Breaking News

கல்வி உரிமை சட்டம்: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பிரதிபலிக்குமா?

நிர்வாகி
0
டெல்லி: கல்வி உரிமை சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசுடன் ஒத்துழைக்க ஆர்வம் தெரிவித்துள்ளன. ஆனால் தமிழகத்தில் இந்த சட்டத்தின் பலனை வரும் கல்வியாண்டில் காண முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டில் 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி பெறுவதை கட்டாயமாக்கும் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படப் போவதாக டெல்லி மாநில கல்வி அமைச்சர் அர்விந்தர் சிங் லவ்லி கூறியுள்ளார்.

அரசு உதவி பெறும், பெறாத பள்ளிகள் அனைத்திலும் ஏழை குழந்தைகளுக்கென 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டியதும் அவசியம் ஆகி உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளும் தேவையான கட்டமைப்பு வசதிகள் பெற்றிருப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் பாவர் லால் மேக்வால், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் காலியான ஆசிரியர் பணி இடங்கள் அனைத்தையும் விரைவில் நிரப்புவோம் என கூறியுள்ளார்.

கல்வி உரிமை சட்டத்துக்கு உடனடி ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலி ஆசிரியர்களை நியமித்தாவது இந்த கல்வியாண்டில் இலக்கை எட்டுவோம் என அவர் கூறியுள்ளார்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு என்பதை எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. ஆனால் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது கடினமானது என குஜராத் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் ஹஷ்முக் அதியா கூறியுள்ளார்.

எனினும், இதனை வரும் கல்வியாண்டிலேயே நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

இச்சட்டத்தை பெரிதும் வரவேற்கும் பீகார் மாநில மனித வள அமைச்சர் ஹரி நாராயண் சிங், அருமையான இந்த சட்டத்தை நிறைவேற்ற நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

ஆனால் நிதியுதவி தான் அதற்கு பெரும் தடைக்கல்லாகும் அபாயம் உள்ளது. கல்வி உரிமை சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டுமானால், பீகார் மாநிலத்துக்கு 3 லட்சம் ஆசிரியர்களும், 2 லட்சத்துக்கும் மேல் புதிய வகுப்பறைகளும் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார்.

அதேபோல் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் இச்சட்டம் நிறைவேற்றுவதற்கான கூடுதல் நிதி உதவி கோரி பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவும் இதேபோல் நிதி பிரச்னையை சுட்டிக்காட்டுகிறார்.

கல்வி உரிமை சட்டத்தின் படி, திட்டங்களை நிறைவேற்றுவதற்கான செலவில் 55:45 என்ற விகிதத்தில் செலவினங்களை பகிர்ந்து ஏற்றுக்கொள்வது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பல்வேறு மாநிலங்களும் நிதி பற்றாக்குறையில் சிக்கியிருப்பதாலும், பள்ளிக்கூடங்கள் உள்கட்டமைப்பு வசதியில் மிகவும் பின் தங்கி இருப்பதாலும் தற்போது சிக்கலை சந்திக்கின்றன.

சென்னையைப் பொருத்தவரை, 6 முதல் 14 வயது வரையுள்ள பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம் என அதிகாரிகளால் கணிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரையும் வரும் கல்வியாண்டில் பள்ளியில் சேரச் செய்வது கட்டாயம் என கருதப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் திட்டமிட்டபடி இந்த சட்டம் அமலாகி நோக்கம் நிறைவேறுமா என்பது கேள்விக் குறியாகவே இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு மாநில அரசுகளும் இந்த சட்டத்தை அமல் படுத்துவது குறித்து அறிக்கைகளும் உத்தரவுகளும் பிறப்பித்து வரும் நிலையில், தமிழக கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து இதுதொடர்பாக உத்தரவுகள் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இச்சட்டத்தைப் பொருத்தவரை, மாநில அரசுகள் தனியாக இதற்கென்று தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற வேண்டிய அவசியமோ, அடுத்தகட்ட உத்தரவோ தேவையில்லை.

மாநில அரசுகள் ஒவ்வொன்றும் 15 உறுப்பினர்கள் கொண்ட மாநில பிரிந்துரைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.

கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கும், வேண்டிய பணிகளை செய்வது குறித்தும் அரசுக்கு இந்த குழு பரிந்துரைகள் அளிக்கும்.

உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், சட்டம் தொடர்பான புகார்களை விசாரிக்கவும் ஒரு ஆணையத்தையும் மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.

அதோடு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பள்ளி நிர்வாகக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த குழுவின் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் பெற்றோராக இருக்கவேண்டும்.

கல்வி உரிமை சட்டம் அமலாவதை இக்கமிட்டி மூலமாகவும் கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆனால் தமிழக கல்வித்துறை தரப்பில் இதுபோன்ற எந்த முயற்சிகளும் இதுவரை எடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும் சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குனர் வெங்கடேசன் இதுதொடர்பான களப்பணிகளை தொடங்கி இருப்பதாக கூறுகிறார்

முதலில் தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளின் உண்மை நிலவரம் அறிய மாநிலம் தழுவிய கள ஆய்வை வரும் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

வரும் 15ம் தேதிக்குள் மாவட்ட வாரியான பட்டியல் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:தட்ஸ் தமிழ்

Share this