல் கட்சியின் தலைவர் பொறுப்பில் அதிக ஆண்டுகள் இருந்த பெருமை ஷிஹாப் தங்ஙளுக்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சந்திரிகா நாளிதழில் நிர்வாக இயக்குநராகவும், 400 மஹல்லா ஜமாஅத்களின் தலைமை காஜியாகவும் சேவையாற்றியுள்ளார். பானக்காடு டி.எம். ஆர்.டி. பள்ளிக்கூடத்தில் ஆரம்ப கல்வியும், கோழிக்கோடு எம்.எம். உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.,யும் படித்த ஷிஹாப் தங்ஙள், 1958 முதல் 1961 வரை அல்-அஸ்கர் பல்கலைக்கழகத்தில் 1961 முதல் 1966 வரை கெய்ரோ சர்வ கலாசாலையிலும் அரபிக் கல்வி பயின்ற ஷிஹாப் தங்ஙளின் தாயார் பெயர் ஆயிஷா பீவியாவார்.

1966-ம் ஆண்டு கல்வி முடித்து திரும்பிய ஷிஹாப் தங்ஙள் 1966-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஷரீபா பாத்திமாவை மணந்தார். அவருக்கு செய்யது பஷீர் அலி ஷிஹாப் தங்ஙள், செய்யது முனவர் அலி ஷிஹாப் தங்ஙள் ஆகிய 2 மகன்களும், செய்யது ஃபைரோஸ், செய்யது ஷுஹாரா, செய்யது ஷமீரா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

வஃபாத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 39-வது தலைமுறையில் வந்த 73 வயதை எட்டிய ஷிஹாப் தங்ஙள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களில் அகில இந்திய அளவில் முன்னணி தலைவராகவும், கேரள மாநிலத்தின் முக்கியத் தலைவராகவும் இருந்து வந்த ஷிஹாப் தங்கள் சனிக்கிழமை (01.08.2009) அன்று மாலை குளியலறைக்குச் சென்றபோது கால் தடுமாறி விழுந்ததை தொடர்ந்து கோழிக்கோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இரவு 9 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

அன்னாரது உடல் பொது மக்கள் பார்வைக்கு பானக்காடு தங்ஙள் வீட்டில் வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (02.08.2009) அன்று பிற்பகலில் பானக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

இரங்கல் அறிக்கை

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைவரும், குவைத் ஜலீப் பகுதியிலுள்ள உக்காஷா பள்ளிவாசலின் இமாமாக பணியாற்றிவரும் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்களும், சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்களும் கூட்டாக வெளியிட்ட இரங்கல் அறிக்கை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சரித்திரத்தில் மறைந்த ஷிஹாப் தங்ஙள் அவர்கள் செய்த சேவை மிக மகத்தானதாகும். அரசியல் மேதையாகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்து, தக்வாவின் தென்றல் தங்கமான தங்ஙள் அவர்களின் மறைவு இஸ்லாமிய சமுதாயத்துக்கும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் மாபெரும் இழப்பாகும். நம் நாட்டு அரசியல் தலைவர்களாலும், மார்க்க மேதைகளாலும் போற்றப்பட்ட தங்ஙள் அவர்களின் தியாக மிகு சேவையால் சமுதாயம் சிறப்பான நன்மைகளைப் பெற்றது. நம் நாட்டு தலைவர்களாலும், உலகத் தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் ஷிஹாப் தங்ஙள் அவர்கள். சமுதாயத்தை நோக்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புனித ஸ்தாபனத்தை நோக்கி தேவையற்ற சர்ச்சைகளையும், சோதனைகளையும் சிலர் உருவாக்கிய காலக் கட்டத்தில் அவற்றையெல்லாம் தனது அன்பான அழகு மிகு பஷாரத் எனும் இன்முகத்துடனும் துஆவுடன் எதிர் நோக்கி வெற்றியைத் தேடித்தந்த மார்க்க மேதை தங்கள் அவர்களாகும்.

நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் கய்யூம் அவர்களையும் அவர்கள் அரசையும் அங்குள்ள கடல் கொள்ளையர்கள் சூழ்ச்சிக்காரர்களைப் பற்றி அந்நாட்டு அதிபரை சிறைப் பிடிக்க திட்ட மிட்டு புரட்சி செய்த காலத்தில் மாலத்தீவு அதிபரின் நண்பரான ஷிஹாப் தங்ஙள் அவர்களுக்கு இச்செய்தியை கேள்விபட்டு அதிபர் கைய்யூம் அவர்களை தைரியப்படுத்தினார்.

அன்றைய நம் நாட்டு பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஷிஹாப் தங்ஙள் அவர்கள் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து காப்பாற்றி கொடுத்த சிறப்பு ஷிஹாப் தங்ஙள் அவர்களைச் சார்ந்ததாகும். இருட்டில் இருந்த மக்களுக்கு ஒளிவிளக்காக திகழ்ந்தவர் பானக்காடு சையது ஷிஹாப் தங்ஙள் ஆவார். மக்களுடைய எல்லா உணர்வுகளுக்கும் உரித்தானவராக திகழ்ந்தவர். அவர் எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் முஸ்லிம் லீக்கர்கள் எதிராக இருந்ததில்லை. அவருடைய காலத்தில் முஸ்லிம் லீக் அதிக பலம் பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

எல்லா விஷயங்களிலும் திறந்த மனதுடன் செயல் படக்கூடியவர். எத்தகைய சுயநலமும் இல்லாமல் முழு நேரமும் இந்த இயக்கத்திற்காக அரும்பாடுபட்டவர். உடல் நலம் குன்றியிருந்த நிலையிலும் சமுதாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டவர். இந்தியாவில் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட போது நாடு முழுவதும் கொந்தளிப்பும், கலவரமும் ஏற்பட்ட போதும், கேரள மாநிலத்தில் எந்தவித கலவரமும் ஏற்படாமல் அமைதி காக்க செய்தது ஷிஹாப் தங்ஙளையே சாரும். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அனைவரும் மதிக்கக் கூடிய தலைவராக திகழ்ந்தவர் என பல அரசியல் கட்சி தலைவர்களாலும் புகழாரம் சூட்டப்பட்டவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலை சிறந்த தலைமகனாக திகழ்ந்தவர் பானக்காடு சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள். ஆன்மீக நெறியில் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். அனைத்து சமுதாய மக்களின் அன்பைப் பெற்று கேரள மாநில மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பெற்றவராக விளங்கினார் அன்னாரின் மறைவு செய்தி வானத்திலிருந்து சூரியன் விலகியது போன்ற நிலையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இறை நாட்டப்படி அவர் மரணமடைந்ததை அறிந்து மீளாத் துயரமும், வேதனையும் ஏற்பட்டது. இத்துணை நாட்கள் முஸ்லிம் லீக்கை வழி நடத்திய ஒளிவிளக்கு மறைந்ததால் வெளிச்சம் போய் விட்டது. மனிதர்கள் மத்தியில் மனிதர்களே மரணித்த செய்திகளை கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது மனிதர்களிலே ஒரு மகான் மவுத்தான உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

உலகத் தலைவர்களாலும், அரசியல் மேதைகளாலும், ஆன்மீக தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஷிஹாப் தங்ஙள் அவர்களின் கப்ரை கருணையுள்ள ரஹ்மான் பிரகாசமாக்கிவைப்பானாக!
அன்னாரின் மறைவால் வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் முஸ்லிம் லீக்கினர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலன்' என்ற அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்குவானாக!! அனைவரின் துஆக்களோடு அல்லாஹ் அவருடைய ஆன்மாவை பொறுத்துக் கொள்வானாக. ஏன துஆ செய்கின்றோம்.

அவரை இழந்த தவிக்கும் குடும்பத்தாருக்கும், இயக்கத்திற்கும் அனு தாபங்களை தெரிவிப்பதோடு அவருடைய மறுமை வாழ்விற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்
மவ்லவீ டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமீ - தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்

Share this