Breaking News

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பதவியேற்பு

நிர்வாகி
0
கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.


தலைமை நீதிபதியாக இருந்த எச்.எல்.கோகலே கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து தற்காலிக தலைமை நீதிபதியாக தர்மாராவ் செயல்பட்டு வந்தார்.

இந் நிலையில், ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய்.இக்பாலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து அவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

எம்.ஒய்.இக்பால் 13.2.1951ல் பிறந்தவர். ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1975ம் ஆண்டு முதல் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

சிவில் வழக்குகளில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் 1990ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்றத்தின் ராஞ்சி கிளையில் அரசு பிளீடர் ஆனார். பல்வேறு அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

1996ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதியானார். பிகார் மாநிலம் பிரிந்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவானதையடுத்து 2000ம் ஆண்டு ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

Share this