Breaking News

துபையில் முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்க சமுதாயம் ஓரணியில் ஒன்று திரண்டது.

நிர்வாகி
0

வல்ல ரஹ்மானின் வற்றாத பெருங் கருணையால் நேற்று (08 -05 -2010) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துபையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓரணியில் ஒன்று திரண்டு முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்கும் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை மிகச் சிறப்புடன் நடத்தியது.
இந்த இனிய நிகழ்ச்சி தமுமுக துபை மண்டலத் தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் துவங்கியது சகோதரர் பிலால் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பாக கீழை மஃரூஃப் நிகழ்ச்சியின் அவசியம் குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது, முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கலந்து கொண்டு எழுச்சி மிகு உரை ஒன்றை ஆற்றினார். இந்நிகழ்ச்சியினை காண வரலாறு காணாத மக்கள் கூட்டம் அலைமோதியது.

அவர் தனது உரையில் சிலைகளை வழிபடும் ஆத்திகராய் பிறந்து, அறியாத வாலிப பருவத்தில் பெரியாருக்கு கவிதை எழுதிய பொழுது ஒரு ஆர்வ கோளாறில் சேசாஷம் என்ற பெயரை பெரியார்தாசன் என மாற்றிய பிறகு நாத்திகராய் மாறினேன். 2000-இல் தன் நண்பர் ஸிராஜுதீன் மூலம் கிடைத்த சிந்தனைக் கிளர்ச்சி என்னை உண்மையான இறைவனை தேடத் தூண்டியது. அதன் பிறகு 2007க்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் நான் உண்மையான ஏக இறைவனை தெரிந்து கொண்டேன் என்றார். மெய்யானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கே பெறும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது என தனது உரையில் தனக்கே உரிய நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
எதையும் இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும், இறைவனுக்கு ஒருபோதும் இணை வைத்து விடக்கூடாது என்ற உன்னதமான தவ்ஹீதை எடுத்துச் சொல்லி, ஒற்றுமையுடன் அனைவரும் திகழ வேண்டும். நாளைய மறுமையில் அனைத்து முஸ்லிம்களும் சுவனம் செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உரையாற்றிய விதம் அனைவரையும் பரவசப்படுத்தியது. அவருடைய உணர்வுபூர்வமான உரைக்கு கிடையில் மக்கள் அல்லாஹ் அக்பர் என உற்சாகத்துடன் எழுப்பிய பதிலுரைகள் அறிஞர் அப்துல்லாஹுக்கு நல்ல வரவேற்பாக திகழ்ந்தது. சுமார் 1500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.
இறுதியில் இஸ்லாமிய அழைப்பாளர் எஸ்.எம்.புஹாரி, நிறைவுரையாற்றினார். பன்னாட்டு இஸ்லாமிய கழத்தின் சார்பில் வருகை தந்த முனைவர் அப்துல்லாஹ் அவர்களை நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நிகழ்ச்சியில் பங்கேற்க உதவி பன்னாட்டு இஸ்லாமிய கழகத்தின் தலைவர் அப்துல் கதீம், துணைத் தலைவர் குத்தாலம் அஷ்ரஃப் மற்றும் லியாகத்அலி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமுமுக துபை மண்டல நிர்வாகிகள் மொஹிதீன், கலீல், ஷாஹுல் உள்ளிட்டவர் தலைமையிலான அணியும், இதஜ சார்பில் ஏ.எஸ் இபுராஹீம், ஷாஜித் உள்ளிட்டவர்களான அணியும், தவ்ஹீத் இல்லம் சார்பில் அதிரை ஜமால், ஷாஹுல் உள்ளிட்டவர்கள் தலைமையிலான அணியும், ஜாக் சார்பாக மதுக்கூர் உமர், மற்றும் குலாம், ஜலால் ஆகியோரின் சிறந்த ஏற்பாட்டில் நிகழ்ச்சி இறையருளால் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

செய்தி மற்றும் படங்கள் : அபூஉமைமா, இப்னு ஹனீஃபா.

Share this