குடிநீர் கொள்ளை
நிர்வாகி
0
'கோடை வரும் பின்னே, குடிநீர்த் தட்டுப்பாடு வரும் முன்னே' என்பதுதான் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்னை. எல்லா நகரங்களிலும் குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை. நகர்ப்புறங்களில், உள்ளாட்சி நிர்வாகம் விநியோகம் செய்யும் குடிநீர், குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஊரகப் பகுதியில் குடிக்கத் தகுதியான நீருக்காகப் பல கிலோமீட்டர் நடந்தும் சைக்கிளிலும் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது.
தமிழகத்தின் குடிநீர்த் தேவையின் பெரும்பகுதி நிலத்தடி நீரை- அதாவது ஏரி, குளம், கிணறு ஆகியவற்றை நம்பித்தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நிலத்தடி நீர் போதுமானதாக இல்லை. ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. தமிழகத்தில் உள்ள சுமார் 7 லட்சம் பாசனக் கிணறுகளில் 50 விழுக்காடு கிணறுகளில் நீர் இல்லை. 10 விழுக்காடு கிணறுகள் பயன்பாடே இல்லாமல் தூர்ந்துவிட்டன என்பதுதான் புள்ளிவிவரம் சொல்லும் தகவல். நல்ல குடிநீருக்காக ஊரக மக்கள் படும் துன்பம் வார்த்தைகளில் அடங்காது.
அரசின் குடிநீர்த் திட்டங்கள் பெரும்பாலும் நதிகளை ஆதாரமாகக் கொண்டவை. ஆனால் நதிகள் அனைத்தும், ஏதோவொரு தொழிற்கூடத்தால் மாசுபடுத்தப்பட்டு, ரசாயனத்தை வெளியேற்றும் வாய்க்காலாகத்தான் ஆகியுள்ளது.
திருப்பூர் சாயத் தொழிற்சாலைகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நொய்யல் ஆறு மாசுபட்டதற்காக விவசாயிகள் ரூ.100 கோடி இழப்பீடு பெற வழி ஏற்பட்டது. ஆனால், காவிரி, பாலாறு, தாமிரபரணி ஆறுகளை நாசப்படுத்தும் தொழிற்சாலைகள், நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு இல்லை என்பதாகச் செயல்படுகின்றன.
தமிழக அரசின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில்கூட, வேலூர் குடிநீர்த் திட்டத்துக்காக ரூ.1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான நீர் ஆதாரம் எங்கே இருக்கிறது? மேட்டூர் அருகே காவிரியிலிருந்துதான் தண்ணீர் கொண்டு வந்தாக வேண்டும். கோடையில் மேட்டூர் அணையே வறண்டு கிடக்கும்போது இத்தனை கோடியிலான திட்டம் எந்த அளவுக்குப் பயன்தரும்? நிலத்தடி நீரும் இல்லை. நதிகளிலும் நீர் இல்லை. இருந்தாலும் அவை மாசுபட்டுக்கிடக்கின்றன என்றால் தமிழகத்தின் குடிநீர்ப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
குடிநீர்ப் பிரச்னை தலைவிரித்தாடும் இற்றை நாளில், அதைக் காசாக்கிக் கொள்ளை லாபம் சம்பாதிக்க அரசியல், அதிகார வர்க்க ஆதரவுடன் ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. சில இடங்களில், குடிக்கத் தகுதியான நீரின் விலை ஒரு குடம் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாயாக இருக்கிறது. இதைவிட பகல்கொள்ளை என்னவென்றால், இதே குடிக்கத் தகுதியான நீரை 20 லிட்டர் கேன்களில் அடைத்து, அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water) என்ற முத்திரையுடன் ஒரு கேன் ரூ.25 முதல் 30 வரை விற்கிறார்கள். நகர்ப்புறங்களில் வீடுகளிலும், அலுவலகங்களிலும் இத்தகைய அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை மூலம் யாரோ கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.
இந்த விலை என்பது, இந்தியத் தர நிறுவனச் சான்று பெற்று, முறையாக மறுசவ்வூடு பரவல் உள்ளிட்ட சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தி, நீரைத் தூய்மைப்படுத்திய குடிநீருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை. ஆனால், வெறும் அடைக்கப்பட்ட குடிநீருக்கும் அதே விலை வைத்து கொள்ளை அடிக்கிறது ஒரு கூட்டம்.
தமிழகத்தில் உள்ள 6,700 மதுபானக் கடைகள் மூலம், வெறுமனே விற்பனை வரி, தீர்வை ஆகியவற்றால் மட்டுமே அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைக்கிறது. இதே அளவுக்கான வருவாய், பிளாஸ்டிக் பைகளில் 250 மி.லி. அளவு அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை மூலம் யார்யாருக்கோ போய்க் கொண்டிருக்கிறது. மதுபானக் கடைகளில் கிடைக்கும் இத்தகைய பிளாஸ்டிக் பைகளில் பெயர் உள்ள நிறுவனங்கள் முறையான அனுமதி பெற்றவைதானா என்பதுகூட சந்தேகம்தான்.
இத்தகைய அடைக்கப்பட்ட குடிநீர் அல்லது தூய்மைப்படுத்திய குடிநீர் தயாரிப்பு ஆலைகள், தங்களுக்கான நீர் ஆதாரமாக நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்ச் சட்டம் -2003-ம் ஆண்டு பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே நிலத்தடி நீரைத் தவறாகவும், மாசுபடுத்தவும், லாப நோக்கில் பயன்படுத்தவும் செய்யும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுதான். ஆனால், இந்தச் சட்டம் எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டது.
நிலத்தடி நீரை மாசுபடுத்துதல், முற்றிலுமாகப் பயன்படுத்தி, மக்களுக்குக் கிடைக்காமல் செய்தல் ஆகியவற்றுக்காக எத்தகைய தண்டனை அளிக்கமுடியும். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோகோ கோலா ஆலைக்கு ரூ. 216 கோடி அபராதம் விதிக்கலாம் என்று அப்பகுதியில் பாதிப்புகளை ஆய்வுசெய்த உயர்நிலைக் குழு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இதில் குடிநீர் ஆதாரங்களை மாசுபடுத்தியதற்காகவும், உள்ளாட்சிகளில் லாரிகள் மூலம் நல்ல குடிநீர் கிடைக்கச் செய்ய ஏற்பட்ட செலவுக்காகவும் விதிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.82 கோடி.
தமிழகத்தின் குடிநீர் என்பது பெரும்பாலும் நிலத்தடி நீரைச் சார்ந்து இருப்பதால், நிலத்தடி நீரை முறைகேடாகப் பயன்படுத்துவோர், அளவுக்கு மீறி பயன்படுத்தி நிலத்தடிநீரை இல்லாமல் ஆக்குவோர், நதிகளை மாசுபடுத்துவோர் எல்லோர் மீதும் அபராதம் விதிப்பதன் மூலம்தான் தமிழகத்தின் நீர் ஆதாரங்களைக் காப்பாற்ற முடியும்.
குடிநீர்க் குழாய் இணைப்பு, பிற பயன்பாட்டுக்கான தண்ணீர் இணைப்பு என இரு இணைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைச் செய்வதும்கூட குடிநீர் பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.
இன்றைய முதல் தேவை- குடிக்கத்தகுந்த குடிநீர், அடைக்கப்பட்ட குடிநீர், தூய்மை செய்யப்பட்ட குடிநீர் ஆகியவற்றுக்கு அரசே நியாயமான விலை நிர்ணயம் செய்வதும், அனுமதியில்லாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் மக்களுக்குப் பெரும் நன்மை சேர்க்கும். குடிநீருக்காகப் பணத்தை தண்ணீராய்ச் செலவழிக்க முடியுமா என்ன?