Breaking News

இறைவா! இவர்களிடமிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்று!

நிர்வாகி
0
மிகவும் கைசேதப்படவேண்டிய விஷயம் என்னவெனில், இன்று தர்காவை நம்பக்கூடிய ஆலிம்கள் பெருகி விட்டார்கள். இவர்கள் வழிகெட்டுப்போவது மட்டுமின்றி, மார்க்கம் ஒன்றுமறியாத - தெரியாத அப்பாவி மக்களை வழிகெடுப்பதில் முன்னனியில் நிற்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மையாகும்.


சுன்னத் வல் ஜமா அத் என்று சொல்லிக்கொண்டு அதற்கு மாற்றமாக நடப்பவர்கள்.

சமுதாயத்திற்கு மிகப்பெரும் ஆபத்தே இவர்களால்தான்.

ஏனெனில் இதுபோன்ற ஆலிம்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதரஸாக்கள் - ஜாமியாக்களிலிருந்து வெளியாகும் ஆலிம்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. தர்காக்களை நோக்கி ஓடும் ஆலிம்களே!

''உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்''

மீண்டும் மீண்டும் ஓதக்கூடிய ''சூரத்துல் ஃபாத்திஹா''வில் வரும் இத்திருவசனத்தை எத்தனை முறை ஓதியிருப்பீர்கள்?!

''உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்'' என்று ஆயிரக்கணக்கான முறை தொழுகையிலும் மற்ற நேரங்களிலும் ஓதியது எல்லாம் வெறும் உதட்டசைப்புதானா?! உங்கள் உள்ளத்தில் ஒட்டவே இல்லையா? ஆலிம்களான உங்களுக்கு அதன் அர்த்தம் விளங்காமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஆக, நிச்சயமாக அதனை விளங்கியிருந்தும் அதனை பின்பற்றவில்லையென்றால் உங்களுக்கு அந்த இறைவசனத்தின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை என்றுதானே அர்த்தம்?!

அதுவும் ''உன்னிடமே - அல்லாஹ்விடம் மட்டுமே - உதவி தேடுகிறேன்'' என்று சொல்வதில் உங்களுக்கு 100 க்கு 100 சதவீதம் நம்பிக்கையில்லை, திருப்தியில்லை – அதற்கு மேல் ஏதோ ஒருவர் உங்களுக்குத் தேவைப்படுகிறார் என்றுதானே அர்த்தம்!

இவ்வளவு காலமும் அல்லாஹ்வின்மீது முழுமையான நம்பிக்கையில்லாத தொழுகைதான் உங்களுடையது என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஒரு மனிதனுக்கு இதைவிட மிகப்பெரும் கைசேதம் வேறு எதுவாக இருக்க முடியும்! சிந்தியுங்கள்.

ஒரு முஃமின் அல்லாஹ்விடம் கையேந்திவிட்டால் வெருங்கையுடன் அதனை திருப்பி அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களே! அது உங்கள் உள்ளங்களில் அழுத்தமாகப் பதியாமல் போனதன் காரணம் என்ன?

கேட்பது உடனே கிடைத்துவிட வேண்டும் என்கின்ற அவசரமோ! அதற்காகாத்தானே தர்காவை நோக்கி ஓடுகிறீர்கள்?!! ''பொறுமையாளர்களுடன் தான் அல்லாஹ் இருக்கின்றான்'' என்கின்ற தித்திக்கும் திருமறையின் வசனங்கள் உங்கள் உள்ளங்களை ஊடுருவாமல் போனதன் காரணம் என்ன்?

அல்லாஹ்விடம் கையேந்துகின்ற அடியானுக்கு 1. அவன் நாடினால் உடனே கொடுப்பான் 2 தாமதாமாகக் கொடுப்பான் (அடியானுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை அறிந்தவன் அந்த ஏக வல்லன் ஒருவந்தானே), அல்லது 3 மறுமையில் கொடுப்பான். (அப்படி மறுமையில் அவன் தனது அருட்கொடைகளை வாரி வாரி வழங்கும்போது அந்த அடியான் என்ன சொல்வான்: 'இப்படித்தெரிந்திருந்தால் உலகில் வாழ்கின்ற காலத்தில் நீ எனக்கு ஒன்றுமே கொடுத்திருக்க வேண்டாமே என்று கூறுவானாம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''பாவம் சம்பந்தப்படாத இரத்த பந்தத்தை துண்டிக்காத விஷயத்தில் எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அவனுக்கு மூன்றில் ஒன்றை கொடுக்காமலில்லை.

அவனின் பிரார்த்தனையை உடன் ஏற்றுக் கொள்கின்றான். அல்லது அதனுடைய நன்மையை மறுமைக்காக சேகரித்து வைக்கின்றான். அல்லது அப்பிரார்த்தனையைப் போன்று (அவனுக்கு நேரவிருந்த) ஒரு ஆபத்தை தடுத்து விடுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், அப்படியானால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோமே என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கேட்பதை விட அல்லாஹ் அதிகமாக பதிலளிக்க தயாராக இருக்கிறான்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: திர்மிதி)

உயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இரு கைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமையாக திருப்பி விட அவன் வெட்கப்படுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு)

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்’ என்று கூறுவீராக’ (அல்-குர்ஆன் 2:186)

ஆக பொட்டில் அறைந்தார்ப்போல் தெள்ளத்தெளிவாக ஒரு விஷயம் சாதாரண பாமரனுக்குக் கூட விளங்குமே; ''அல்லாஹ்விடம் கையேந்திவிட்டால் சத்தியமாக அதற்கு பலனுண்டு'' என்று! பிறகு எதற்காக தர்காவை நோக்கி ஓட வேண்டும்?!

அல்லாஹ் கூறுகிறான்: ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

''மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கின்றான்'' என்று அல்லாஹ் திருமறையில் கூறுவது எவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ''வழிகெட்டுப்போகும் ஆலிம்களுக்கு'' அது கண கச்சிதமாக பொருந்துகிறதே!

இவர்கள், திருமறை முழுக்க அல்லாஹ் அள்ளித்தெளித்திருக்கும் வாக்குறுதிகளை, அவனது சத்தியங்களை நம்பாதவர்கள். ஆனால் வெளியுலகில் நம்புவதுபோல் அப்பட்டமாக நடிப்பவர்கள். இவர்களிடமிருந்து நமது குடும்பத்தாரையும், ஊராரையும், உலகத்தாரையும் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு உண்மையான முஸ்லீமின் கடமையாகும் என்பதை மறக்க வேண்டாம். இல்லையென்றால் எதிர்கால சமுதாயம் பெயரளவு முஸ்லீம்களாக, ஈமானை இழந்து நிற்கும் அபாயத்திற்கு நாமே காரணமாகிவிடுவோம்.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

எம்.ஏ.முஹம்மது அலீ ,
 www.nidur.info/

Share this