Breaking News

முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசாதே...மிரட்டப்படும் மார்க்ஸ்!

நிர்வாகி
0
கடந்த பல ஆண்டுகளாக ‘முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் போர்வாளாக செயல்படுபவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள். கடந்த 8&ம் தேதி ஒரு கருத்தரங்கில் பேசிக் கொண்டிருந்தவரை இனி பேசினால் கொலை செய்துவிடுவோம் என ஒரு கும்பல் மிரட்ட இது குறித்து அவரிடம் பேசினோம்.


நான் சமீபத்தில் மார்க்க ஸலாமா என்கிற அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ள இலங்கை சென்றேன். அதன்பின் எனது சொந்த முயற்சியில் யாழ்ப்பாணம், வவுனியா முள்வேலி முகாம், கிழக்கு மாகாணம், மலையகம், மற்றும் புத்தளம் முஸ்லிம் அகதிகள் முகாம் ஆகியவற்றுக்கு சென்று அங்குள்ள மக்கள் படும் துயரங்கள் அனைத்தையும் கேட்டும், கண்டும் வந்தேன். நான் அங்கு சென்று பார்த்த அனுபவங்களை மதுரை உட்பட பல இடங்களில் கூட்டங்கள் நடத்தி பேசியும் வந்தேன். அதன்படி கடந்த ஏப்ரல் 8ம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் உள்ள ஜேக்கப் அரங்கில் புலம் மற்றும் பயணி நூல் வெளியீட்டகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினேன். எனது உரையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்புகள் குறித்தும் சிங்களவர்கள் வெற்றி கர்வம் இதன் விளைவாக தமிழ் மற்றும் முஸ்லிம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிங்கள மேலாதிக்கங்கள் குறித்தும் பேசினேன்.

அடுத்ததாக காத்தான்குடி முஸ்லிம் பகுதியில் 113 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சம்பவம் முஸ்லிம் மற்றும் தமிழர்கள் மத்தியில் எவ்வாறு உணரப்படுகிறது என நான் விளக்க தொடங்கியபோது அங்கிருந்த சிலர் உடனடியாக பேச்சை நிறுத்துமாறு சப்தமிட்டனர். இனி மேலும் பேசினால் வெட்டி விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்தனர். இதைப் போன்ற கருத்துரிமையை மறுத்ததால் தான் ஈழமக்களுக்கு விடிவே கிடைக்கவில்லை என ஈழத்தில் இருந்து வந்திருந்த கலாநிதி, ரவிந்தரன் மற்றும் பௌஸர் ஆகியோர் பேசியபோது அவர்களும் கடுமையாக மிரட்டப்பட்டனர். இடையில் கூட்டத்தில் இருந்த நடுநிலையாளர்கள் பலரும் அமைதி ஏற்படுத்த முயற்சிக்க சுமார் அரை மணிநேர கலாட்டாவிற்கு பிறகே நான் மீண்டும் பேசத் துவங்கினேன்.

மறுபடியும் சுமார் 15 நிமிடங்கள் பேசினேன் பின்னர் மீண்டும் கேள்வி நேரத்தால் இதே போன்று கலாட்டா தொடர்ந்ததாலும் கூட்டம் முடிந்த பிறகே நாங்கள் கலைந்தோம்.

நான் இலங்கையிலிருந்த பொழுது ராஜபக்சே அரசை கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும், பேசிய பேச்சுகள் புலி ஆதரவு இதழான தினக்குரல் பத்திரிகையில் பெரிய அளவில் படத்துடன் வெளிவந்தது. நான் அங்கிருந்த 14 நாட்களில் 20 கூட்டங்களில் பேசினேன். தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் சமாதானம் குறித்தே அதிகளவில் பேசினேன். முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசும் போதெல்லாம் முஸ்லிம்கள் பகையை மறந்து தமிழர்களுடன் ஒன்றாக இணைய வேண்டும் என்று பேசினேன். இப்பேச்சு அங்குள்ள அனைத்து முஸ்லிம் பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இதை தொகுத்து புத்தகமாக வெளியிடவும் இருக்கிறோம். என்னுடைய உரையில் 90 சதவீதம் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள், போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகள், ராஜபக்ஷேவின் பெருந்தேசிய இனவெறி மற்றும் சிங்கள மேலாதிக்கம் ஆகியவை குறித்தே பேசினேன்.

அங்கு இரண்டாவது சிறு பான்மையாக உள்ள முஸ்லிம் மக்களுக்கு கடந்த 20 ஆண்டு களில் பெரிய அளவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 80 ஆயிரம் வடக்கு மாகாண முஸ்லிம்கள் கடந்த 20 ஆண்டுகளாக புத்தளத்தில் அகதிகளாக உள்ளனர். இங்கு யாரும் அவர்கள் பற்றி பேசுவது கிடையாது... அவர்களுடைய பிரச்சினை தீர்க்கப்படாமல் தமிழ்&முஸ்லிம் மக்கள் ஒற்றுமை ஏற்படுத்தப்படாமல் அங்கு அமைதி திரும்பாது. இந்த நோக்கில் முஸ்லிம்கள் பற்றி பேசினாலே இத்தனை கடுமையான எதிர்ப்புகள் வருவது கருத்துரிமையை பாதிக்கக் கூடிய முயற்சிகள் தமிழகத்தில் தொடங்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கது என மார்க்ஸ் கூறினார்.

மார்க்ஸ் கவலைப்பட தேவை யில்லை. ஜனநாயக சக்திகள் அவர் பின்னால் இருக்கின்றன என்பதை சொல்லி வைக்கிறோம்.

--புதுமடம் அனீஸ்
நன்றி:தமுமுக

Share this