Breaking News

காயிதே மில்லத்தின் தமிழ் உரிமைக்குரலுக்கு மணிவிழா!

நிர்வாகி
0
இந்திய நாட்டிற்கு ஆட்சிமொழி எது? என்ற விவாதம் அரசியல் நிர்ணய அவையில் நடைபெற்ற போது, முஸ்லிம் சமுதாயப் பிரதிநிதியாக அந்த அவையில் பங்கேற்றிருந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப், ஆட்சி மொழியாகும் தகுதி, தமிழ் மொழிக்கே உண்டு என ஆணித்தரமாக வாதிட்டார். சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக தமிழுக்காக, தலைநகர் டெல்லியில் ஒலித்த உரிமை முழக்கம், முஸ்லிம் சமுதாயப் பிரதிநிதியுடையதே. காயிதே மில்லத் தமிழுக்காகக் குரல் கொடுத்ததை அறிஞர் அண்ணா பட்டி தொட்டியெங்கும் பரப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் நிர்ணய அவை என்ற சுதந்திர இந்தியாவின் மிக உயர்ந்த அவையில் , தமிழுக்காகக் காயிதே மில்லத் உரிமைக் குரல் எழுப்பியதற்கு, 29.3.2010 அன்று மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் மணிவிழா கொண்டாடப்பட்டது.

நீதியரசர் மு-.மு. இஸ்மாயில் பெயரால் அமைக்கப்பட்ட அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில், கவிஞர் கனிமொழி, ரகுமான் கான், எம்.ஜி. தாவூத் மியாகான், குமரி அனந்தன், கேப்டன் அமீர் அலி, அப்துர் ரஹ்மான் ஹஸரத், இசைமணி நாகூர்  எம்.எம்.யூசுப் ஆகியோர் பங்கேற்றனர்.

ஈரோடு எஸ்.ஏ. முஹம்மதலி தலைமை வகிக்க, ப.முகம்மது, எஸ்.டி கூரியர் நவாஸ்கனி, இப்ராஹிம்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த் துறைத்தலைவர் பேரா.ஹாஜாகனி தொகுத்து வழங்கினார்.

காயிதே மில்லத் உரிமை முழக்கம்

அரசியல் நிர்ணய அவையில், ஆட்சிமொழி பற்றிய விவாதத்தில் 14.9.1949 அன்று காயிதே மில்லத் ஆற்றிய உரையின் ஒருபகுதி.

“ஆட்சிமொழி என்பது ஒரு இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது, இந்நாட்டினுடைய மிகப் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மொழியைத்தான் நமது தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியும்.

இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப் படுமானால் நான் ஓர் உண்மையை இந்த அவை முன்பு தைரியமாக கூறு விரும்புகிறேன்.

இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகப்பழமையானதும். ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டுவரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். அதாவது திராவிட மொழிகளே இந்நாட்டின் மிகத் தொன்மையானவை என துணிந்து கூறுகிறேன். இந்நாட்டில் முதலில் பேசப்பட்ட மொழி திராவிட மொழியே என்ற எனது கூற்றை எந்த வரலாற்றாசிரியராலும் மறுக்க முடியாது.

எந்தத் தொல்பொருள் ஆராய்ச்சி யாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமானதும், இலக்கிய வளங்கள் நிரம்பியதுமான தமிழ்மொழி மிகத் தொன்மையானது. இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழி குறித்து பெருமைப்படுகிறேன்.

மேற்கண்ட காயிதே மில்லத்தின் உரை, இந்து, இந்தி, இந்தியா, என வெறியூட்டப்பட்டவர்கள், செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் நிகழ்த்தப் பட்டது. மொழிப்பற்றை அரசிய லாக்கிய கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. தனது மொழிப்பற்றை அரசியலாக்காமல், அதேநேரம், உருது உள்ளிட்ட சிறுபான்மை மொழிகள் நசுக்கப்பட்டபோது அம்மொழி களின் உரிமைகளையும் காத்தவர் காயிதே மில்லத் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this