Breaking News

மெக்கா மசூதி 50 லட்சம் பேர் பிரார்த்தனை செய்யும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது

நிர்வாகி
0
ரியாத், செப்.30-

ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதும் இருந்து மெக்கா செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், நெரிசலை தவிர்க்க பல வளர்ச்சிப்பணிகளை சவுதி அரேபியா அரசு செய்து வருகிறது. இதில் ஒன்றாக மெக்கா மசூதி விரிவுபடுத்தப்பட உள்ளது. இப்போது அதன் பரப்பளவு 4 லட்சத்து 800 சதுர மீட்டராக உள்ளது. இதில் 40 லட்சம் ஹாஜிகள் பிரார்த்தனை செய்ய முடியும். இதை 50 லட்சம் பேர் பிரார்த்தனை செய்யும் வகையில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெக்கா, மதீனா நகரங்களின் கலாசார அடையாளங்களை தக்கவைத்துக்கொண்டு அந்த நகரங்களில் நவீன வசதிகளை மேம்படுத்த கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு வருவதாக மெக்கா கவர்னர் இளவரசர் கலீத் அல் பைசல் தெரிவித்தார். கனடா நாட்டு ஆலோசனை நிறுவனம் தயாரித்த திட்டத்தின்படி வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதை ஐ.நா.குழு மேற்பார்வையிட்டது.

மெக்கா மசூதி அருகே உள்ள புனிதத்தலங்களான மினா, அராபத், முஸ்தாலிபா ஆகியவற்றை மெக்காவுடன் இணைக்கும் வகையில் மோனோ ரெயில் போக்குவரத்து ரூ.10 ஆயிரம் கோடி செலவில் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் 2011-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: சவூதி ஹஜ்

Share this