Breaking News

சென்னையில் விரைவில் அறிமுகம் தட்கல் முறையில் பாஸ்போர்ட் 2 நாட்களில் கிடைக்கும் பாஸ்போர்ட் அதிகாரி தவுலத் தமீம் பேட்டி

நிர்வாகி
0
சென்னை, ஜுலை.1-
விண்ணப்பித்த 2 நாட்களில் `தட்கல்' முறையில் பாஸ்போர்ட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பாஸ்போர்ட் அதிகாரி தவுலத் தமீம் தெரிவித்தார்.

இது பற்றி, சென்னை பிராந்திய துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவுலத் தமீம் கூறியதாவது:-

தினசரி ஆயிரத்துக்கு மேல்...

சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களுக்கான பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த 2 மாதங்களிலும், தட்கல் விண்ணப்பங்களுக்கு குறைந்தது 5 நாட்களிலும் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.

இது தவிர விலாச மாற்றம், புதிதாக திருமணம் செய்தவர்கள் கணவன், மனைவி பெயரில் செய்துகொள்ளும் திருத்தங்கள் என 400-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கையாளப்படுகின்றன.

தனியார் பங்களிப்புடன் புதிய திட்டம்

புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு தேசிய பாஸ்போர்ட் சேவை திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. தனியார் (டி.சி.எஸ்.) பங்களிப்போடு இது அமல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக பெங்களூர், சண்டிகார் நகரங்களில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

விரைவில் சென்னையில்

சென்னையில் விரைவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் 3 இடங்களில் இதற்கான அலுவலகங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தட்கல் பாஸ்போர்ட்டுகள் 2 நாட்களிலும், சாதாரண பாஸ்போர்ட்டுகள் இப்போது வழங்குவதைவிட விரைவாகவும் வழங்கப்படும்.

சென்னையைத்தொடர்ந்து, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கும் இந்த திட்டம் கொண்டுவரப்படும்.

வரவேற்பு

தற்போது ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. விண்ணப்பிப்பவருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் குறிப்பிடும் தேதியில் தான் வரவேண்டும். அன்றைய தினத்தில் பணத்தைக்கட்டிவிட்டால் போதும். ஆன்லைன் விண்ணப்பம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், பாஸ்போர்ட் அலுவலகத்தில் முன்பிருந்ததைவிட கூட்டம் குறைந்துள்ளது. இந்த நிலையில், தேசிய பாஸ்போர்ட் சேவை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது இப்போது இருப்பதைவிட வேகமாக எல்லா வேலைகளும் நடைபெறும்.

இவ்வாறு கே.எஸ்.தவுலத் தமீம் கூறினார்.

Tags: பாஸ்போர்ட்

Share this