Breaking News

மகளிர் இடஒதுக்கீடு: வழிகாட்டும் உலக நாடுகள்.

நிர்வாகி
0
பெண்கள் அரசியல் அதிகாரத்தை பெறவேண்டும் என்பது ஒரு கனவு. பல நாடுகளில் அது இன்னும் கனவாகவே நீடிக்கிற‌து. உலகின் ஒட்டுமொத்த நாடாளுமன்ற் உறுப்பினர்களில் 18.8 % பேர்தான் பெண்கள். இந்தியாவில் வெறும் 11 % பேர்தான் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இந்த அநீதியை மாற்ற இடஒதுக்கீடு மட்டும்தான் ஒரே வழி.


நாடாளுமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை தனிப்பட்ட பெண்களின் பொறுப்பாக வைக்காமல் அரசின் கடமையாக்குவதுதான் இடஒதுக்கீட்டின் அடிப்படை.

மகளிர் இடஒதுக்கீடு உலகில் மூன்று விதமாக நடைமுறைபடுத்தப்படுகிறது.

1. கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் இடஒதுக்கீடு. (இதனை சட்டப்படி இடஒதுக்கீடு, கட்சிகள் தானாக முன்வந்து இடஒதுக்கீடு என இரண்டாக பிரிக்கலாம்.)

2. நாடாளுமன்ற இடங்களில் மகளிர் இடஒதுக்கீடு.

3. ஆண், பெண் இருபாலருக்கும் இடஒதுக்கீடு (இம்முறையில் 40 % க்கு குறையாமலும் 60 % க்கு மிகாமலும் இருபாலருக்கும் இடஒதுக்கீடு செய்யப்படும்.)

மகளிர் இடஒதுக்கீட்டில் உல‌கின் வழிகாட்டியாக ருவாண்டா, சுவீட்ன், கோஸ்டாரீகா ஆகிய நாடுகள் விளங்குகின்றன.

ருவாண்டாவில் நாடாளுமன்ற இடங்களில் சட்டப்படி மகளிர் இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 பெண்கள் கட்டாயமாக தேர்வு செய்யப்படவேண்டும் என்பது கட்டாயம். இந்த முறையால் அங்கு நாடாளுமன்றத்தின் 56.3 % இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். உலகிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது ருவாண்டா.

சுவீடனில் அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து பெண்களுக்கு இடம் அளிக்கின்றன. கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் ஏறக்குறைய ஒவ்வொரு இரண்டாவது பெயரும் பெண் வேட்பாளர் என்ற நிலை சுவீடனில் உள்ளது. இதனால் அங்கு நாடாளுமன்றத்தின் 47.3 % இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். உலகிலேயே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது சுவீடன்.

கோஸ்டாரீகா நாட்டில் அரசியல் கட்சி வேட்பாளர் பட்டியலில் சட்டப்படி இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அங்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியளில் 40 % பெண்களுக்கு ஒதுக்க வேண்டியது கட்டாயம். இந்த முறை மூலம் அங்கு நாடாளுமன்றத்தின் 38.6 % இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். உலகிலேயே எட்டாவது இடத்தை பிடித்துள்ளது கோஸ்டாரீகா.

நாடாளுமன்றத்தில் பெண்கள் = உலகின் முதல் 15 நாடுகள்.

1. ருவாண்டா 56.3 %


2. சுவீடன் 47.3 %


3. தென்ஆப்பிரிக்கா 44.5 %


4. கியூபா 43.2 %


5. ஐஸ்லாந்து 42.9 %


6. பின்லாந்து 42.0 %


7. அர்ஜென்டினா 40.0 %


8. கோஸ்டாரீக்கா 38.6 %

9. நார்வே 37.9 %


10. டென்மார்க் 37.4 %


11. அங்கோலா 37.3 %


12. பெல்ஜியம் 36.7 %


13. நெதர்லாந்து 36.7 %


14. ஸ்பெயின் 36.3 %


15. மொசாம்பிக் 34.8 %

(சட்டப்படியான இடஒதுக்கீடு. அரசியல் கட்சிகளில் இடஒதுக்கீடு. இடஒதுக்கீடு இல்லை. தகவல் இல்லை.)

மேற்கண்ட பட்டியலில் 11 நாடுகளில் இடஒதுக்கீட்டின் மூலமாகத்தான் பெண்களுக்கு உரிய இடம் கிடைத்துள்ளது. எனவே, இடஒதுக்கீடு இல்லாமல் பெண்கள் அதிகாரம் பெறுவது சாத்தியம் இல்லை.

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது யார்?

இந்தியாவில் மகளிர் இடஒதுக்கீட்டை இரு பிரிவினர் எதிர்க்கின்றனர்.

1. மனுதர்மத்தை வெளிப்படையாக வலியுறுத்தும் சிலர் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் தேவையில்லை, அது ஆபத்தானது என்கின்றனர். இதில் முதன்மையானவர் 'துக்ள்க்' சோ.

2. சூத்திரர்களுக்கு அதிகாரம் தேவை இல்லை என்போர் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இரண்டாவது கூட்டம். இதில் வெளிப்படையானது பி.ஜெ.பி., மறைமுகமாக‌ எதிர்ப்போர் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.

மற்றபடி முலாயம், லாலு, மாயாவதி, மம்தா போன்ற யாரும் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. இவர்கள் எல்லோரும் "உள் ஒதுக்கீடு" தான் கேட்கின்றனர். உள்ஒதுக்கீடு என்பதும் பெண்களுக்காகவே கேட்கப்படுவதால், அதனை இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு என்பது திசைதிருப்பும் வாதமாகும்.
நன்றி>பசுமைஅருள்

Share this