Breaking News

விடுதலையானார் முந்ததர் அல்-சைதி

நிர்வாகி
0


புஷ்(ஷூ) வுக்கு ஷூ பரிசளித்த முந்ததர் அல்-சைதி பாக்தாத் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் மேல், அவர் இராக்கில் நடத்திய கொடுமைகளுக்காக தனது ஷூக்களை வீசியெறிந்தார். 30 வயதான சைதிக்கு 3 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ததை அடுத்து இந்த தண்டனை குறைக்கப்பட்டது. மேலும் சிறையில் அவருடைய நன்னடத்தை காரணமாக அவருடைய தண்டனைக்காலம் மேலும் குறைக்கப்பட்டது.



அவர் கடந்த டிசம்பர் 14 ல், புஷ்ஷின் மீது ஷூ வை எறியும் போது " இது உனக்கு வழியனுப்பும் முத்தம் நாயே" என்று கூறி எறிந்தார்.இவர் சிறையிலிருந்து விடுதலையானதை அடுத்து தனது மருத்துவ பரிசோதனைக்காக கிரீஸ் செல்ல இருக்கிறார். இதனை முந்ததர் அல் சைதியின் சகோதரர் உதை அல் சைதி தெரிவித்தார்.

உதை அல் சைதி மேலும் கூறியதாவது, "என் சகோதரர் முந்ததர் மறைவான இடத்தில் உள்ளார் என்றும் அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் அஞ்சுவதாகவும் தெரிவித்தார். முந்ததர் முன்னதாக சிறையில் அவர் கொடுமைப் படுத்தப்பட்டதாக தெரிவித்திதிருந்தார், மேலும் இப்போதைய ஈராக்கிய பிரதமரையும் விமர்சித்திருந்தார்.

இவர் தன்னை சிறையில், இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதாகவும், அவர் மீது சாட்டை பயன்படுத்தியதாகவும், மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஈராக்கிய பிரதமர் தன்னைப் பற்றி கவலைப்படுவதாக போலி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்.

மேலும் இவர் WaterBoarding எனப்படும் தண்ணீரில் மூழ்கடித்து சித்திரவதை செய்யப்படும் சித்திரவதை முறையையும் ஈராக்கிய அரசு தன மீது பிரயோகித்ததாகவும்" கூறினார்.

இந்த சித்திரவதை முறை அமெரிக்க அரசாங்கத்தால் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படும் கைதிகள் மீது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் ஷூ எறிந்த சம்பவத்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, "ஈராக்கில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்காகவும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவும் அதனை செய்ததாக கூறினார்.

மேலும், இனி இப்போது புதிதாய் பதவியேற்றுள்ள அமெரிக்க அரசியல்வாதிகள் அராபியர்களை முறையாக நடத்தவேண்டும் என்றும் அடிமைகளைப் போல் நடத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.நான், நான் செய்த காரியத்தைப்பற்றி அச்சப்படவுமில்லை, வருந்தவுமில்லை என்று அவர் கூறினார்.இன்று நான் விடுதலையாகி இருக்கிறேன், ஆனால் என் வீடு இன்னும் சிறையாகவே உள்ளது", என்றும் அவர் கூறினார்.

ஈராக்கிய அதிபர் சதாம் ஹூசைனை பதவி இறக்கப் போகிறோம், அவர் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கூறி அமெரிக்க ஈராக்கை ஆக்கிரமித்து ஆறரை வருடங்கள் ஆகிவிட்டது.முந்ததர் மருத்துவ பரிசோதனைக்காக கிரீஸ் செல்ல இருக்கிறார், சிறையிலிருந்தபோது இவருடைய உடலில் சில ரசாயன பொருட்கள் செலுத்தப்பட்டதாகவும், அதிலிருந்து தனக்கு தொடர்ச்சியாக தலை வலி இருப்பதாகவும் முந்ததரின் உறவினர் ஹைதர் அல் சைதி கூறியுள்ளார்.

அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட போது சிறையின் வெளியில் பல அரசியல்வாதிகள் இவரை சந்தித்தனர்.ஈராக்கிய அரசு இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது என்ற போதிலும் இவருக்கு ஈராக்கிய மக்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இவர் சிறையிலிருந்து வெளிவரும்போது ஈராக்கிய கோடியை தன்மீது போர்த்திக்கொண்டு, கருப்புக்கண்ணாடி அணிந்து வெளிவந்தார்.

இவர் வெளிவந்ததும் மூன்று ஆடுகள் அறுக்கப்பட்டது."புஷ் எங்களின் சந்தோசத்தைப் பார்க்கட்டும், அவர் தன வாழ்க்கையின் பக்கங்களை மீண்டும் பார்த்தால் அது முழுக்க சைதின் ஷூக்களே இருக்கும்" என்று உதை அல் சைதி கூறினார்.
நன்றிஅல் ஜசீரா

Share this