Breaking News

'கேபிடல் கேட்' - அபுதாபியில் உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம்!

நிர்வாகி
0

துபாய் : இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது.


இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்த கட்டடத்தின் 12 மாடிகள் செங்குத்தாக உள்ளன.

அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள், படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த அளவில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்த கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு, 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this