Breaking News

சென்னை புதிய சட்டசபை திறப்பு விழா!

நிர்வாகி
0
சென்னை: ஏழைக்களின் முகத்திலும், அகத்திலும் மலர்ச்சியை காணவே நான் எப்போதும் சிந்தித்து வாழ்கிறேன் என்று சென்னையில் புதிய சட்டப்பேரவை கட்டட திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார். மேலும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற முழுக்காரணமாக இருந்த பிரதமர் மன்மோகன்சிங்கையும், காங்., தலைவர் சோனியாவையும் வெகுவாக பாராட்டி பேசினார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், 450 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட தமிழக புதிய சட்டசபை வளாகத்தை, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்., தலைவர் சோனியாவும் டில்லியில் இருந்து ஒரே விமானத்தில் வந்தனர். விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் .ப.சிதம்பரம், அ.ராசா, ஜி.கே., வாசன், மு.க., அழகிரி, துணை முதல்வர் ஸ்டாலின், காங்., தலைவர் தங்கபாலு, ஆகியோர் பொன்னாடை கொடுத்தும், பூசசெண்டு வழங்கியும் வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் ராஜ்பவனுக்கு சென்றார். சோனியா சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று அங்கு இளைஞர் காங்கிரசாரை சந்தித்து பேசினார்.

பேட்டரி கார் மூலம் சுற்றிப்பார்த்தனர்: பின்னர் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்றனர். சரியாக 5 மணி 5 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார். திறந்து வைத்ததும், பேட்டரி கார் மூலம் முதல்வர் கருணாநிதியும், பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியாவும் இணைந்து அமர்ந்தபடி வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்தனர். இந்த விழாவில், ஆந்திர முதல்வர் ரோசய்யா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், புதுவை கவர்னர் இக்பால் சிங், மத்திய மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

விழா மலர் வெளியீடு : மாலை சரியாக 5. 18 மணிக்கு தலைவர்கள் மேடைக்கு வந்தனர். 5. 19 க்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து ( 5 .21 ) சபாநாயகர் ஆவடையப்பன் வரவேற்புரையாற்றினார். அவர் பேசுகையில்; முதல்வர் கருணாநிதி முயற்சி காரணமாக இந்த கட்டடம் கலைநுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டட பணிக்காக முழு நேரத்தையும் கவனத்தையும் முதல்வர் கருணாநிதி செலுத்தினார் என்றார். விழா மேடையில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியாவுக்கு முதல்வர் கருணாநிதி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தொடர்ந்து 5 மணி 29 மணிக்கு கட்டட மாதிரி தோற்றத்தை அழுத்தும் பொத்தான் மூலம் பிரதமர் திறந்து வைத்தார். விழா மலரை சோனியா வெளியிட்டார்.

முதல்வர் கருணாநிதி பேச்சு : தொடர்ந்து விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், 33.3 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுமா? நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்த நேரத்தில் இதனை வெற்றிகரமாக முடித்து வரலாற்று சாதனை படைத்துள்ள இவர்களை பாராட்டும் விதமாக அனைவரும் கரவொலி எழுப்பிட வேண்டும் என்றார். ( விழாவில் பலத்த கரகோஷம்) , 1921 ல் ஜனவரி 12 ம் தேதி சென்னை மாகாண கட்டடத்தில்தான் நீதிக்கட்சி பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை கொண்டு வந்தனர். பெரியார் காலத்தில் இருந்து பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியாவின் ஜனாதிபதியாக பெண்மணியை கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான். இந்த அம்மையாருக்கு முதன், முதலாக வரவழைத்து அவருக்கு பாராட்டு விழா நடத்தியது சென்னையில் தான்.

14 வங்கிகளை தேசிய உடமையாக்க பாடுபபட்ட இந்திராவை அழைந்து பாராட்டியதும் இங்கேதான். தேர்தல் பிரசாரத்திற்காக சென்னைக்கு வந்த போது இந்தியாவின் திருமகளே வருக என அழைத்ததை இந்த நாடே அறியும். காங்கிரசும், தி.மு.க., வும் இணைந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த உறவை கெடுக்க கற்பனை பிரசாரங்கள், பயணங்கள். எங்களிடையே இருந்த உறுதி காரணமாக பகை மூட்டும் முயற்சிகள் வெற்றி பெற முடியவில்லை. இந்த சட்டசபை கட்டடம் உருவாக காரணமாக இருந்த நான் மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன். பணிந்து நடக்க கற்று கொண்டவன். பட்டப்படிப்பு படிக்காதவன். ஏழை மக்களுக்கு உழைப்பதே எனது வாழ்நாள் முழுவதும் உள்ள விருப்பம். 86 வயதிலும் நான் அரண்மனையில் வாழ பிடிக்காதவன். ஏழை மக்கள் முன்னேற்றத்திற்காக மத்திய மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ஏழை மக்களின் அக - முக மலர்ச்சியை காணவேண்டும் என்றுதான் நான் எப்போதும் சிந்திக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு: நாட்டில் கிராமப்புறம் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டம் செயல்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவின் முன்மாதிரியாக திகழ்கிறது என பிரதமர் மன்மோகன்சிங் சென்னையில் நடந்த புதிய சட்டசபை திறப்பு விழாவில் பேசினார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவின் முன்னேற்றத்திற்காக தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் பலர் காரணமாக இருந்திருக்கின்றனர். ராஜகோபாலச்சாரி, காமராஜர், அண்ணாத்துரை, சி.சுப்பிரமணியம், எம்.ஜி., ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் அரும்பாடு பட்டவர்கள். இது போல் தமிழக முதல்வர் கருணாநிதி அரசியல் அனுபம், மற்றும் முதிர்ந்த அறிவு ஆகியன எனது அரசுக்கும் பக்கப்பலமாக இருக்கிறது. அவர் சிறந்த நிர்வாகி அவரது தலைமையில் செயல்படும் தமிழகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுகிறது. இந்தியாவின் முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

சோனியா வாழ்த்து: புதிய சட்டசபை துவக்க விழாவில் சிறப்புரை ஆற்றிய காங்., தலைவர் சோனியா பேசுகையில், இது ஒரு சாதாரண விழா அல்ல என்றும், வரலாற்று சிறப்புமிக்க விழாவில் தான் கலந்து கொண்டுள்ளதாகவும், தமிழக சட்டசபை வரலாற்றில் இது ஒரு புதிய அத்யாயம் என்றும் தெரிவித்தார். தமிழக சட்டசபையின் தோற்றம், அதன் வரலாறு மற்றும் தமிழக முன்னாள் முதல்வர்கள் குறித்து பேசிய சோனியா, இறுதியாக, பெண்கள் இட ஒதுக்கீடு ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்து பேசினார்.

Share this