Breaking News

'தவக்குல்' எனும் இறைச்சார்பு நெறி!

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
- எம்.கே.எஸ். பாவா

ஒருவர் இறைவனை முழுமையாகச் சார்ந்து நின்று, அவர்தம் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற இறைவனே பொறுப்பேற்கக் கூடியவன் என்ற உறுதியுடன் செயல்படுவது 'தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியாகும்.

இந்த நெறியானது, 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்' என்ற முதுமொழியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இதுபற்றி கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனங்கள் விளக்கமளிப்பதாக உள்ளன.

'இறைவனே சிறந்த பொறுப்பேற்பவனாக இருக்கிறான்' (3:173); 'நீங்கள் இறைவனையே சார்ந்து நில்லுங்கள்; அவனே உங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன்' (33:3); 'நிச்சயமாக இறைவன் (தன்னிடம்) பொறுப்பை ஒப்படைப்பவர்களை மிகவும் நேசிக்கிறான்' (3:159).

இதன் மூலவசனங்களில் இடம் பெற்றுள்ள அரபி மொழிச் சொற்களான 'தவக்குல்' என்பதும், 'வக்கீல்' என்பதும் முறையே இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவனைத் தன் பொறுப்பாளனாக்கிக் கொள்வதையும், பொறுப்பேற்பவனாகிய இறைவனையும் குறிப்பவை.

இங்கு, 'நம் காரியங்கள் அனைத்துக்கும் இறைவனே பொறுப்பேற்கிறான்' என்பதன் பொருள் என்னவெனில், 'நம்மை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துவிட்டோம்; இனி அவனே நமக்கு வேண்டியவற்றை எல்லாம் வழங்குவான்' என்று வாளாவிருப்பதல்ல; மாறாக இறைவன் நமக்குத் தந்துள்ள அறிவையும், ஆற்றலையும் முறையாகப் பயன்படுத்தி முழுமையாக உழைத்த பின்னர், 'அவ்வுழைப்பின் பயன் இறைவன் புறத்தே உள்ளது' என்று திடமாக நம்புவதேயாகும்.

இதனை, நபி (ஸல்) அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டின் மூலமாக மேலும் தெளிவுப்படுத்திக் கூறியுள்ளார். அதாவது, "நீங்கள் இறைவனிடம் முழு நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று இறைவன் உங்களுக்கும் உணவளிப்பான். ஒட்டிய வயிற்றுடன் காலையில் கிளம்பிச் செல்லக்கூடிய பறவை, வயிறு நிரம்பிய வண்ணம் மாலையில் திரும்புகிறது.''

இவ்வெடுத்துக்காட்டில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், 'இறைவன் உணவளிப்பான்' என்பதற்காக பறவை கூட்டினுள் இருந்தால் அதற்குத் தேவையான உணவு, பறவையின் கூட்டினை வந்தடைவதில்லை. பறவை உணவைத் தேடிப் பறந்து செல்கிறது; அதற்கு உணவு கிடைக்கிறது. அதைப் போன்றுதான் மனிதனும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கான பலனை இறைவன் வழங்குகிறான். (அறிவிப்பாளர் : உமர் (ரலி); ஆதாரம்:மிஷ்காத்).

இறை நம்பிக்கையும், முழு முயற்சியும் இணைந்தே நம் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகின்ற மற்றொரு நபிமொழி : 'நீ இறைவனை நம்பு; ஆனால் உன் ஒட்டகத்தைக் கட்டி வை' என்பதாகும். (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி); ஆதாரம் : திர்மதி).

'இறைவனைச் சார்ந்து நிற்றல்' என்ற இந்த நிலைப்பாடு, மனித வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

உதாரணத்திற்கு உழவுத் தொழிலை எடுத்துக் கொண்டால், முதலில் உழவன் நிலத்தை உழுது, விதைவிதைத்து, நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு, களை எடுத்து- இவ்வாறெல்லாம் செய்த பின்னர் நல்ல விளைச்சலை ஆவலுடன் எதிர்பார்க்கிறான் அல்லவா? இறைவனிடமிருந்து அவன் இதனை எதிர்பார்க்க வேண்டும். அப்பொழுது இறைவன் உழவனுடைய இப்பயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறான்; பயிர் செழித்து வளர்வதற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி, உழவன் எதிர்பார்த்தவாறு நல்ல விளைச்சலை இறைவன் அளிக்கிறான்; இதனால் உழவன் உளம் மகிழ்கிறான்; மனநிறைவுடன் அந்த இறைவனுக்கு அவன் நன்றி செலுத்துகிறான். தவக்குலின் பொருளடக்கம் இதுதான்.

ஓர் அடியான் இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்தலின் மற்றுமோர் முக்கிய அம்சம் என்னவென்றால், தன் விவகாரங்களை முடிந்த வரை முயற்சி செய்து முடித்துவிட்ட பிறகு, 'இறைவா! நான் சக்தியற்றவனாக இருக்கிறேன்; பலவீனனாகவும் இருக்கிறேன். நீயே வல்லமை மிக்கவன்! எனவே நான் மேற்கொண்ட பணிகளில் குறைகளிருப்பின் நீயே நிறைவு செய்து நற்பயன் அருள்வாயாக!' என்று இறைவனை வேண்டி நிற்பதாகும்.

இவ்வாறாக, 'தவக்குல்' எனும் இறைச் சார்பு நெறியை உறுதியாகக் கடைபிடிப்பதன் மூலமாக, நமக்கு இறைவனுடைய அருளும், உதவியும் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இதனையே 'நம்பிக்கை கொண்டோருக்கு உதவி செய்வது தம் கடமை' (30:47) என்றும், 'தம் அருட்கொடையைப் பற்றி எவரும் நம்பிக்கை இழக்க வேண்டாம்' (39:53) என்றும் இறைவன் திருமறையில் திட்டவட்டமாக எடுத்துரைத்துள்ளான்.

எனவே, நாம் இறை நம்பிக்கையுடன் செயல்படுவோம்; அவன்தன் அருளைப் பெற்றிடுவோம்.

Source: Dinamani

Tags: இறைச்சார்பு தவக்குல்

Share this