Breaking News

ரம்ஜான் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து

நிர்வாகி
0
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர்கருணாநிதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் பர்னாலா...

இதுதொடர்பாக ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ளவர்களுக்கும் எனது இதயபூர்வமான ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளில் அன்பும், ஒற்றுமையும் சகோதரத்துவமும் அமைதியும் ஓங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

முதல்வர்கருணாநிதி..

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

ஒரு மாத காலம் பசியின் வலிமையை அனுபவத்தால் உணர்ந்து உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு கடுமையாக நோன்புக் கடமையை நிறைவேற்றிய மனநிறைவுடன் ரம்சான் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது இதயம் கனிந்த ரம்சான் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரிதும் உவகை அடைகிறேன்.

மனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக்கொடுத்த நபிகள் நாயகம் அவர்கள் மக்களிடம், நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள்; பிணங்கிக் கொள்ளதீர்கள்; கோபப்படாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; சகோதரர்களாக இருங்கள் என்று கூறி மனிதர்கள் அனைவரும் அன்புடன் வாழ வேண்டும் என்று வழி காட்டினார்கள்.

அந்த மனித நேயப் புனிதர் நபிகள் நாயகம் அவர்களின் அருள் மொழியைப் பின் பற்றி அறவழியில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக் களின் நல வாழ்வு கருதி இந்த அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.

மீலாது நபி திருநாளுக்கு அரசு விடுமுறை, உருது பேசும் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள், சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர்,இஸ்லா மியர் உள்ளிட்ட சிறுபான் மையினர் நலம் பெற “சிறு பான்மையினர் ஆணையம், சிறுபான்மை யினர் நல இயக்ககம்” உலமா மற்றும் பணியாளர் நல வாரியம், ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2400 ஆக அதிகரித்தது.

ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.500 என்பதை ரூ.750 என உயர்த்தியதுடன், “உலமா ஓய்வூதியத் திட்டம்” தர்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டித் தமை, உருது அகாடமி தொடங்கியமை, காயிதே மில்லத் மணி மண்டபம், உமறுப் புலவர் மணிமண்டபம் கட்டியவை, இஸ்லாமி யருக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கியமை எனப் பல்வேறு பணிகள் நிறைவேற்றப்பட்டு இஸ்லாமிய சமுதாயம் இந்த அரசினால் அன்போடு அரவணைக்கப்படுகிறது.

இந்த இனிய சூழ்நிலையில், இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர் வாழ்விலும் கல்வியும், தொழில் வளமும், செல்வமும் பெருகி அவர்கள் என்றும் இன்புற்று வாழ என் இதயங்கனிந்த ரம்சான் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா...

ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

ரமலான் மாதம் புனித மாதம்! ரமலான் மாதம் இறைமறை இறக்கப்பட்ட இனிய மாதம்! ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம்! ரமலான் மாதம் என்றதும் அனைவரது நினைவிற்கும் வருவது, இறைநெறி கொண்டு வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இறைவனால் கட்டளை ஆக்கப்பட்ட “நோன்பு”!

ரமலான் நோன்பு என்பது உடலை வருத்தி, ஏழை எளியவரை நினைக்க வைக்கிறது! ரமலான் நோன்பு மனிதனின் தீய பழக்க வழக்கங்களை சுட்டெரித்து அவனை புனிதனாக்குகிறது. மனிதனின் புற அழகை புறந்தள்ளி, அக அழகை அதிகரிச்கச்செய்கிறது! அறிவியல் அடிப்படையில் மிகச்சிறந்த பயன் அளிப்பதோடு மட்டுமல்லாமல் இறை உணர்வை அதிகரிக்கச் செய்கிறது!

இந்தப்புனித நோன்பை மேற்கொண்டு, உடலை, உள்ளத்தைத் தூய்மை செய்து, இறைவனின் திருவருளை இறைஞ்சி, பெற்ற பொருளை பிறர்க்கு வழங்கி இன்புறும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த “ஈத்” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரது உள்ளங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் பெருகட்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

“ஈதுல் பிதர்” என்னும் ஈகைத் திருநாள், உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் உவப்புடன் கொண்டாடப்படும் “பெரு நாளாக” மலர்ந்து உள்ளது.

தனிமனித ஒழுக்கத்தின் விழுப்பத்தைப்பேணி வாழும் கலையை வையத்துக்குத் தந்த அண்ணல் எம் பெருமானாரின் அழகிய முன் மாதிரியைப் பின்பற்றும் மாண்பால், நோன்பு மாட்சியுடன் நமது உள்ளத்தை ஆட்சி செய்கிறது.

முஸ்லிம் தமிழ் மக்கள் எங்கு இருந்தாலும், இப்பெரு நாளில் அவர்கள் காட்டும் ஒப்பரவும் அண்டை அயல் சமூகத்தாருடன் பேணும் நல்லுறவும் இஸ்லாம் எடுத்துரைக்கும் மாடற்ற பண்பின் அடையாளங்கள் ஆகும்.

எனவே, சமய நல்லிணக்கத்திற்கும், சமூகத்தில் நல்ல உறவுகளுக்கும் வழி அமைத்து, அண்டை அயலாருடனும், அனைத்துச்சமூக மக்களுடனும் ஒற்றுமையும், உறவும் கொண்டும், உண்டாடிக்கொண்டாடும் இப்பெரு நாளில், இசுலாமியப் பெரு மக்களுக்கு என் இதய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல காங்கிரஸ் தலைவர் தங்கபாலு , தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இல.கணேசன், ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்,தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது, தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, ஹஜ் கமிட்டித் தலைவர் ஜே.எம்.ஆரூண் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags: வாழ்த்துக்கள்

Share this