Breaking News

சரியா, தப்பா!?

நிர்வாகி
0
தற்போது தொடங்கப்பட்டுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணியில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு வாய்ப்பே இல்லை என்பதை மத்திய அரசு உறுதியாகத் தெரிவித்துவிட்டது. இருப்பினும்கூட, இதுபற்றிய விவாதத்தை அரசியல் தலைவர்கள் விட்டுவிடாமல் தொடர்ந்து பேசவும், மக்களவையில் தங்கள் வாதத்தைப் பதிவு செய்யவும் முற்படுதல் தொடர்கிறது.


விடுதலைக்கு முன்பு வரை இந்தியாவில் சாதிகள் பற்றிய விவரம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டது. சர்தார் வல்லபபாய் படேல் இதுகுறித்து குறிப்பிடுகையில், விடுதலை பெற்ற இந்தியாவில் இத்தகைய சாதிவாரி கணக்கெடுப்பு தேவையுமில்லை, அது விரும்பத்தக்கதும் அல்ல என்று கூறினார். விடுதலைக்குப் பின்னர் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.


தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்ற பேச்சு எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலும்கூட, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றார். இதற்கு ஒரு சில அரசியல் கட்சிகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.


காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மத்திய சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி இத்தகைய சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக நிற்கிறார். அதேசமயம், இது தேவையில்லை என்ற கருத்தை ப.சிதம்பரமும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா போன்றவர்களும் கொண்டுள்ளனர். பாஜக மற்றும் இடதுசாரிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாகச் சேர்ந்துள்ள நிலையில் இக்கோரிக்கை வலுப்பெற்றுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.


இன்னும் கூடுதலாக நெருக்கடி கொடுப்பார்களேயானால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணி தொடங்கிவிட்டபோதிலும்கூட, இதனைச் சேர்க்கவும், கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஊர்களில் இந்த ஒரு கேள்வி நிரலை மட்டும் மீண்டும் நிரப்பித் தரவுமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வது அப்படியொன்றும் இயலாத காரியமல்ல.


ஆனால், எதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்? இதனால் பயனடையப்போவது அந்த சாதியைச் சேர்ந்த மக்களா, அல்லது அரசியல் கட்சிகளா? இதுதான் சிக்கலான பார்வையை விரிக்கிறது.

குறிப்பாக, இந்தக் கோரிக்கையை முன் வைப்போர் சொல்லும் ஒரு கருத்து என்னவெனில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்கள் பலவற்றை அரசு மேற்கொண்டு வருவதால், இதில் பயன் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதைக் கணக்கிடவும், சரியான பயனாளிகளைத் தேர்வு செய்யவும் இத்தகைய கணக்கெடுப்பு உதவும் என்கிற வாதத்தை முன்வைக்கின்றனர். இருப்பினும், இந்த விவரங்களை பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய நலவாரியம் செய்துகொள்ளட்டுமே, எதற்காக அதனை மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்பது எதிர்தரப்பு வாதம்.


மேலும், ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகக் கருதப்படும் சாதி, இன்னொரு மாநிலத்தில் அவ்வாறாக இல்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனச் சான்றிதழ் பெறுவதில்கூட இத்தகைய குளறுபடிகள் இருக்கின்றன என்பதை பல போராட்டங்கள் மூலம் காண முடிகிறது. இந்நிலையில் இத்தகைய கணக்கெடுப்பில் தேவையற்ற குழப்பங்கள்தான் மிஞ்சும் என்ற வாதத்தை அரசு சொல்கிறது.


சாதிவாரி கணக்கெடுப்பைக் கோருவதன் அடிப்படை நோக்கமே அந்தந்த பகுதியில் உள்ள சாதியினரின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டால், அதற்கேற்ப அரசியல் நடத்தவும் அந்த சாதியிலிருந்து வேட்பாளரைத் தேர்வு செய்யவும் அரசியல் கட்சிகளுக்கு மிக எளிது. இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், இதையும் மிகத் துல்லியமாக கணக்கிட்டு


செய்ய விரும்புகிறார்கள்.


இத்தகைய கணக்கெடுப்பு உண்மையில் தேர்தல் நேரத்திற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். மேலும், உள்ளூர் சாதி அரசியலைத் தூண்டிவிட்டு, தற்போது நிலவி வரும் அமைதியைக் குலைக்க வழி வகுக்கும்.


இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது தவிர்க்க முடியாதது, இது மக்கள் நலனுக்கு அவசியம் என்று சொல்லும் அரசியல் கட்சிகளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இந்தக் கணக்கெடுப்பில் தெரியவரும் முன்னேறிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களை (கிரீமி லேயர்) அரசின் இடஒதுக்கீடு மற்றும் உதவித்தொகை சலுகைகளிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளுமா?


அப்படியாக, கிரீமி லேயரை வகைப்படுத்த இந்த சாதிவாரி கணக்கெடுப்பு உதவும் என்றால் மட்டுமே, இந்த சாதிவாரி கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும். இதுவரை அரசின் சலுகைகளால் பயன் அடையாத பிற்படுத்தப்படுத்தப்பட்ட சமூகத்தினரும் பயன் அடைவர். அப்போதுதான் சமூக நீதி உண்மையிலேயே சமமாக இருக்க முடியும். கடந்த 70 ஆண்டுகளில் அரசின் சலுகைகளால் பயனடைந்த குடும்பத்தினர்தான் தற்போது கல்வி வேலை வாய்ப்புகளிலும் அரசு தரும் சலுகைகளைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பெறுகிறார்கள் என்பதும், அந்த சமூகத்து ஏழைகளுக்கு அவர்களே தடையாக அமைந்துவிடுகிறார்கள் என்பதுமே உண்மை நிலை.
பள்ளிக் குழந்தைகள் தினமும் காலையில் பள்ளிகளில் உறுதியேற்கின்றன. இந்தியா என் தாய்நாடு, இந்தியர் யாவரும் என் சகோதரர்....! ஆனால் அரசியல்வாதிகள் சொல்லித் தர முனைகின்றனர், "நீ இந்த சாதி சகோதரன், நீ தலித் சகோதரன், நீ பிற்படுத்தப்பட்ட சகோதரன், நீ மிகவும் பிற்படுத்தப்பட்ட சகோதரன் என்று!'


தமிழ்நாட்டில் தெருக்களில் சாதிப் பெயரை அழித்தோம். அவரவர் பெயர்களில் சாதிப் பெயரை நீக்கினோம், போக்குவரத்துக் கழகங்களில் சாதி அடையாளங்களை ஒழித்தோம். ஆனால் எல்லார் மனங்களிலும் சாதியை ஆழமாக விதைத்துவிட்டோம்.

"ஞானபானு'வில் முதலில் பிரசுரமான "பாப்பாப் பாட்டு' கவிதையில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று எழுதவில்லை மகாகவி பாரதி; சாதி பெருமையில்லை பாப்பா என்றே எழுதியிருக்கிறார். இந்த விவாதத்தைப் புதுமைப்பித்தன்தான் தொடங்கிவைத்தார். இப்போதும் இந்த விவாதம் தேவையாக இருக்கிறது.


சாதிகள் இல்லையடி பாப்பா, சரியா,

சாதி பெருமையில்லை பாப்பா, சரியா?

Tags: தலையங்கம் தினமணி

Share this