Breaking News

மார்க்க அறிஞர்களையோ..... குறை கூறுவதில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்

நிர்வாகி
0
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


என் அன்புச் சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நாம் பிறந்த உடனேயே இஸ்லாம் மற்றும் அதன் முதல் முக்கிய கொள்கையான ஏகத்துவம் என்பதை அறியாமல் எத்தனையோ இணை வைப்புகளில் மூழ்கியிருந்திருப்போம் ஆனால் அல்லாஹ் நம்மீது கருணை காட்டியிருப்பான் அதன் அடிப்படையில் தற்போது நாம் மார்க்கம் என்றால் என்ன? திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை உள்ளடக்கிய ஹதீஸ்கள் என்றால் என்ன என்பதை அறிந்திருப்போம்.

சரி! நாம் இணைவைப்புகளிலிருந்து விடுபட்டு ஏகத்துவத்திற்குள் நுழைந்திருப்போம் ஆனால் உள்ளத்தில் எதற்காக ஏகத்துவத்தை ஏற்றோம் என்ற எண்ணம் எழுந்திருக்குமே? அதற்காக ஒரு மாபெரும் யுத்தமே நம் அனைவருடைய உள்ளத்தில் அடிக்கடி நடந்திருக்குமே! இறுதியாக இந்த யுத்தத்தின் விடையைத் தேடி திருமறையை புரட்டியிருப்போம், ஆங்காகங்கே நபிமொழிகளை கேட்டிருப்போம் முடிவில் சுவனம் செல்ல வேண்டும் என்ற பதில் மட்டும்தான் நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும்.

இதை கேட்டவுடன் நமது உள்ளம் அமைதியடைந்திருக்கும் பிறகுதான் ஏகத்துவம (தவ்ஹீது) என்பதில் வீரியமிக்கவர்களாக நாம் அனைவரும் மாறியிருப்போம்!


ஆனால் ஏகத்துவத்தை ஏற்ற நாம் ஏகத்துவத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் அதன் ஒரு அங்குல அளவையாவது கடைபிடிக்கிறோமா? அல்லது அதன் போர்வையில் அமர்ந்திருக்கிறோமா? அலசிப் பார்ப்போமா?



''(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (அல்-குர்ஆன்:2-4) ஆம் சகோதரர்களே!

நாம் ஏகத்துவவாதிகள் என்று நெஞ்சில் மார்தட்டிக் கொண்டு அல்லாஹ்வைத்தவிர யாரையும் எதையும் வணங்க மாட்டோம் நபிமார்களுக்கு கட்டுப்படுவோம் என்று கூறிக் கொள்வோம் ஆனால் அதே சமயம் நம்மைவிட சிறந்த முறையில் மார்க்கத்தை எத்திவைத்து தெளிவான விளக்கங்கள் கொடுக்கும் ஒருசில சகோதரர்களை நோக்கி அராஜகமான முறையிலும் கண்ணியக்குறைவான முறையிலும் நம்மில் பல ஏகத்துவ சகோதரர்கள் விமர்சனம் செய்வார்கள் உண்மையில் ஒருவரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதற்கோ (அல்லது) திட்டுவதற்கோ மார்க்கம் அணுமதிக்கிறதா?

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (திருக்குர்ஆன்)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' (முஸ்னத் அஹ்மத்) ஒரு ஏகத்துவவாதி அல்லாஹ்வுக்க கட்டுப்பட வேண்டும் பிறகு நபிகளாருக்கு கட்டுப்படவேண்டும் ஆனால் ஏகத்துவவாதிகளாகிய நாம் இருவருக்கும் கட்டுப்படாமல் வரம்புமீறி மார்க்கத்தில் உள்ள வீரியமிக்க சகோதரர்களை, மார்க்க அறிஞர்களை வசைபாடுகிறோம்! சிந்தித்துப் பாருங்கள் நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வுக்கு என்று பயம் உள்ளதா? நாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறோமா? நாம் ஏகத்துவவாதிகளா?


மார்க்க அறிஞர்களின் மீது பொறாமை கொள்வது


ஒரு சமுதாயத்திற்கு தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் கொடுப்பது இறைவன் நாட்டம் இதன் மூலம் படைத்த இறைவன் அந்த சமுதாயத்தை தூய்மைப்படுத்த நாடுகிறான் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்! ஆனால் மக்களோ மார்க்க அறிஞர்கள் கூறுவது உண்மையா? பொய்யா? என்று எண்ணிப்பார்க்காமல் அவர்களின் வேகத்தையும், ஞானத்தையும் தடுக்க அவர்களின் சின்னஞ்சிறிய செயல் களைக் கண்டு கோள் சொல்வதும், புறம் பேசுவதும் நாம் வாடிக்கையாக கொண்டுள்ளோம்.

அல்லாஹ் யாருக்கு மார்க்க ஞானத்தை கொடுத்திருக்கிறானோ அவர்களைக் கண்டு பொறாமைப் படுபவர்களும் நம்மில் பலர் உள்ளனர் ஆனால் அந்த பொறாமை எவ்வாறு இருக்க வேண்டும் கீழ்கண்ட நபிமொழியைப் படித்துப்பாருங்கள்!

''ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்''. புஹாரி :73 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு

சகோதரர்களே! இந்த நபிமொழியின் மூலம் நமக்கு விளங்குவது கீழ்கண்ட தத்துவம்தானே!

o மார்க்க அறிஞர்களின் அறிவை கூர்ந்து கவனிக்க வேண்டும்!

o மார்க்க அறிஞர்கள் குர்ஆன் ஹதீஸ்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும்!

o மார்க்க அறிஞர்களை விட நேர்த்தியாக நாம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படவேண்டும்! o மார்க்க அறிவைப் பெற அல்லாஹ்விடம் உதவிதேட வேண்டும்

o மார்க்க அறிஞர்களின் அறிவுக்கு மேல் நாமும் அறிவு கொடுக்கப்படுவோம் என்று அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிகையை வளர்த்துக் கொள்ள வேண்டும்! இறைவன் நாடினால் சமுதாயத்தில் நாமும் தலைசிறந்த மார்க்க அறிஞர்களாக மாறலாம்! அவர்களை விட நாம் அனைவரும் சிறந்தவர்களாக மாற்றப்படலாம் (இறைவன் நாடினால்)!


மார்க்க அறிவும், சோதனையும்

மார்க்க அறிஞர்கள் அல்லாஹ் கொடுத்த அறிவுத்திறமையை வெளிப்படுத்தும் போது சமுதாயம் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்கும், அவர்களின் சொல், செயல் மார்க்கத்திற்கு உட்பட்டு இருந்தால் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க நபராக அவர்கள் போற்றப்படுவார்கள்! இறுதியாக சமுதாயத்தில் கண்ணியமிக்க வர்களாக திகழ்வார்கள்!

இந்த நிலையிலும் மார்க்க அறிஞர்கள் தவறு செய்வது இயல்புதான்! உதாரணமாக! அல்லாஹ் விடமிருந்து வஹியைப் பெற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஒரு குருடரை கண்டு கடுகடுத்தார் என்றும் நபி யுனுஸ் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் மீதே கோபம் கொண்டார் என்றும் அருள்மறை திருக்குர்ஆன் கியாமநாள் வரை சாட்சி கூறி நிற்கிறது. ஒரு சில தவறுகள் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள மார்க்க அறிஞர்களிடம் ஏற்படுவது விதியாகவே கருதவேண்டும் காரணம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல பெயரையே சம்பாதித்துக் கொண்டிருந்தால் அவர்களிடம் தற்பெருமை சூழ்ந்துக்கொள்ளும் கேள்விக்கணக்கின்போது அவர்கள் தற்பெருமை கொண்டதால் மாட்டிக் கொள்வார்கள். எனவேதான் அல்லாஹ் அறிவைக் கொடுக்கும் போது கூடவே அடிசருக்கும் நிலையையும் ஏற்படுத்துகிறான்.

தம் தவறை மார்க்க அறிஞர்கள் உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரி திருந்துகிறார்களா? அல்லது வரட்டு கவுரவம் பார்க்கிறார்களா என்று சோதிப்ப தற்காகவே அல்லாஹ் மார்க்க அறிஞர்களின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் சோதனையாக ஆக்கியுள்ளான்! தலைசிறந்த மார்க்க அறிஞர்கள் அவ்வப்போது தம் பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் பிழை கண்டால் பகிரங்க மன்னிப்பு கேட்பார்கள்! இது அறிவு கொடுக்கப்பட்டவர்களுக்கே உரிய நடைமுறையாகும்.

மார்க்க அறிஞர்களை சீண்டி குளிர்காயும் மக்கள்

மக்களில் ஒருசிலர் மார்க்க அறிஞர்களைப் பார்த்து நமக்கு இவ்வாறு அறிவு இல்லையே என்று ஏங்குவதும் உண்டு மற்றொரு சாரார் அவர்களின் கூற்று தமக்கு ஒத்துவராத போது எதிர் அணியில் நின்று அவர்களை எதிர்ப்பதும் உண்டு!

இந்த நிலையில் நல்ல அந்தஸ்தில் உள்ள மார்க்க அறிஞர்களை சீண்டினால் மக்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள், நமக்கு பேரும் புகழும் கிடைக்கும் நாமும் அவர்களைப் போன்ற அந்தஸ்துக்கு உயர முடியும் என்று எண்ணி அவர்களின் குறைகளை அம்பளப்படுத்தி, சமுதாயத்தின் முன் கேவலப்படுத்தி சீண்டி வேடிக்கை பார்ப்பதும் அவர்கள் பதிலடி கொடுத்தால் ''பார்த்தீர்களா இவர்களது செயல்களை! இவர்கள் மார்க்க அறிஞர்களாக இருந்து என்னைப் போன்ற சாதாரண மனிதர்களை இவ்வாறு பேசுகிறார்கள், இவர்கள் குற்றவாளிகள்'' என்று வீம்பாக பேசுவதும் வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் இருக்கும்.

தன் சுயநலனை உயர்த்திக்கொள்ள மார்க்க அறிஞர்களை சீண்டக்கூடிய சகோதரர்களே அல்லாஹ் உங்கள் உள்ளங்களை நோட்டமிடமாட்டான் என்று நினைத்துக் கொண்டீர்களா? சுயநலனுக்காக ஒருவரை சீண்டினால் சிறுமையடைவது சுயநலவாதிகளே! அல்லாஹ் இப்படிப்பட்ட கெட்ட மனிதர்களை நேசிப்பானா? ஒரு முஸ்லிம் சகோதரன் தவறு செய்தால் எப்படி அணுகுவது?

பொதுவாக ஒரு முஸ்லிம் சகோதரர் அல்லது மார்க்க அறிஞர் மார்க்கதிற்கு முரணாக பேசுவதாகவே வைத்துக் கொள்வோம் அவருடைய கருத்து தவறு என்று நமக்கு தெரிந்தால் அதற்கான தகுந்த ஆதாரங்களை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் திரட்டி மார்க்கத்திற்கு முரணாக பேசக்கூடிய சகோதரரிடம் கண்ணியமான முறையில் இது இவ்வாறு உள்ளது உங்கள் சொல், செயல் மார்க்கத்திற்கு முரணாக உள்ளது எனவே தவிர்த்திடுங்கள் மறுமையில் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று அழகான முறையில் அறிவுறுத்துவது முறையா? அல்லது தவறு செய்தவர்களுக்கு திருந்தும் வாய்ப்பு கொடுக்காமல் அவர்களை நோக்கி சரமாரியாக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி வசைபாடுவது முறையா?


சிந்தித்துப்பாருங்கள்!

நீங்கள் பெற்ற பிள்ளை தவறாக நடந்துக்கொள்ளும் போது அவனிடம் பண்பாக பேசி நீ செய்வது தவறு! என்பதை எடுத்துக் கூறினால் உங்கள மகன் திருந்த முற்படுவானா? அல்லது தவறாக நடக்கும் உங்கள் மகனை நோக்கி நீ! தருதலை! அயோக்கியன், கேடுகெட்டவன், முட்டாள், முடிச்சவுக்கி என்று திட்டினால் உங்கள் மகன் திருந்துவானா?

1) உங்கள் மகன் தவறு செய்தால் உங்கள் அணுகுமுறை ஒருவிதமாகவும்

2) உங்கள் மார்க்க சகோதரன் ஒரு தவறு செய்தால் உங்கள் அணுகுமுறை ஒருவிதமாகவும்.

3) உங்கள் மர்க்க அறிஞர் ஒரு தவறு செய்தால் உங்கள் அணுகுமுறை ஒருவிதமாகவும் இருக்கிறது! நாம் இப்படிப்படட இரட்டை குணங்களை பெற்றவர்களாக இருந்து மரணித்தால் மறுமையில் அல்லாஹ்வின் முன் நிற்க வேண்டி வருமே! அவனுடைய அர்ஷின் நிழல் கிடைக்குமா? வருத்தப்பட வேண்டுமே!

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதற்கு அவனே சான்று பகர்கின்றான். மேலும், வானவர்களும் அறிவுடையோரும் இவ்வாறே சான்று பகர்கின்றனர். ''(உண்மையில்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை! அவன் வல்லமைமிக்கவன், நுண்ணறிவாளன்!'' (அல்குர்ஆன்: 3:18) ஒரு சாதாரண முஸ்லிம் சகோதரனிடமே கண்ணியக்குறைவாக நடக்காதீர்கள் என்று அறிவுறுத்தும் மார்க்கத்தில் நாம் இருக்கிறோம் இதை அறிந்துக்கொண்டும் அலட்சியமாக நடந்துக்கொண்டு மார்க்க அறிவுள்ள அழகான முறையில் தெளிவான விளக்கங்களை கொடுக்கும் மார்க்க அறிஞர்களை வாய்க்கு வந்தபடி திட்டி, வசைபாடி கிண்டல் அடிக்கிறோமே! அதை குழுமங்களில் விளம்பரப் படுத்துகிறோமே நாமெல்லாம் அல்லாஹ்வுக்கு பயப்படும் விதத்தில் பயப்படுகிறோமா?

மனித இயல்பு மற்றும் இறைவன் பண்பு

தவறு செய்வது மனித இயல்பு தவறு செய்யாதவன் அல்லாஹ் இதுதானே மனிதனுக்கு இலக்கணம்!

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே தேன் அருந்தமாட்டேன் என்று தன்னிச்சையாக முடிவெடுத்தார், ஒரு குருடர் வந்தார் அவரை நோக்கி கடுகடுத்து விட்டார் உடனே அல்லாஹ் அவரை நோக்கி வாய்க்கு வந்தபடி திட்டி, வசைபாடி கிண்டல் அடித்து திருமறை வசனத்தை இறக்கினானா? அல்லது கண்ணியமான முறையில் அவருக்கு அறிவுரை கூறும்விதமாக திருமறை வசனத்தை இறக்கினான? ஒருவரையொருவர் வசைபாடும் சகோதரர்களே முதலில் கீழ்கண்ட வசனத்தை படியுங்கள்!

இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசிக்கொள்வதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். இதனால் நீங்கள் செய்த செயல்கள் வீணாகிவிடும்; நீங்கள் அதனை அறியாத நிலையில்! (திருக்குர்ஆன் 49:2)

அல்லாஹ் மூமின்களை நோக்கி நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள் என்று கூறுகிறான் ஆனால் நாம் ஒருவரையொருவர் திட்டி வசைபாடிக் கொண்டு அல்லாஹ்வின் குரலுக்கு மேல் குரலை உயர்த்தி கண்ணியக்குறைவான முறையில் திட்டுகிறோம்!

இனி திட்டுவதாக இருந்தால் கீழ்கண்டவற்றை தெளிவாக அறிந்துக்கொள்ளுங்கள்!


நீங்கள் அல்லாஹ்வுடைய குரலுக்கு மேல் குரல் உயர்த்துகிறீர்கள்,

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குரலுக்கு மேல் குரல் உயர்த்துகிறீர்கள்! நீங்கள் குர்ஆன் ஹதீஸ்களை புறம்தள்ளிவிட்டு விமர்சனங்களையும், திட்டுக்களையும் மறுமைக்காக தயார்படுத்திக் கொள்கிறீர்கள்!

இஸ்லாத்தின் எல்லையை மீறி நடக்கிறீர்கள்

இதுபோன்ற தவறான நடவடிக்கைகளிலில் ஈடுபட்டு மறுமையில் கைசேதப்பட்டு நிற்கும் அவலத்திலிருந்து நம் அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றி நேர் வழிகாட்டுவானாக அமீன்!

''அல்லாஹ்வின் அடியார்களை நோவினை செய்யாதீர்கள், இழிவுபடுத்தாதீர்கள், அவர்களது குற்றங்களை தேடிச்செல்லாதீர்கள். எவன் தனது முஸ்லிம் சகோதரனின் குற்றம் குறைகளை தேடித்திரிகிறானோ அவனது குறைகளை அல்லாஹ் துருவிப்பார்ப்பான். இறுதியில் அவனை அவனது வீட்டுக்குள்ளேயே அவமானப்படுத்தி விடுவான்.'' (முஸ்னத் அஹ்மத்)

இனியும் மார்க்க அறிஞர்களையோ, சாதாரண மக்களையோ, இளைஞர்களையோ, பெண்களையோ என யாரையும் எதற்காகவும் திட்டமாட்டோம், வசைபாடமாட்டோம்! விமர்சித்தாலும் குர்ஆன் ஹதீஸ் முறைப்படி கண்ணியமான முறையில் விமர்சிப்போம் என்று மனதிற்குள் உறுதிமொழி எடுப்போமா?

அல்ஹம்துலில்லாஹ்!

கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக

http://www.nidur.info/

Share this